மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

Madurai Minutes
0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2023) மதுரை புதுநத்தம் சாலையில் 2.73 ஏக்கர் நிலத்தில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் 6 தளங்களுடன் 218 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார்.


எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், படைப்பாளி, அரசியல், ஆட்சி என எத்துறையைத் தொட்டாலும், அத்துறையில் முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதின் மீதும் வாழ்நாள் முழுவதும் தீராப் பற்றினை கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,  2010-ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று சென்னை, கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் இரண்டு இலட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தார். 


அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.1.2022 அன்று அடிக்கல் நாட்டினார். 


இவ்வரலாற்று சிறப்புமிக்க கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் 17 மாதங்களில் முடிவுற்று, அனைவருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக மதுரையில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. 


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் 120 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவிலும், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நூல்கள், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், 37 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அறைகலன்கள், திறந்தவெளி அரங்கம் மற்றும் கூடுதல் வசதிகள், என மொத்தம் 218 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.   


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தளம் வாரியான விவரங்கள்


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் அடித்தளத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், தரைமட்ட தண்ணீர் தொட்டி, செய்தி / நாளிதழ் சேமிப்பு அறை, நூல் தொகுக்கும் பிரிவும், தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, சொந்த நூல்கள் வாசிப்புப் பிரிவு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு, கணினி கட்டுபாட்டு அறை, தபால் பிரிவும், முதல் தளத்தில் கலைஞர் பிரிவு, பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகள் திரை அரங்கம், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவு, சொந்த நூல்கள் வாசிப்புப் பிரிவு, சிறார் அறிவியல் பூங்கா, அறிவியல் உபகரணங்கள் பிரிவும், இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி பதிப்புகள் மற்றும் இதழ்கள் பிரிவும், நான்காம் தளத்தில் போட்டித் தேர்வுப் பிரிவு, கூரைத் தோட்டமும், ஐந்தாம் தளத்தில் அரிய நூல்கள் பிரிவு, மின் நூலகம். பல்லூடகப்பிரிவு, நூல்கள் பாதுகாக்கும் பிரிவு, ஒளி-ஒலி தொகுப்புகள் காட்சியகப் பிரிவு, மின்னுருவாக்கப் பிரிவு, நூலக ஸ்டுடியோ, நுண்படச்சுருள், நுண்பட அட்டை அறை ஆகியவையும், ஆறாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, நூல் பகுப்பாய்வு மற்றும் நூற்பட்டி தயாரித்தல் பிரிவு, தலைமை நூலகர் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பிரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவருந்தும் அறை ஆகியவையும் அமைந்துள்ளன.


இந்நூலகத்தில், தரைத்தளம் முதல் இரண்டாம் தளம் வரை தானியங்கி நகரும் மின் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வசதி, மின்தூக்கிகள் வசதி, ஒருங்கிணைந்த குளிருட்டு வசதி, வாசகர்களுக்கான இணைய வசதி 


(வை- ஃபை), படிக்கும் வசதியுடன் கூடிய திறந்தவெளி மாடித் தோட்டம் ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தளம் வாரியாக உள்ள நூல்களின் விவரங்கள்


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தரைத்தளத்தில் தமிழ்நாடு பாடநூல்கள், போட்டித் தேர்விற்கான நூல்கள் ஆகியவை பார்வையற்றோர் எளிதாக பயிலும் வகையில் பிரெயில் எழுத்துகளிலான 1800 நூல்கள் இடம்பெற்றுள்ளது. முதல் தளத்தில் உள்ள குழந்தைகள் பிரிவில், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பதிப்பிக்கப்பட்ட அனைத்து வகையிலான 30,000 குழந்தைகள் நூல்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்தில் உள்ள தமிழ் நூல்கள் பிரிவில்,  தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், நாவல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், கடிதங்கள், சுயசரிதை நூல்கள் மற்றும் கணினி அறிவியல், இதழியல், உளவியல், மெய்யியல், மானுடவியல், சட்டம், பொருளாதாரம், தமிழ் பண்பாடு, பண்பாடு, கலாச்சாரம், தமிழில் தொண்மை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள், அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு மற்றும் புவியியல் போன்ற அனைத்து பாடப்பிரிவுகளில் வெளிவந்த 1,00,000 தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மூன்றாம் தளத்தில் உள்ள ஆங்கில நூல்கள் பிரிவில் கணிபொறியியல், தத்துவம், சமயம், சமூக அறிவியல், பொருளாதாரம், சட்டம், அறிவியல் தொழில் நுட்பம், நானோ தொழில் நுட்பம், ரோபோடிக்ஸ், Artificial Intelligence, Space Technology, பொறியியல், வானியல், கலை, நுண்கலை, விளையாட்டு, சினிமா, வேளாண்மை, உணவு, வரலாறு, புவியியல், உட்பட அனைத்து பாடங்களிலும் பதிப்பிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பதிப்பாளர்களின் 1,00,000 நூல்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளன. நான்காம் தளத்தில் உள்ள போட்டித்தேர்வு நூல்கள் பிரிவில் TNPSC, TRB, UPSC, Banking என அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில், இப்பிரிவில் போட்டித் தேர்வு நூல்கள் 30,000 இடம்பெற்றுள்ளன். மேலும், ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவில் கணிபொறியியல், தத்துவம், சமயம், சமூக அறிவியல், பொருளாதாரம், சட்டம், அறிவியல் பாடங்கள் சார்ந்த 50,000 ஆங்கில குறிப்புதவி நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஆறாம் தளத்தில் உள்ள ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவில் அறிவியல், தொழில்நுட்பம், வரலாறு மற்றும் புவியியல் போன்ற அனைத்து பாடப்பிரிவுகளில் 60,000 ஆங்கில குறிப்புதவி நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அரிய நூல்கள் பிரிவில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாறு மற்றும் மானுடவியல் பற்றிய 16,000 அரிய நூல்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.


இவ்விழாவில், எச்.சி.எல். குழுமத்தின் நிறுவனர் திரு. ஷிவ் நாடார், தலைவர் திருமதி ரோஷினி நாடார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   


இவ்விழாவில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர்  திரு.எ.வ. வேலு, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்பமை நீதியரசர்கள், மதுரை மாநகராட்சி  மேயர் திருமதி வி. இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ. தளபதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் திரு. டி. நாகராஜன், தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பொது நூலகங்கள் இயக்குநர் திரு. கே. இளம்பகவத், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !