வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்படுகிறது!

Madurai Minutes
0

 


வாரணாசியில் மகாகவி பாரதியார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தை’ புதுப்பிக்க பெருந்திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று வாரணாசி மாவட்ட ஆட்சியர் திரு எஸ் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.


காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரும் வாரணாசி மாவட்ட ஆட்சியர்  எஸ் ராஜலிங்கம், பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்த ‘சிவமடத்தில்’ மகாகவி பாரதியார் சுமார் 4 ஆண்டு காலங்கள் வாழ்ந்துள்ளார். அவர் இங்கு இருக்கும் போது, அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாகவே நான் கருதுகிறேன். அந்த வீட்டில் தற்போது மகாகவி பாரதியாரின் வழிவந்தவர்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களின் அனுமதியோடு சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம்”.


“மகாகவி பாரதியாரின் இலக்கியப் படைப்புகள் டிஜிட்டல் முறையில் நவீனமாக்கப்படும். குறிப்பாக அவர் வாழ்ந்த வீடு, இலக்கியப் படைப்புகள், சுதந்திரப் போராட்டத்தில் அவருடைய பங்கேற்பு, சமூக அவலங்களையும், அந்த காலகட்டத்தில் இருந்த சமுதாயப் பிரச்சினைகளையும் அவர் எவ்விதம் தனது கவிதைகள் மூலம் அணுகினார் போன்ற முக்கியத் தகவல்களை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் வடிவமாக்கப்படும். மேலும் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு ‘சிவமடத்தில்’ பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.


சிவமடம் – காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அனுமன் காட் எனும் பகுதியில் 1898 ஆம் ஆண்டு முதல் 1902 வரை பாரதியார் தனது அத்தை வீட்டில் வசித்தார். அப்போது அவருக்கு வயது பதினாறு. பள்ளிப் பருவத்தில் இருந்த பாரதி, இன்றும் இயங்கி வரும் ஜெய் நாரயண் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் பள்ளிக்குச் சென்று முறையாகப் பயிலவில்லை. ஆனால், இந்தி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளை வாரணாசியில் நன்கு கற்றுத்தேர்ந்தார். போஜ்பூரி, அவதி, வங்காளி முதலிய மொழிகளின் அறிமுகமும் அவருக்குக் கிடைத்தது. பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அன்னி பெசன்ட் நடத்திக்கொண்டிருந்த மத்திய இந்துக் கல்லூரியின் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று பாரதி தேர்ச்சிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காசியில் வாழ்ந்த காலத்தில் பண்டித மதன் மோகன் மாளவியா, அன்னி பெசன்ட், பால கங்காதர திலகர் முதலிய முக்கிய அரசியல் ஆளுமைகளைச் சந்தித்து அவர்களுடன் விவாதித்துப் பல்வேறு தெளிவுகளைப் பெற்றார். இது அவரது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.


பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் பின்னாளில் நிறுவப்பெற்றபோது, மாளவியாவின் பெரும் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்!” என்று பாடினார் பாரதி. தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும் காசியில் நடக்கும் நிகழ்வுகளைச் செய்தித்தாள்களின் வழியாக அவர் தொடர்ந்து அறிந்துகொண்டார் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.


அவர் காசியில் வாழ்ந்தபோது சில புகழ்பெற்ற தமிழ்க் கவிதைகளையும் இயற்றியதாக அறியப்படுகிறது. குறிப்பாக “வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்…” “அர்த்தப் பிரகாசம்” “பாருக்குள்ளே நல்ல நாடு” முதலிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.


தமிழர்கள் பல்வேறு தலைமுறைகளாக வசிக்கும் அனுமன் காட் பகுதியில் பாரதியாருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பாரதியார் காசியில் வாழ்ந்த வீடு சிவமடம் என்ற பெயரில் இன்றும் அறியப்படுகிறது. அவர் வாழ்ந்த வீட்டின் நினைவைப் போற்றும் வகையிலும் அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் அவ்வீட்டின் ஓர் அறையில் பாரதியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன்கூடிய நூலகத்தை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.


தற்போது அவ்வீட்டில் பாரதியின் அத்தை பேரனும் தங்கை மகனுமான கே.வி.கிருஷ்ணன் தனது மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். கே.வி. கிருஷ்ணன் அவர்கள் பாரதியைப் பற்றிய அறிமுக நூலை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !