“முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம்“ தொடக்க விழா தொடர்பான தயார் நிலை குறித்து ஆய்வு

Madurai Minutes
0

மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூபாய்  215 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம்“ கட்டடத்தின் தொடக்க விழா தொடர்பான தயார் நிலை குறித்து இன்று (05.07.2023) மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள்,  மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்  முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.


தொடர்ந்து,  மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் தமிழ்நாட்டின் தென்னகப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு மாபெரும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமைப்பதற்கு அறிவிப்பு செய்தார்கள். அதனடிப்படையில், ரூபாய் 114 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 11.01.2022-அன்று மாண்பமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நூலகம் அமைப்பதற்கான  கட்டுமானப் பணிகளை  துவக்கி வைத்தார்கள். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் ஒத்துழைப்போடு மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நூலகத்திற்கான கட்டுமானப் பணிகள் தரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது இந்நூலக கட்டுமானப் பணிகள் மட்டும் ரூபாய் 134 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புத்தகங்கள், மேஜை, நாற்காலி இருக்கைகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள், கணினிகள் என மொத்தம் ரூபாய் 215 கோடி மதிப்பீட்டில் நூலகத்திற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராக 5 முறை பொறுப்பேற்று மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்திய மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பதவி வகித்தபோது பேரறிஞர் அண்ணா அவர்களின்  நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள் சென்னையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்கள். தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி வருகின்ற 15.07.20223-அன்று முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்கள். அன்றைய தினம் பெருந்தலைவர் காமாராஜர் அவர்களின் பிறந்த தினம் என்பது கூடுதல் சிறப்பு.


முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலைஞர் அவர்கள் தென்பகுதி வளர்ச்சிக்கும், மதுரை மாவட்டத்திற்கும் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு பேசினேன். தென்பகுதி மக்கள் தங்களது வழக்குகளை தீர்த்துக்கொள்வதற்காக சென்னை உயர்நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல், பண விரயம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைப்பதற்கு கலைஞர்கள் அவர்கள் மிகவும் பாடுபட்டார். மதுரை உயர்நீதிமன்றத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை குறிப்பிட்டு பேசும்போது ”கலைஞரின் கொடை” என்று குறிப்பிடுவதற்கு பதிலாக உணர்ச்சி மிகுதியால் வேறொரு வார்த்தையை பயன்படுத்தி விட்டேன். நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக நான் பயன்படுத்திய வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 


மதுரை நகரில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கோரிப்பாளையம், மேலமடை (அப்போலோ சந்திப்பு) பகுதிகளில் 2  மேம்பாலங்கள் அமைப்பதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும். மெட்ரோ ரயில் திட்டத்தினால் கோரிப்பாளையம் மேம்பாலம் அமைப்பதில் எவ்வித பாதிப்பும் இல்லை. அதேபோல, நெல்பேட்டைப் பகுதியில் பாலம் அமைப்பதற்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நெல்பேட்டைப் பகுதியில் பாலம் அமைப்பதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது வியாபாரத் தளங்கள் அகற்றப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பலர் மனு அளித்தார்கள். இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ததின் அடிப்படையில் நெல்பேட்டைப் பகுதியில் பாலம் கட்டுவதற்கு மாற்றாக நெரிசல் ஏற்படும் பகுதிகளில் தேவைக்கேற்ப பொதுமக்கள், வியாபாரிகளின் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


முன்னதாக, மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் மதுரை முனிச்சாலை பகுதியில் பழைய கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் பிரபல பின்னணி பாடகர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு முழு உருவ சிலை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த நிகழ்வுகளின் போது, மாநகராட்சி மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் அவர்கள், பொதுப்பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்திர மோகன், இ.ஆ.ப., அவரகள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், பொது நூலகத்துறை இயக்குநர் திரு.இளம்பகவத் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி அவர்கள் (மதுரை வடக்கு), திரு.மு.பூமிநாதன் அவர்கள் (மதுரை தெற்கு), மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ர.சக்திவேல் அவர்கள், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் திரு.எஸ்.ரகுநாதன் அவர்கள், கண்காணிப்பு பொறியாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !