தி.மு.க. நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூலம் வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

Madurai Minutes
0


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் ஈரோடு இடையன்காட்டு வலசு, தெப்பக்குளம், மகாஜன உயர்நிலை பள்ளிக்கூட பகுதி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார்

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 517 வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்தது. தற்போது 3-ல் ஒரு பங்கு ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில் 49 தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டு உள்ளன. தி.மு.க. நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூலம் வெளியிட்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

கியாஸ் சிலிண்டர் மானியம்

தி.மு.க. அளித்த வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்கள் அப்படியென்றால் 22 மாதத்திற்கு ரூ.22 ஆயிரம் தந்திருக்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்பதாக தெரிவித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் 1 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மானியம் கொடுத்து இருந்தால் இதுவரை ரூ.2 ஆயிரத்து 200 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எனவே உங்களிடம் வாக்கு கேட்க வரும் அமைச்சர்களிடம் ரூ.24 ஆயிரத்து 200 கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு

இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து தமிழக அரசியலை 1950-60 காலகட்டத்துக்கு தி.மு.க. எடுத்து சென்றுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடக்கவில்லை. இங்கு முகாமிட்டு உள்ள 30 அமைச்சர்களும், வருகிற 27-ந் தேதி வரை மட்டுமே வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள். அதன்பிறகு, அவர்கள் ஓடி விடுவார்கள். ஆனால், அ.தி.மு.க. சார்பில் 2 முறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் எளிமையோடு உங்களை சுற்றி வருவார். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றால் சென்னையில்தான் இருப்பார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.1,200 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 22 மாத கால தி.மு.க. ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நிர்வாகம் சீர்கேடு அடைந்துள்ளது. இப்படி தடம்புரண்டு செல்லும் ஆட்சியை சரிசெய்ய, ஒரு பெரிய மணியாக இந்த இடைத்தேர்தல் முடிவு இருக்க வேண்டும்.

வாக்குறுதிகள்

கொப்பரை தேங்காய், தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 5 ஆண்டுகளில் 3½ லட்சம் பேருக்கு அரசு வேலையும், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மின் கட்டணம் 80 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ஆட்சி மாறாது. ஆனால் அவர் வெற்றி பெற்று கோட்டைக்கு சென்றால்தான் தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேறும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !