காலநிலைக்கு உகந்த சுகாதார பராமரிப்பு அமைப்புகளை நிறுவி செயல்படுத்துவதற்கான நேரம் இது: அபிகான் 2024

Madurai Minutes
0

“காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய உடல்நல பிரச்சனைகள் காரணமாக அதிகரித்து வரும் பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள திறன்மிக்கவையாக தங்களையே மாற்றிக் கொள்வதற்கு இந்தியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அவசரநிலை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.  காலநிலை மாற்றத்தின் சீரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாக உலகளவில் நமது நாடான இந்தியா இருக்கிறது.  இந்நாட்டில் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளுக்கு பெரிய அளவில் பங்களிப்பை செய்யும் ஐந்தாவது துறையாக இருக்கும் சுகாதார பராமரிப்புத் துறையானது, சுற்றுச்சூழல் மீது தனது செயல்பாடுகளின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பதற்கு பருவநிலைக்கு உகந்த சுகாதார பராமரிப்பு சாதனங்களையும், திட்டங்களையும் வேகமாக நிறுவுவதும், செயல்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.” என்று இந்தியாவில் சுகாதார பராமரிப்பு வழங்குநர்களது சங்கத்தின் (AHPI) – ன் நிறுவனர் டாக்டர். அலெக்ஸாண்டர் தாமஸ் கூறினார். 


தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை அவர் வழங்கினார். ஆற்றல் / எரிசக்தி, வரி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான செலவுகள் இந்நாட்டில் மருத்துவமனைகளை நிதிசார் நிலைக்கும்தன்மையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மீது இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்தியது.  அத்துடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் கட்டணத்தில் 60% - க்கும் குறைவாக தற்போது இருந்து வரும் காப்பீடு தொகையை திரும்ப வழங்கும் முறையை அரசு மற்றும் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புகள் சீரமைப்பதற்கான தேவையையும் இக்கருத்தரங்கு வலியுறுத்தியது.  


தரமான உடல்நல பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் வெளிப்படுத்தியிருக்கும் செயல் நேர்த்திக்காக பல்வேறு வகையினங்களின் கீழ் அனைத்து அளவுகளிலும் இயங்கி வரும் 15 மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு விருதுகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் வழங்கப்பட்டன.  சென்னையில் இயங்கி வரும் ரேலா மருத்துவமனையின் நிறுவனர் 6000-க்கும் அதிகமான கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை படைத்திருக்கின்ற, உலகளவில் புகழ்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரான புரொஃபசர் முகமது ரேலா அவர்களுக்கு அபிகான் – ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  


AHPI – ன் தலைமை இயக்குனர் டாக்டர். கிரிதர் கியானி ஆற்றிய தலைமை விருந்தினர் உரையில் அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் சுகாதார சேவைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற பொறுப்புறுதியுடன் செயல்படும் தற்போதைய அரசின் செயல்திட்டத்தை சுகாதார துறையும் ஏற்று அதற்கு வலுவான ஆதரவை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.  இந்நாட்டில் சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்பு 70% - க்கும் அதிகமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.  “தனியார் துறையின் தொடர்ச்சியான , தளர்வில்லாத முயற்சிகளின் காரணமாக, நம்நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டில் சுமார் 32 ஆண்டுகளாக இருந்த இந்தியர்களின் சராசரி வாழ்நாள் காலமானது தற்போது சுமார் 72 ஆண்டுகளாக அதிகரித்திருக்கிறது.  ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு இணையாக இதனை 80 ஆண்டுகளுக்கும் அதிகமாக உயர்த்துவதே சுகாதாரத்துறை செயற்பாட்டாளர்களின் நோக்கம்.” என்று தனது உரையில் அவர் கூறினார்.  அதிகரித்து வரும் செலவுகளின் காரணமாக தனியார் துறையைச் சேர்ந்த மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் நிதி ரீதியாக நிலைப்புத்தன்மை உள்ளவையாக தனியார் துறை மருத்துவமனைகள் மாறுவதற்கு அரசு  உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.  


இக்கருத்தரங்கில் கருத்தாக்கம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை தமிழ்நாடு AHPI – ன் தலைவரும் மற்றும் தேவதாஸ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் – ன் துணைத்தலைவருமான டாக்டர். சதீஷ் தேவதாஸ் வழங்கினார்.  பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கும் மற்றும் சமூகத்தின் நலவாழ்வுக்கு தரமான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதற்கும் சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை மற்றும் நிதி ரீதியான வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளை உறுதியாக மருத்துவமனைகள்  செயல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.  மின்சக்திக்கான கட்டண செலவுகளை குறைப்பது மற்றும் குறைவான விலை மற்றும் கட்டணத்தில் மருத்துவமனைகளை நிறுவுவதற்கான நிலத்தை வாங்கவும் மற்றும் நிதிஉதவியைப் பெறவும் தனியார் துறை மருத்துவமனைகளுக்கு உதவுவதில் அரசு முனைப்புடன் ஆதரவளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  இரண்டாம் நிலை நகரங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடையும் நோக்கத்தை எட்டவும் அரசின் இந்த ஆதரவு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  


சிம்ஸ் மருத்துவமனையின் துணை தலைவரும் அபிகான் 2024 நிகழ்வின் அமைப்பு குழு தலைவருமான திரு. ராஜு சிவசாமி வரவேற்புரையை வழங்கினார்.  உடல்நல பராமரிப்பு சேவையை வழங்குவதில் தொடர்புடைய செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன மற்றும் மின்சாரம், நகராட்சி வரி, ஊதியம் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி செலவு மற்றும் மருத்துவ சாதனங்கள் (இவை பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன) ஆகியவை இந்த செலவின் முக்கியமான கூறுகளாக இருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.  உயிரி மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு ஆகும் அதிக செலவும் தற்போது ஒரு முக்கிய கவலை அம்சமாக உருவெடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர், செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் உதவுகின்ற புத்தாக்க நடவடிக்கைகள் மீது மருத்துவமனைகள் தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்துவது இன்றைய காலகட்டத்தின் தேவை என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.  


இக்கருத்தரங்கு நிகழ்வின் இறுதியில் அபிகான் 2024 – ன் அமைப்புக் குழு செயலரும் மற்றும் ஆல்ஃபா கேர் ஹாஸ்பிட்டல்ஸ் – ன் நிறுவனர்  & நிர்வாக இயக்குனருமான திரு, J. அடெல், நன்றியுரை ஆற்றினார்.  சராசரியாக மருத்துவமனைகளின் வருவாயில் 60% - க்கும் அதிகமான தொகை காப்பீடு நிறுவனங்கள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் காப்பீடு திட்டங்களிலிருந்து தற்போது கிடைக்கிறது.  ஆனால், வழங்கப்படும் சிகிச்சை சேவைகளின் செலவில், இந்த காப்பீட்டு தொகை 60% என்ற அளவிலேயே இருக்கிறது என்று அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.  ஆகவே, திரும்ப வழங்கப்படும் தொகையை நிர்ணயிப்பதற்கு முன்னதாக ஒவ்வொரு அறுவைசிகிச்சை / மருத்துவ செயல்முறை அல்லது சேவை மற்றும் அமைவிடத்திற்கான செலவை அரசும் மற்றும் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புகளும் நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  


பல்வேறு வகையினங்களின் கீழ் அபிகான் 2024 கருத்தரங்கில் விருதுகள் வென்ற மருத்துவமனைகள்: எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை & ஆராய்ச்சி மையம், திருச்சி; ப்ரீத்தி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை; காவேரி மருத்துவமனை, கண்டோன்மென்ட் திருச்சி; அரவிந்த் கண் மருத்துவமனை, தேனி; தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலூர்; மீனாட்சி மருத்துவமனை, தஞ்சாவூர்; பாரத் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை, சென்னை; அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைகள், வானகரம், சென்னை; ஸ்ரீ ரெங்கா மருத்துவமனை, செங்கல்பட்டு; சங்கர நேத்ராலயா, சென்னை; மெட்வே மருத்துவமனைகள், சென்னை; டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை & முதியோர் இல்லம், நாகர்கோவில்; மணிபால் மருத்துவமனைகள், சேலம்; சங்கரா கண் மருத்துவமனை, கோவை, மற்றும் ஆர்த்தோ-ஒன் எலும்பியல் சிறப்பு மையம், கோயம்புத்தூர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !