விஷம் அருந்தியவரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை

Madurai Minutes
0

தஞ்சாவூர் மாநகரில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர் சிகிச்சை வழங்கும் மிகப்பெரிய மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளவயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. வேறொரு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்நபர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்தார். ஒரு மாத கால தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிசிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்த இந்நோயாளி இப்போது அவரது தினசரி பணி வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார்.”


“விஷம் அருந்திய இந்நபருக்கு மற்றொரு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கடுமையான சுவாச பிரச்சனை அந்நபருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து மீனாட்சி மருத்துவமனைக்கு இவர் அழைத்து வரப்பட்டிருந்தார். கடுமையான உயிர்வளிப் பற்றாக்குறை (குறைவான ஆக்ஸிஜன்) பிரச்சனை அந்நபருக்கு இருந்தது; சாத்தியமுள்ள மிக அதிக செயற்கை சுவாச செய்முறை  சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்ட போதிலும் அவரின் ஆக்ஸிஜன் அளவுகள் முன்னேற்றம் அடையவில்லை. அதைத்தொடர்ந்து அவருக்கு செய்யப்பட்ட மேலதிக ஆய்வுகளில், அவருக்கு ஏட்ரியல் இடைச்சுவர் பிழை (அவரது இருதயத்தின் இடைச்சுவரில் ஒரு துளை) இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு எமது இதயவியல் நிபுணரால் சரியான சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் கீழ் அவர் வைக்கப்பட்டார். அவரது சளிக்கோழை பரிசோதனையில், மருந்துக்கு எதிர்ப்புத்திறனை வெளிப்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இதை சரிசெய்ய உரிய அகல் நிரல் (broad-spectrum) நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு சிகிச்சை தொடங்கப்பட்டது” என்று மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் நச்சியல் துறையின் பொறுப்பதிகாரியும், சிறப்பு நிபுணருமான டாக்டர். செந்தில்குமார் தெரிவித்தார்.


“குப்புற படுத்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்நோயாளிக்கு நான்கு நாட்களுக்கு செயற்கை சுவாச சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இவரது இதய செயல்பாட்டு நிலையை தினசரி கண்காணித்தோம்; அத்துடன் இயன்முறை சிகிச்சையும், போதுமான அளவிற்கு ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவும் இவருக்கு வழங்கப்பட்டன. சில நாட்களுக்கு பிறகு அவர் படிப்படியாக குணம் பெற்ற நிலையில், செயற்கை சுவாச சாதனத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. உடல்நிலை ஓரளவிற்கு தேறியவுடன் இவரது மனநிலையை எமது மருத்துவமனையின் உளவியல் மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்தனர். தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இவர் விஷமருந்தியதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்த மருத்துவர்கள், இவருக்கு மறுவாழ்வு சிகிச்சையையும் உரிய ஆலோசனைகளையும் வழங்கினர், இயல்பு நிலைக்கு இவர் திரும்ப வருவதற்கு இது பெரிதும் உதவியது. 


மூளைச்சேதம் ஏற்படாத நிலையில் OPC நச்சேற்ற நோயாளிகள் எமது மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்களானால், 100% அவர்களை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு அவர்களை திரும்ப கொண்டுவரும் உத்தரவாதத்தை எங்களால் வழங்க முடியும். OPC நச்சேற்றம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு, அவர்களின் தசைகளில் செயலிழப்பு ஏற்படுவதற்கு முன்பு நுரையீரல் சுவாச செயல்பாட்டிற்கு ஆதரவளிப்பதே அந்நேரத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டிய சிகிச்சை தேவையாகும். அருந்தப்பட்ட விஷத்தின் அளவு மற்றும் செறிவின் அடிப்படையில் இது மாறுபடக்கூடும்,” என்று மயக்க மருந்தியல் மற்றும் உயிர்காப்பு தீவிர சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டர். அரிமாணிக்கம் விளக்கமளித்தார். 


சரியான சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்ட இந்நோயாளி, துணை மருத்துவர் கண்காணிப்பாளர் டாக்டர். பிரவின், உளவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஐஸ்வர்யா, சுவாசவியல் மருத்துவ நிபுணர் டாக்டர். அருண், இரத்த வங்கியின் துறைத்தலைவர் டாக்டர். ஆரதி மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர் டாக்டர். இதயச்சந்திரன் ஆகியோரது சிகிச்சை மற்றும் கண்காணிப்பின் கீழும் வைக்கப்பட்டிருந்தார். 


மீனாட்சி மருத்துவமனை – தஞ்சாவூர், விஷம் அருந்திய 1000 – க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை சிகிச்சையளித்திருக்கிறது. 2023 ஜனவரி மாதத்திற்கு பிறகு 160 – க்கும் அதிகமான நபர்கள் விஷ முறிவிற்கான சிகிச்சையை இங்கு பெற்றிருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள நபர்களுக்கு 24/7 அடிப்படையில் விரிவான சிகிச்சைகளின் தொகுப்போடு பல்வேறு துறைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவை கொண்டிருக்கும் ஒரே மருத்துவமனையாக மீனாட்சி மருத்துவமனை திகழ்கிறது. மேலும், டெல்டா பிராந்தியத்தில் 24 மணி நேரமும் செயல்படும் திறன்மிக்க மருத்துவர்கள் குழுவுடன் நச்சு பாதிப்பிற்கான விரிவான சிகிச்சையை வழங்கும் ஒரே மருத்துவமனை என்ற பெருமையினையும் இது கொண்டிருக்கிறது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !