தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Madurai Minutes
0

தனித்தமிழ் இயக்கத்திற்கு பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154-வது பிறந்தநாள்  விழாவை முன்னிட்டு இன்று (06.07.2023) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


திரு.வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் 06.07.1870-அன்று பிறந்தார். இளமை முதலே இலக்கண இலக்கியங்களையும், ஆங்கிலம் மற்றும் தத்துவ நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்தவர். மேலும், சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கப்பட்டபோது அதை மீண்டும் சேர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழுக்குப் பெருமை சேர்த்த பரிதிமாற் கலைஞர், தமது 33-ஆம் வயதில் 1903-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 2-ஆம் நாள் இயற்கை எய்தினார். 


அருந்தமிழ் மொழியைச் செம்மொழி என நிலைநாட்ட பாடுபட்ட தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக மதுரை மாவட்டம் விளாச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம், நினைவில்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அன்னாரது பிறந்த நாளான  ஜ_லை  6-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


இந்த நிகழ்வின்போது, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள், மதுரை வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சாலினி அவர்கள்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.இ.சாலி தளபதி  அவர்கள், சேடப்பட்டி திரு.மு.மணிமாறன் அவர்கள்  உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !