முக்கிய சந்தைகளையும் உலகளாவிய ஒத்துழைப்புகளையும் ஈர்க்கும் இந்தியாவின் விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்கள்

Madurai Minutes
0

புவி சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் இருந்து பூமியின் தன்மையைக் கண்காணிப்பது வரை, விண்வெளித் துறையில் உள்ள இந்திய புத்தொழில் நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட்-அப்கள்) உலகளாவிய வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.  இதன் மூலம் பெரிய சாதனைகளை அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் முக்கிய சந்தை வாய்ப்புகளை இந்திய விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்கள் பெற்று வருகின்றன.


பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுவது தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தொழில்துறை வல்லுநர்கள் நம்புகின்றனர்.


2020 ஆம் ஆண்டில் இந்தியா தமது விண்வெளித் துறையைத் தனியாருக்கு அனுமதித்ததிலிருந்து, ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குதல், விண்வெளி வீரர்களுநக்குப் பயிற்சி வசதிகளை அமைத்தல் மற்றும் விண்வெளி சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல் போன்ற பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன.


"இது ஒரு நல்ல தொடக்கமாகும். ஏனென்றால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி அல்லது பாதுகாப்புத் தொடர்பான எந்தவொரு தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா பிறருக்கு வழங்குவது கேள்விப்படாத ஒன்றாகும்.  அது ஒரு தடையாக இருந்தது. இப்போது, வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து நாம் பேசி வருகிறோம்" என்று மானஸ்து ஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் துஷார் ஜாதவ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


மும்பையைச் சேர்ந்த மானஸ்து நிறுவனம், செயற்கைக்கோள்களுக்கான பசுமை உந்துவிசை அமைப்புகளை உருவாக்கி வருகிறது. மேலும் வரும் ஆண்டில் தமது தொழில்நுட்பத்தை சோதித்துப் பார்க்க முடியும் என்று இந்த நிறுவனம் கருதுகிறது.  செயற்கைக் கோள்களுக்கு சுற்றுவட்டப்பாதையில் எரிபொருள் நிரப்பும் சேவையை வழங்குவதற்காக விண்வெளியில் ஒரு எரிபொருள் நிலையத்தையும் இது வடிவமைத்து வருகிறது.  எரிபொருள் நிரப்பாவிட்டால் அது  தீர்ந்த பிறகு செயற்கைக் கோள்களின் செயல்பாடு கைவிடப்பட்டு விடும்.


இந்திய விண்வெளி சங்கத்தின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பட் (ஓய்வு) கூறுகையில், "விண்வெளித் துறையில் பல தொழில்நுட்பங்கள் இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களாக உள்ளன.  இப்போது செயல்முறைகள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.” என்றார்.


கடந்த ஆண்டு நவம்பரில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தமது விக்ரம்-எஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் தனியார் விண்வெளி ராக்கெட்  வரலாற்றில் தமது பெயரைப் பதிவு செய்தது.


இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இப்போது சிறிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்காக விக்ரம் என்ற தொடர் வரிசைப் பெயர்களில் மூன்று ராக்கெட்டுகளின் வகைகளை உருவாக்கி வருகிறது.


இஸ்ரோவை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் தனியார் துறையின் பணிகள் இல்லை. ஸ்கைரூட் மற்றும் அக்னிகுல் உருவாக்கிய செலுத்து வாகனங்கள் வேறுபட்ட வகையில் தனித்துவமானவையாக உள்ளன. செயற்கைக்கோள் தொடர்பான பயன்பாடுகள், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானவை மற்றும் அதிநவீனமானவை" என்று இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (ஐ.என்-எஸ்.பி.ஏ.சி) தலைவர் பவன் கோயங்கா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு, சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தமது சொந்த ஏவுதளத்தைத் திறந்ததது.


விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தரவுகள் மற்றும் அவற்றின் தேவை இந்தியாவில் மிகக் குறைவு என்பதால், உள்நாட்டு தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு உலகளாவிய சந்தைகளைத் தேடி வருகின்றன.


"அந்த நிறுவனத்தினர் சில வெற்றிகளைக் காணத் தொடங்கியுள்ளனர். அரசு நிறுவனங்களிடமிருந்து சில பணி ஆணைகளைப் பெறுகின்றனர். இது மற்றொரு மிகப் பெரிய விஷயம்" என்று கோயங்கா மேலும் கூறினார், பெங்களூரை தலைமை இடமாகக் கொண்ட பிக்ஸெல் நிறுவனம், செயற்கைக்கோள்களிலிருந்து ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் படங்களை வழங்குவதற்காக அமெரிக்க தேசிய ஆய்வுப்பிரிவு அலுவலகத்திடமிருந்து ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தைப் பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்.


இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் மிகச் சிறிய அளவிலானது. இது 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய விண்வெளி பொருளாதாரத்தில் சுமார் 2.1 சதவீதமாக இருந்தது.  அதாவது 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.4 சதவீதமாகும்.


“பிரதமர் நரேந்திர மோடி, கடந்த கால தடைகளை உடைத்து, விண்வெளித் தொழில்நுட்பத்தை தனியார் துறைக்கு அனுமதித்தார். இதையடுத்து இத்துறையில் மூன்றாண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் சில இந்தப் பிரிவிலேயே முதலாவதானவை. இது உலகளாவிய தர அளவுகோல்களின் அடிப்படையில் அங்கீகரிக்கப்படுகிறது" என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


“50 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளித் துறையில் ஒவ்வொரு நாடும் அமெரிக்காவை நோக்கிப் பார்த்தன. ஆனால் தற்போது விண்வெளித் துறையில் இந்தியாவை தனக்குச் சமமான நாடாக அமெரிக்கா கருதுகிறது” என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !