மதுரை ஆவின் வளாகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு

Madurai Minutes
0

மதுரையில் செயல்பட்டு வரும் ஆவின் ஐஸ்கிரீம் தொழிற்சாலை மற்றும் பால் உற்பத்தி மையம் ஆகியவற்றின் செயல்பாடு குறித்து  (13.06.2023) மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆவின் வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 154 பயனாளிகளுக்கு ரூ. 55,37,780/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தொடர்ந்து, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய சிறந்த பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், பால் பொருட்கள் தரமாகவும் குறைந்த விலையிலும் பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம். தமிழகத்தில் தற்போது ஆவின் மூலம் நாளொன்றிற்கு 40 இலட்சம் முதல் 45 இலட்சம் லிட்டர் வரையில் பால் கையாளப்படுகிறது. இதனை 70 இலட்சம் லிட்டர் வரையில் உயர்த்துவதற்கு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அதன்படி, தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின் கீழ்  செயல்பட்டு வரும் உற்பத்தி மையங்களின் செயல்பாடு மற்றும் உட்கட்டமைப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய  அளவிலும், தமிழ்நாடு மாநில அளவிலும் தற்போது பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டு பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் கறவை மாடுகள் வாங்குவதற்கும், பராமரிப்பதற்கும் கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


ஆவின் நிறுவனம் பால் உற்பத்தி மட்டுமல்லாது பாலில் இருந்து கிடைக்கப்பெறும் பொருட்களான தயிர், மோர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. நடப்பாண்டில் இந்த பால் பொருட்களின் உற்பத்தி 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நுகர்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இப்பொருட்களின் தேவையும் நுகர்வோர்களிடையே அதிகரித்துள்ளது. சில இடங்களில் பால் பொருட்கள் தாமதமாக நுகர்வோர்களுக்கு சென்று சேருவதாக செய்திகள் உள்ளன. ஆவின் நிறுவனத்தில் தேவைக்கேற்ப மனித ஆற்றலை அதிகரித்து உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். 

தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் உற்பத்தி விவகாரம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்தியாவில் மாநிலங்களுக்குள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒருவொருக்கு ஒருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல் பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கை மரபு மீறிய செயல் என சுட்டிக்காட்டி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்கள். பால் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நிகழ்வுகளின் போது, ஆவின் நிர்வாக இயக்குநர் மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி (மதுரை வடக்கு) அவர்கள், திரு.ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) அவர்கள், திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) அவர்கள், மதுரை ஆவின் பொது மேலாளர் திருமதி.சாந்தி அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !