மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு.

Madurai Minutes
0
மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று  (26.04.2023) அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் இடம் ஆகியவற்றில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள். 

அதன்பின்பு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை சித்திரைப் பெருவிழா தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்ளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மதுரை மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான சித்திரைப் பெருவிழா  அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 23.04.2023-அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இப்பெருவிழா நிகழ்வுகளில் திக்விஜயம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் ஆகிய நிகழ்வின் போது அதிகளவு பக்தர்கள் வருகை தருவார்கள். திருக்கல்யாண நிகழ்விற்கு 12ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். தேரோட்டம் செல்லும் பாதைகள் மற்றும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு போதிய அளவு மருத்துவ முகாம்கள் அமைத்தல், சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணித்தல். மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கைகள், நகரை தூய்மையாகப் பராமரித்து குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலை தவிர்த்திடும் விதமாக தமுக்கம் மைதானம், அருகேயுள்ள பூங்கா, கல்லூரி மற்றும் பொழுதுபோக்கு இடங்களை இரவில் திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளோம். பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வரும் பக்தர்களுக்கு அனுமதி, மாட்டுவண்டிகளை நிறுத்த வழிவகை செய்யப்படும். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுரை சித்திரைப் பெருவிழாவை சீரோடும், சிறப்போடும் சிறப்பாக நடத்த  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின்  1058 திருக்கோவில்களில் 1416 திருக்குளங்களுக்கு பராமரித்து வருகிறோம்,  இப்போதுவரை 87 குளங்களை மராமத்து பணிகளை செய்துள்ளோம், கோவில் திருக்குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழனி, திருப்பரங்குன்றம், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய 4 கோவில்களுக்கு விரைவில் ரோப்கார் ஏற்பாடு செய்யப்படும் பணிகள் நடைபெறுகிறது என மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர்  திரு.க.வி.முரளிதரன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாநகர காவல் ஆணையாளர் திரு.நரேந்திரன் நாயர், இ.கா.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  திரு.ஆர்.சிவபிரசாத், இ.கா.ப., அவர்கள், மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி (மதுரை வடக்கு) அவர்கள், திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) அவர்கள், திரு.ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன் ஜீத் சிங், இ.ஆ.ப. அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மதுரை துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !