பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகள்

Madurai Minutes
0

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நேற்று (03.08.2023) பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 114 கற்போர் மையங்களைச் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள். தன்னார்வல ஆசிரியர்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை வழங்கினார்கள்.


இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது-


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், 15 வயதுக்கு மேற்பட்டு முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்கிடும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு, கடந்த 2022-23ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 4.80 இலட்சம் கற்போர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிட வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுத்தப்பட்டு 5.28 இலட்சம் பேர் அடிப்படை எழுத்தறிவுக் கல்வியைப் பெற்று பயனடைந்துள்ளனர். நடப்பு 2023-24ஆம் ஆண்டிலும், 4,80 இலட்சம் கற்போர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதிப்பங்களிப்பின் கீழ் ரூ.8.29 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


2023-24ஆம் நிதியாண்டிற்கான பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு மாவட்டத்திற்கு தலா 3 கற்போர் மையங்கள் என்ற வகையில் 38 மாவட்டங்களிலிருந்தும், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய 114 கற்போர் மையங்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ். கேடயம் மற்றும் பதக்கங்களை உள்ளடக்கிய மாநில எழுத்தறிவு விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.


முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இவ்விழா நடைபெறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அந்தவகையில் தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வித் துறை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்ற வயது வந்தோருக்கான கல்விச் செயல்பாட்டுகளில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் கற்போர் மையங்களைச் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள். தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் பிற அலுவலர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசினார்.


மேலும், சென்னையில் நடைபெற்று வரும் 7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் கோப்பை ஹாக்கி கோப்பை போட்டிகளை பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு மகிழ ஏதுவாக விளையாட்டுத் துறை சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் மின்னணு திரையில் நேரடி ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மதுரை சுந்தரம் பூங்காவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் இந்த நேரடி ஒளிபரப்பினை பார்வையிட்டார்கள்.


இவ்விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா ,இ.ஆ.ப., அவர்கள், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் முனைவர்.மு.பழனிசாமி அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.கார்த்திகா அவர்கள் உட்பட பள்ளிக் கல்வித்துறை சார்ந்த இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், 114 கற்போர் மையங்களைச் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள். தன்னார்வல ஆசிரியர்கள் மற்றும் பிற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !