மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த ஆலோனைக்கூட்டம்

Madurai Minutes
0

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (28.06.2023) அரசு முதன்மைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை குறித்த  ஆலோனைக்கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:- 


மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான விரிவான வரைவு திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  இன்று மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் விரிவான அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் 32 கிலோ மீட்டர் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 5 கி.மி சுரங்கபாதை ரயில் வழித்தடம், 27 கி.மீ மேல்மட்ட ரயில் வழித்தடம் ஆகும். 


அதேபோல, 27 ரயில் நிறுத்தங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 3 ரயில் நிறுத்தங்கள் சுரங்கபாதை ரயில் நிறுத்தங்களாக அமையும். அவை நகரின் மையப்பகுதிகளான மதுரை ரயில் நிலையம் - பெரியார் பேருந்து நிலையம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் அமையும். அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதியில் ஆவணி மூல வீதி அல்லது மாசி வீதி பகுதியில் மெட்ரோ ரயில் நிறுத்தம் அமைப்பது என திட்டமிட்டுள்ளோம். மெட்ரோ ரயில் வழிப்பாதை அமைக்கும் பணிகளால் கோவில் தேரோட்டத்தில் பாதிப்பு இருக்காது. 


மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையே இதுவரையிலும் விரைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை ஆகும். கோவை மதுரை ஆகிய இரு மெட்ரோ திட்ட அறிக்கைகளும் வரும் ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு போதிய நிதி ஆதாரம் பெறப்பட்டு திட்டப்பணிகள் தொடங்கும் என அரசு முதன்மைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக, அரசு முதன்மைச் செயலாளர் / சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., அவர்கள் மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தொடர்பாக அருள்மிகு மினாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், தல்லாகுளம் பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.


இந்த கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள்,  மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள்,  மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இயக்குநர் த.அர்ஜீனன் அவர்கள், முதன்மைப் பொது மேலாளர்கள் (கட்டிடக்கலை) திருமதி.ரேகா பிரகாஷ் அவர்கள், திரு.லிவிங்ஸ்டன் அவர்கள்,  உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !