புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியில் நான்கு புத்தம் புதிய தொடர்கள்

Madurai Minutes
0

பொதிகை தொலைக்காட்சி, 19ந்தேதி முதல் டிடி தமிழ் என்ற பெயரில் புதுப்பொலிவுடன் எச்டி தொழில்நுட்பத்தின் ஒளிபரப்புடன் மக்களுக்கு சேவை வழங்கி வருகிறது. டிடி தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை வெள்ளிக்கிழமையன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


புதிய எண்ணங்கள், புதிய வண்ணங்கள் என்ற கருப்பொருளுடன் சேவையைத் தொடங்கியுள்ள டிடி தமிழ், மணிக்கு மணி செய்திகள், நடப்பு நிகழ்வுகள் பற்றிய சுவையான விவாதங்கள், தினந்தோறும் திரைப்படங்கள், ஒளியும், ஒலியும், புத்தம் புதிய தொலைக்காட்சித் தொடர்கள் என ரசிகர்களைக் கவரும் பல அம்சங்களுடன் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.


தாயம்மா குடும்பத்தார், சக்தி ஐபிஎஸ், பட்ஜெட் குடும்பம்,  மகாகவி பாரதி ஆகிய நான்கு புதிய தொடர்கள் டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றன.


ராடான் நிறுவனம் தயாரிக்கும் தாயம்மா குடும்பத்தார் தொடரில் ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்கிறார். குடும்பத்தின் மீது அன்பையும், பாசத்தையும் பொழியும் தாயம்மா அதே நேரம் இளநீரைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்படும் பிரச்சினைகளை வைத்துப் பின்னப்பட்ட கதையில், தாயம்மாவின் கணவராக வேணு அரவிந்த், பூவிலங்கு மோகன், ரேகா, மகாலட்சுமி உள்ளிடோர் நடிக்கின்றனர்.

பட்ஜெட் குடும்பம் ஒரு நடுத்தரப் பிரிவு குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்படும் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் தொடராகும். பெற்றோரின் விருப்பத்துக்கு மாறாக, காதலித்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு தம்பதி சந்திக்கும் பிரச்சினைகளை வைத்து கதை பின்னப்பட்டு இருக்கிறது. சுஷ்மா நாயர், குறிஞ்சிநாதன் கதையின் நாயகி, நாயகர்களாக வருகின்றனர். எஸ் என் சக்திவேல் இயக்குகிறார். பத்மாவதியின் திரைக்கதைக்கு, யூசுப் வசனம் எழுதுகிறார்.

சக்தி ஐபிஎஸ் பொள்ளாச்சியைச்  சேர்ந்த ஒரு குடும்பத்தின் அன்றாட பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொடராகும். இதில் நளபாகம்  நடராஜனாக தலைவாசல் விஜய், அவரது மனைவி தாரணியாக நர்ஸ் வேடத்தில் சுகன்யா நடித்துள்ளனர். இவர்களது முதல் மகள் சக்தி என்னும் போலீஸ் அதிகாரியாக ஸ்வாதிகா, வழக்கறிஞராக இரண்டாவது மகள் ஜனனி ஆகியோர் நடிக்கின்றனர்.

மகாகவி பாரதியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும்  26 அத்தியாயங்களைக் கொண்ட தொடரை  கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரிக்கிறது. இசைக்கவி ரமணன் பாரதியார் வேடத்திலும், தர்மா செல்லம்மாள் வேடத்திலும் நடிக்கின்றனர். மேலும் ஒய்.ஜி. மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி போன்றோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கேன்ஸ் விருது பெற்ற லதா கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்குகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி மேற்பார்வையில் தயாராகும் இந்தத் தொடரில் பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி பாடல்களைப் பாடியுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !