மதுரை மாவட்டம் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ கட்டுமானப் பணிகள் குறித்து

Madurai Minutes
0

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்

சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள்
 

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி 

அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய் 

114 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை இன்று (23.12.2022) மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

தொடர்ந்து, மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் 2021-ஆம் ஆண்டு “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமைப்பதற்கு சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்தார்கள். அதன்படி, மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் தரைதளத்துடன் கூடிய 6 மாடி கட்டடப் பணிகளை துவக்கி வைத்தார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகமானது 2 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடப் பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. முகப்பு பகுதி கட்டடப் பணியானது 80 சதவிகித நிறைவு பெற்றுள்ளது. மற்ற அனைத்து பணிகளும் 90 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.


முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலக கட்டடத்தில் குழந்தைகளுக்கென்று தனிபிரிவு உள்ளது. இப்பிரிவு கட்டடப் பணியானது 75 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது.

 4-வது தளத்தில் ஆங்கில நூல்கள் வைக்கும் பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு கட்டடப் பணியானது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. 5-வது தளத்தில் அரியவகை நூல்கள் வைப்புப் பகுதியாகவும், ஐம்பெரும்காப்பியங்கள், பதினெண்கீழ்கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களை வைப்பதற்கான பகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு கட்டடப் பணியானது 75 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நூலகங்களில் வேலைக்கு செல்பவர்கள் விரைவாக செய்தித்தாளினை வாசித்துவிட்டு செல்வதற்கு ஏதுவாக சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலகத்தைப் போன்று முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்திலும் நாளிதழ்களை வேலைக்கு செல்பவர்கள் விரைவாக படித்து செல்வதற்கு ஏதுவாக போதுமான அளவில் மேஜைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் கட்டடப் பணிகளின் தரம் குறித்து கட்டடம் கட்டும்போதே அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. 



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் பாரம்பரிய பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் வழங்குவதற்கு அறிவுத்துள்ளார்கள். கப்பலூர் சுங்கச்சாவடி மற்றும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஆகிய சுங்கச்சாவடிகள் மீது தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. சுங்கச்சாவடிகள் நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்குவதற்கும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கச்சாவடி கட்டணங்களை குறைப்பதற்கும் தமிழக அரசின் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1337 இடங்கள் விபத்து அதிகம் நடக்கும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சாலை விபத்தினை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில், குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் சாலைபாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் அதிக விபத்து நடக்கும் பகுதியான 6 இடங்களில் விபத்தினை குறைப்பது குறித்து ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. 



மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் விபத்துக்களை குறைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக சாலை விபத்துக்கள் குறைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை விபத்திற்குள்ளாகும் நபர்களை காப்பாற்றுவதற்கு ”நம்மை காக்கும் 48 திட்டம்” என்ற திட்டத்தை அறிவித்தார்கள். இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்திற்குள்ளான பல உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்று மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி அவர்கள் (மதுரை வடக்கு), திரு.ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) அவர்கள் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !