மதுரை மத்திய சிறை வளாகத்தில் 25.14 லட்சம் ரூபாய்க்கு தீபாவளி விற்பனை

Madurai Minutes
0

மதுரை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சிறை செய்பொருள் விற்பனை  சிறை சந்தை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.


இந்த சிறை சந்தையில் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், கைத்தறி வேஷ்டி, மற்றும் கைலி வகைகள், இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட சோப்பு வகைகள் ஆகியவை சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு மிக குறைந்த விலையில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு உணவகமும் செயல்பட்டு வருகிறது.


தமிழக சிறைத்துறை டிஜிபி திரு. அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் இந்த தீபாவளி பண்டிகை மூலம் சிறைவாசிகள் சமுதாயத்துடன் இணைக்கும் வகையில் சிறை செய்பொருட்கள் அதிக அளவில் மக்களிடம் சென்று சேரும் வகையில் சென்னை சிறைத்துறை தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள சிறை சந்தையில் சிறப்பு தீபாவளி விற்பனையை துவக்கி வைத்தார்.


மேலும் அவரது வழிகாட்டுதலின் பேரில் அனைத்து மத்திய சிறைகளிலும் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கப்பட்டது.


மதுரை மத்திய சிறையில் கடந்த நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு விற்பனையை சிறைத்துறை மதுரை சரக டிஐஜி திரு. பழனி அவர்கள் தலைமையில் மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு. பரசுராமன் முன்னிலையில்  துவங்கப்பட்டது.


பொதுமக்களும் அதிக அளவில் தீபாவளிக்கு தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த சிறை சந்தையில் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


இதுகுறித்து மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு .பழனி அவர்கள் கூறியதாவது


தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைவாசிகளை சீர்திருத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். சிறைவாசிகள் சீர்திருத்தப் பணியில் தமிழ்நாடு அரசும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஏதாவது ஒரு சூழலில் தவறு செய்து சிறைக்கு வந்தபின் அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் தவறு புரியும் எண்ணம் அவர்கள் மனதில் மீண்டும் எழாமல்  நல்வழிப்படுத்தி அவர்கள் தண்டனை கால முடிந்தபின் மீண்டும் அவர்கள் சமுதாயத்துடன் இணைவதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் பேரில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறோம்.


சிறைவாசிகள் மீதான பொதுமக்களின் பார்வை மற்றும் புரிதலை தெளிவுபடுத்தும் வகையில் இந்த தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை தலைமையகத்தில் எங்களது துறை இயக்குனர் திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து மத்திய சிறைகளிலும் பொதுமக்களும் ஆர்வமுடன் சிறைவாசிகள் மூலம் தயார் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளனர் .


மதுரை மத்திய சிறையை பொருத்தவரை கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ஏழு லட்சமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை சுமார் ரூபாய் 25,14,300 விற்பனையாதன் மூலம் சிறைவாசிகள் பற்றிய புரிதல் அதிகரித்திருப்பது குறித்து தெரிய வருகிறது.


# இனிப்பு மற்றும் கார வகைகள் சுமார் 16 லட்சத்தி 72ஆயிரத்து 550 ரூபாய்க்கும்

# ரெடிமேட் ஆடை வகைகள் 3,08,600 ரூபாய்க்கும் 

# செக்கு எண்ணெய் வகைகள் 4,04,250  ரூபாய்க்கும் 


தீபாவளி அன்று ஆட்டுக்கறி விற்பனை ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் மற்ற பொருட்கள் சுமார் 6,900 ரூபாய்க்கும் ஆக மொத்தம் ரூபாய் 25,14,300 விற்பனை ஆனதன் மூலம் இது நிரூபணம் ஆகி உள்ளது. சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஏறத்தாழ நான்கு மடங்கு  விற்பனை அதிகரித்துள்ளது  சிறைவாசிகள் மீண்டும் சமுதாயத்துடன் இணைவதற்கான ஒரு இணைப்பு பாலமாக இந்த தீபாவளி சிறப்பு விற்பனையை நாங்கள் கருதுகிறோம்


தமிழக முதல்வர் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு. ரகுபதி அவர்கள் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் திரு. அம்ரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் பல்வேறு வகையான சிறை சீர்திருத்த பணிகளுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் தொழில் வர்த்தக நிறுவனங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. எங்களது சீர்திருத்தப் பணியில் உங்களது ஆதரவினை தொடர்ந்து எங்களுக்கு வழங்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !