புகைபிடிப்போரில் 80% நபர்கள் மருத்துவ ஆதரவுடன் விடுபட முடியும் : மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிபுணர்கள்

Madurai Minutes
0

புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு மருத்துவ நிபுணர்களது ஆலோசனையை தேடுவது கண்டிப்பாக அவசியம்.  கவுன்சிலிங், மருந்துகள் மற்றும் ஆதரவு குழுக்கள் ஆகிய வழிமுறைகளை உள்ளடக்கிய முறைசார்ந்த செயல்திட்டங்களில் பங்கேற்பவர்களில் ஏறக்குறைய 80% புகைபிடிக்கும் வழக்கத்தை விட்டுவிடுவதில் வெற்றி காண்கின்றனர்.  இதற்கு மாறாக, நிக்கோடினுக்கு (புகைபிடித்தல்) அடிமைப்படுதலிலிருந்து தாங்களாகவே  விடுபட முயற்சிக்கின்ற நபர்களுள் 20% மட்டுமே அம்முயற்சியில் வெற்றி பெறுகின்றனர் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் வலியுறுத்தினர்.  

 

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நுரையீரலியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். G. வேல்குமார் பேசுகையில், கஞ்சா (மரிஜுவானா) அல்லது கோகைன் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுதலோடு ஒப்பிடுகையில், நிக்கோடின் (புகைபிடித்தல்) அடிமைத்தனம் என்பது, விடுபடுவதற்கு மிகக் கடுமையானவைகளுள்  ஒன்றாக கருதப்படுகிறது என்று கூறினார். புகைபிடிப்பதை வெற்றிகரமாக கைவிடுவதற்கு புகைபிடிப்பவர்களுக்கு உதவ உளவியல், மருத்துவம் மற்றும் சமூக நடவடிக்கைகளின் ஒருங்கிணைந்த சரியான சிகிச்சை அவசியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். 

 

“புகைபிடிப்பவர்களுக்கு  கவுன்சிலிங் சேவை மற்றும் நிக்கோடின் மாற்று சிகிச்சை முறை ஆகியவற்றை வழங்குவதில் பல்வேறு குறைகளை உள்ளடக்கிய ஒரு மருத்துவக்குழு உதவக்கூடும்.  எங்களது சொந்த அனுபவத்தில், இந்த மிக ஆபத்தான பழக்கத்தை சமாளித்து வெல்வதில் புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான செயல்திட்டங்களில் பங்கேற்பவர்களில் 80% - க்கும் அதிகமான நபர்கள் வெற்றி காண்பதை நாங்கள் பார்க்கிறோம்.  கவுன்சிலிங்  சேவையில், புகைபிடிப்பவர்கள் புகைக்கும் 2.5 அங்குல சிகரெட்டில் 4000-க்கும் அதிகமான வேதிப்பொருட்கள் இருப்பதையும் மற்றும் அவைகளுள் சுமார் 50% புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.  சிகரெட் மற்றும் பீடியில் வீட்டை தூய்மைப்படுத்துவதற்கான திரவங்களில் இடம்பெறும் அமோனியா, எலியைக் கொல்வதற்கான நச்சு, வாகன புகை வெளியீடு சாதனத்திலிருந்து வரும் கார்பன் மோனாக்ஸைடு, ஆஸ்பால்ட் அல்லது சாலையை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பெட்ரோலிய துணைப்பொருளான தார் மற்றும் நிக்கோட்டின் ஆகியவை இவற்றில் இடம்பெறுகின்றன என்று நாங்கள் எடுத்துச் சொல்கிறோம். புகைப்பிடிக்கும் (நிக்கோட்டின்) அளவை படிப்படியாக குறைப்பது மீது கவனம் செலுத்தும் இந்த சிகிச்சை முறை, போதை பழக்கத்தை நிறுத்தி விடுவதனால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதன் மீதான தீவிர ஏக்கம் / தேடல் ஆகியவற்றை எதிர்கொள்ளாமலேயே புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து நோயாளிகள் விடுபடுவதற்கு உதவுகிறது.” என்று டாக்டர். G. வேல்குமார் விளக்கமளித்தார்.

 

புகைபிடிக்கும் பழக்கத்தை திறம்பட நிறுத்துவதற்கு பெரும்பாலான நேரங்களில், பெரும்பாலான நபர்களுக்கு மருத்துவ ஆதரவு தேவைப்படுகிறது என்று டாக்டர். G. வேல்குமார் குறிப்பிட்டார். “இன்றைக்கு நிக்கோடின் சிவிங்கம்கள் எளிதாக  கிடைக்கின்றன.  ஆனால், புகைப்பிடிப்பதை விட்டுவிடுவதென்பது, வெறுமனே சுயமருத்துவம் செய்துகொள்ளும் ஒரு விஷயமல்ல; ஒரு சிகிச்சை நெறிமுறையை தவறாமல் கடைப்பிடிப்பது இதில் உள்ளடங்கும்.  முக்கியமாக, புகைபிடிக்கத் தூண்டிவிடும் அம்சங்களையும், புகைபிடிப்பதை நிறுத்திவிடுவதனால் ஏற்படும் அறிகுறிகளையும் சமாளிக்க உளவியல் ரீதியிலான ஆலோசனை மற்றும் வழிகாட்டலை பெறுவதும் அவசியம்.  முக்கியமாக, புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு உதவுகின்ற ஆதரவு குழுக்களில் அவர்கள் இடம்பெறுவதும் முக்கியம்.” என்று அவர் குறிப்பிட்டார். 

 

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். K.S. கிருஷ்ண குமார் பேசுகையில், “புகைபிடிப்பதோடு தொடர்புடைய நோய்கள் மற்றும் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளின் வெற்றி விகிதத்தை மருத்துவ அறிவியலில் சமீப காலங்களில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள் அதிகரித்திருக்கின்றன; ஆனால், ஆரம்ப நிலையிலேயே இவைகள் கண்டறியப்படுவது அவசியம்.  எடுத்துக்காட்டாக, புற்றுநோயானது தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உறுதி செய்யப்படுமானால், சிகிச்சையின் மூலம் அதனை குணப்படுத்த முடியும். எனவே புகைபிடிக்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை செய்வது முக்கியம்.  வழக்கமாக இந்த சோதனை நோக்கத்திற்காக குறைவான மருந்து அளவு கொண்ட சிடி ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது.” என்று கூறினார். 

 

அவர் மேலும் பேசுகையில், உலகில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான புகைபிடிக்கும் நபர்கள் தற்போது இருக்கின்றனர்.  அவர்களுள் சுமார் 12%, அதாவது, 150 மில்லியன் நபர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். குட்கா மற்றும் பான்மசாலா போன்றவற்றை உட்கொள்ளும் நபர்களையும் இப்பட்டியலில் நாம் சேர்ப்போமானால், இந்த எண்ணிக்கையானது, ஏறக்குறைய 267 மில்லியன் என அதிகரிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகிறது.  உலகளவில், புகையிலை பயன்பாடு என்பது, மிகப்பெரிய பொது சுகாதார அச்சுறுத்தல்களுள் ஒன்றாக இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 8 மில்லியன் நபர்கள் புகைபிடிப்பதோடு தொடர்புடைய நோய்களினால் இறக்கின்றனர்.  இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்களை புகைபிடிக்கும் பழக்கம் கொல்கிறது.  இந்நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் 50% - க்கும் அதிகமானவை, புற்றுநோய் மற்றும் இதயநோய்களின் காரணமாக நிகழ்பவை.  இந்த நோய்கள் ஏற்படுவதற்கு நான்காவது முன்னணி காரணமாக இது இருக்கிறது.  

 

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ புற்றுநோயியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருடனான டாக்டர். கிருஷ்ணகுமார் ரத்னம் கூறியதாவது: “கடந்த 20 ஆண்டுகளில் புகையிலைப் பயன்பாட்டில் உலகளவில் சற்றே சரிவு காணப்பட்டிருக்கிறது.  2000 ஆம் ஆண்டின் போது, 3 நபர்களில் ஒருவர் என்ற அளவோடு ஒப்பிடுகையில், 2022-ல் வயதுவந்த 5 நபர்களில் ஒருவர் புகைபிடிக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய  அறிக்கையின் மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.  இந்தியாவில் கூட புகைபிடிக்கும் நபர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து வருகிறது.  புகையிலை தயாரிப்புகள் கிடைக்கும் நிலை அல்லது அதனைப் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டங்களும், விதிமுறைகளுமே இதற்கு காரணம் என்று கூறலாம்.  புகைபிடிக்கும் நபர்களிடமிருந்து அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் புகையை சுவாசிப்பதனால் ஏற்படும் அங்கீகரிக்கப்பட்ட உடல்நல கேடுகளின் காரணமாக, பொது இடங்களில் புகைபிடிப்பது மீது ஒட்டுமொத்த தடையை இந்தியா விதித்து அமல்படுத்தியிருக்கிறது.  சிகரெட்டுகள் அல்லது பிற புகையிலை தயாரிப்புகள் மீது விளம்பரம் செய்வதையும் சட்டவிரோதமானதாக இந்தியா அறிவித்திருக்கிறது.  மேலும், 21 வயதுக்கு கீழுள்ள நபருக்கு சிகரெட்டுகளை அல்லது வேறு பிற புகையிலைத் தயாரிப்புகளை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது.  அத்துடன், எந்தவொரு பள்ளி அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் இருக்கிறது.  திரைப்படங்கள் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப்பிடிக்கும் நபர்களை காட்டும்போது, புகைபிடிப்பதனால் வரும் தீங்குகளை குறிப்பிடுகின்ற செய்தி இடம்பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமல்படுத்தப்படுகிறது.  புகையிலையினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்களாக இருக்கும் இளவயது நபர்கள் மத்தியில் இந்த விதிமுறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கூறலாம்.”  

 

இந்த  செய்தியாளர்  சந்திப்பு நிகழ்வின்போது மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் உடனிருந்தார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !