விரைவான விசாரணை மூலம் நீதி கிடைக்கச் செய்வதே சரியான நீதியாகும் : முன்னாள் நீதிபதி திரு நாகமுத்து

Madurai Minutes
0

பாரதிய நியாய சன்ஹிதா 2023 (இந்திய நீதிச் சட்டம்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 (இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம்), பாரதிய சாக்ஷயா அதினியம் 2023 (இந்திய சாட்சியச் சட்டம்) ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.


இந்த மூன்று குற்றவியல் சட்டப் பிரிவுகள் பற்றி  மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான பணியை மேற்கொள்ளும், ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பான பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (25.06.2024) நடைபெற்றது.


நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான திரு எஸ் நாகமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஊடகவியலாளர்களுக்குப் புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றிய சரியான புரிதல்கள் இருக்க வேண்டும் என்று அப்போது  அவர் கூறினார். இந்த சட்டங்கள் பற்றிய செய்திகள் வெளியிடும் பொழுது பொறுப்புடனும், பொதுநலத்துடனும், கண்ணியத்துடனும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பாலியல் வன்கொடுமையால்   பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை  செய்திகளில் வெளியிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்தினார்.


குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்தியை வெளியிடும்போது மேம்போக்கான தகவல்களை மட்டும் வைத்து செய்தி வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்க்க  வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.


 2024 ஜூன் 30-ம் தேதி இரவு வரை பதிவு செய்யப்படும் வழக்குகள் பழைய குற்றவியல் சட்டங்களின் கீழ் தான் பதிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். ஜூலை 1-ம் தேதி அதிகாலை முதல் பதிவு செய்யப்படும்  வழக்குகள் புதிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அவர் கூறினார். புதிய குற்றவியல் சட்டங்களில் காலத்திற்கேற்ப மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு தண்டனைகள் இல்லாமல் சமூகப் பணிகளைச் செய்யும் அம்சம் புதிய சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில குற்றங்களுக்கு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே சிறை தண்டனை விதிக்க புதிய சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


பழைய சட்டங்களின் கீழ் ஏற்கனவே உள்ள வழக்குகள் தேங்கி இருப்பதாகவும், அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அதற்கு சற்று கால அவகாசம் ஆகும் என்றும் அவர் கூறினார்.


தொடக்கத்தில் சில நடைமுறைச் சிரமங்கள் ஏற்பட்டாலும், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் காலனியாதிக்க கால குற்றவியல் சட்டங்களை, நமது நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாறு மாற்ற வேண்டிய தேவையை   அவர் எடுத்துரைத்தார். இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் காலத்தின் தேவை என்றும் அவர் கூறினார்.


இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை ஓய்வுபெற்ற நீதிபதி திரு நாகமுத்து எடுத்துரைத்தார்.


இந்நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, மத்திய மக்கள் தொடர்பு அலுவலக இயக்குநர் திருமதி லீனா மீனாட்சி, பத்திரிகை தகவல் அலுவலக இணை இயக்குநர் திரு பி அருண்குமார், துணை இயக்குநர் திருமதி ஜெ விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் கௌரி ரமேஷ், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் டீன் திரு பாலாஜி மற்றும் 200-க்கும் அதிகமான சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !