வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளை களைய "பொது விசாரணை”

Madurai Minutes
0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 14.06.2023 அன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளை களைய "பொது விசாரணை” நடத்துவது குறித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி.அ.ச.குமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி.அ.ச.குமாரி அவர்கள் தெரிவித்ததாவது:-


தமிழ்நாடு மகளிர் ஆணையம் கடந்த ஓராண்டு காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில் தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி வருகிறது. பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்டத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளை களைய "பொது விசாரணை” நடத்த உள்ளது.


அந்த வகையில், பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சட்டத்தை நாடுவதில் பிரச்சனைகள் இருந்தால் இதில் கலந்து கொள்ளலாம்,  முதல் கட்டமாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான மதுரை. திண்டுக்கல், சிவகங்கை, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மனுக்கள் பெறப்படும். பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது அவர்களுக்கு உதவும் அமைப்புகளோ பொது விசாரணையில் கலந்து கொள்ளலாம். மனுவில் தங்களுக்கு நடந்த சம்பவத்தின் சுருக்கம், வழக்கு குற்ற எண், காவல் நிலையத்தின் பெயர், தற்போதைய நிலை, பாதிக்கப்பட்டவர் எதிர் நோக்கும் பிரச்சனை என்பது குறித்து 5 பக்கத்துக்கு மிகாமல் பாதிக்கப்பட்டவரோ அவர் குடும்பத்தினரோ எழுதலாம். தேவைப்பட்டால் ஆவணங்களை இணைக்கலாம். மனுவில் மனுதாரரின் தொலைபேசி அல்லது அலைபேசி எண், e mail id, விலாசம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும். இதேபோல், பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் அமைப்புகள் வாக்குமூலம் (affidavit) வடிவத்தில் மனுக்கள் அளிக்கலாம். மனுக்களை தலைவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம், கலச மஹால் முதல் தளம், சேப்பாக்கம், சென்னை – 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மனுக்களை விரைவு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, பொருத்தமான மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பதில் பெற்று பொது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பொது விசாரணை இடம், நாள் மற்றும் நேரம் மனுதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் மூலம் கடந்த ஓராண்டு காலமாக பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். குறிப்பாக, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்குகளுக்கும் உதவி செய்து வருகிறோம். தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின்படி பொது விசாரணை நடத்த வேண்டும். அதனடிப்படையில், இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில்  இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக நிலுவையில் இருக்கக்கூடிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும்.   


பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை கல்வியியல் துறையில் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கல்லூரியில் படிக்கும் 2 ஆயிரம் மாணவியர்கள் மூலம் மாரத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் பாதிக்கப்படும் பெண்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்த கல்லூரிகளில் விழிப்புணர்வு பாடம் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு பாடம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. வருகின்ற 23.06.2023-அன்று கோயம்புத்தூரிலும்,  27.06.2023-அன்று திருச்சியிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் பெண்கள் படிக்கும் கல்லூரிகளில் இந்த விழிப்புணர்வு பாடம் நடத்தப்படும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து வழக்கு தொடர்வதற்கு முன்வருவதில்லை. வழக்கு தொடர்ந்தால் தங்களுடைய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள்.  பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், புகார் அளிக்கும் பெண்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி.அ.ச.குமாரி அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பரமேஸ்வரி அவர்கள், அனைத்து பெண்கள் கூட்டமைப்பு பிரிதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !