தமிழ்நாடு முதலமைச்சர் மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை

Madurai Minutes
0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2023) மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை.


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான்.


அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஜூலை 15-ஆம் நாளான இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கின்றேன். அந்த பெருமிதத்தோடு இங்கு வந்துள்ள அனைவரையும் நான் வருக, வருக, வருக என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.


மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் என்னுடைய ஆரூயிர் அண்ணன் திரு. துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே!


சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெருமை சேர்த்திருக்கக்கூடிய எச்.சி.எல். நிறுவனத்தினுடைய மதிப்பிற்குரிய திரு.ஷிவ் நாடார் அவர்களே,


மாண்புமிகு உயர் நீதிமன்றத்தினுடைய நீதியரசர்களே,


எச்.சி.எல். குழுமத்தின் தலைவர் திருமதி ரோஷினி அவர்களே,


நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்களே,


தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளே!


மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே!


பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!


சிறப்பு அழைப்பாளர்களே!


ஆசிரியர் பெருமக்களே!


எழுத்தாளர்களே!


வாசகர்களே!


என் பாசத்திற்கும்-பேரன்புக்கும் உரிய மாணவச் செல்வங்களே!


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய இனிய நண்பர்களே,


என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே!


உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.


சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும்.


இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டினுடைய தலைநகர் சென்னை என்றால், இந்த மதுரை, தமிழ்நாட்டினுடைய கலைநகர்!


தலைநகரில், தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் தந்தார் அவர் தம்பி கலைஞர்!


இன்று அந்த தலைவர் கலைஞரின் நூற்றாண்டில், இந்தக் கலைநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனும் தென் தமிழ்நாட்டின் அறிவாலயத்தை இந்த அடியேன் அமைத்திருக்கிறேன்.


இந்த நூலகத்தை திறந்து வைக்கக்கூடிய பெரும் வாய்ப்பும், பெருமையும் எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மாமதுரையில் சங்ககால இலக்கியங்களை சாமானியருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சங்கத்தமிழ் இயற்றிய மாமதுரையில் நூலகம் வைக்காமல் வேறு எங்கு வைக்க முடியும்.


சிலப்பதிகாரம் குறித்தும் காற்சிலம்போடு நீதி கேட்ட கண்ணகி குறித்தும் முத்தமிழறிஞர் கலைஞர் தீட்டாத எழுத்து ஓவியங்கள் இல்லை. `அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில் இலட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவ போகிறது! திராவிட இயக்கம் என்றாலே அறிவியக்கம்தான்!


தமிழ்ச் சமுதாயத்தோட எழுச்சிக்கும், மீட்சிக்கும் தேவையான கருத்துக்களை எழுதி, பேசி, படித்து வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர்! திராவிட முன்னேற்றக் கழகத்தோட தலைமைக் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அதற்கு அறிவகம் என்று பெயர் வைத்தார். சென்னை, அண்ணா சாலையில் புதிதாக தலைமைக் கழகத்தை அமைத்த தலைவர் கலைஞர் அவர்கள் ‘அண்ணா அறிவாலயம்’ என்று பெயர் வைத்தார்கள். ஏனென்றால், இது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை! அறிவியக்கம்! 


படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரம்மாண்டமான நூலகங்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில், 120 கோடியே 75 இலட்ச ரூபாய் மதிப்பில் இந்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அழகாகவும், அற்புதமாகவும் உருவாக்கிக் கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும், நம்முடைய மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்களையும், மாணவர்களின் நெஞ்சம் அறிந்த அன்பு தம்பி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.


பொதுப்பணி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைய கடுமையாக உழைத்திருக்கக்கூடிய கடைக்கோடி மனிதர்கள் வரை அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


பொறுப்பேற்று இருக்கின்ற கடமையையும் தாண்டி, உள்ளார்ந்த அக்கறையும் ஆர்வமும், ஒவ்வொருவருக்கும் இருந்தால்தான் இவ்வளவு நேர்த்தியாக ஒன்றை உருவாக்க முடியும். இதையெல்லாம் தாண்டி, தமிழினத் தலைவர் கலைஞர் மேல் வைத்திருக்கின்ற அன்பின் வெளிப்பாடுதான் இந்த நூலகம்.


மதிப்பிற்குரிய திரு.ஷிவ் நாடார் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷினி அவர்களையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன்.


மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை; இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக்கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்.


“உனக்கு பணம் வரும்போது அதிகப்படியானவர்களுக்கு உதவி செய்ய” வேண்டும் என்று இவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர் இவர். 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 இலட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான இவரும் உங்களைபோல அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.


ஒரு கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய மகள் ரோஷினி அவர்கள், அந்த நிறுவனத்தினுடைய இயக்குநராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கனவு நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாகவும், இவர்கள் இருவரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றி! நன்றி! நன்றி!


கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் –மாணவர்கள் - போட்டித் தேர்வர்கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் - மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.


கலைஞப் பொறுத்தவரைக்கும் எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில், அவர்தான் ‘நம்பர் ஒன்’!  அரசியலா? ஐம்பது ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர். ஐந்து முறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். அதிக முறை சட்டமன்ற உறுப்பினர், நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராவும் இருந்திருக்கார்!


சினிமாவா? கதை எழுதினார். திரைக்கதை வசனம் எழுதினார். பாடல்கள் எழுதினார். திரைப்படங்களை தயாரித்தார்.


நாடகமேடையா? நாடகங்களைத் தயாரித்தார், கதை வசனம் எழுதினார். நடிக்கவும் செய்தார்.


பத்திரிக்கை உலகமா? மாணவனாக இருக்கும்போதே கையெழுத்துப் பிரதியாக பத்திரிக்கையை நடத்தினார். பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். எழுத்தாளராக, பத்திரிக்கையாளராவும் இயங்கினார்.


இலக்கியமா? கவிஞர் - சிறுகதை ஆசிரியர் – நாவலாசிரியர் – உரையாசிரியர் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார்.


இப்படிப்பட்ட பன்முக ஆற்றல் கொண்ட முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரில்தான் பன்முக ஆற்றலை நீங்களும் வளர்த்துக்கொள்ளக்கூடிய இந்த நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது!


கலைஞரே மிகப்பெரிய நூலகம்தான்! அவர் எழுதிய புத்தகங்களை வைத்தால் அதுவே பெரிய நூலகம் போல இருக்கும்.

 • நெஞ்சுக்கு நீதி
 • குறளோவியம்
 • சங்கத்தமிழ்
 • சிலப்பதிகார நாடகக் காப்பியம்
 • தென்பாண்டிச் சிங்கம்
 • தொல்காப்பியப் பூங்கா
 • பாயும் புலி பண்டாரக வன்னியன்
 • ரோமாபுரிப் பாண்டியன்
 • பொன்னர் சங்கர்
 • தாய்
 • திருக்குறள் உரை
 • விடுதலைக் கிளர்ச்சி
 • வெள்ளிக்கிழமை
 • புதையல்
 • ஒரே ரத்தம்
 • இருளும் ஒளியும்
 • கிழவன் கனவு
 • துடிக்கும் இளமை
 • நளாயினி
 • பழக்கூடை
 • கவிதையல்ல
 • ஆறுமாதக் கடுங்காவல்
 • சிறையில் பூத்த சின்னசின்ன மலர்கள்
 • வைரமணிகள்
 • நச்சுக்கோப்பை
 • தூக்குமேடை
 • உதயசூரியன் –

இப்படி அவருடைய புத்தகங்களை சொல்லிக் கொண்டே போகலாம்!நெஞ்சுக்கு நீதி மட்டும் ஆறு பாகங்கள்!


உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. அவருடைய சட்டமன்ற உரைகள் 12 பாகங்களாக வெளி வந்திருக்கிறது. அவர் ஆற்றிய உரைகள் – சொற்பொழிவுகள் இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை.


1945 முதல் அவர் ஆற்றிய உரைகளைத் தொகுத்தால் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வெளியிட முடியும்.


 • சிறுகதைகள்
 • கவிதைகள்
 • பெட்டிச் செய்திகள்
 • நாடகங்கள்
 • பத்திரிக்கைகளில் எழுதிய துணுக்குகள்
 • ஓவியங்கள்
 • கருத்துச் சித்திரங்கள்

- இதையெல்லாம் மொத்தமாக தொகுத்தால் இன்னும் பல தொகுதிகள் வெளியாகும்.


இதையெல்லாம் மட்டுமே வைத்து ஒரு தனி நூலகம் அமைக்கலாம். அதனால்தான் கலைஞரே ஒரு நூலகம் என்று சொன்னேன்.


கலைஞரை பற்றி எழுதியவர்கள் - கலைஞரை ஆய்வு செய்தவர்கள் - கலைஞரை மாதிரியே எழுதியவர்கள் என்று தமிழ்நாட்டில் தனக்கென ஒரு எழுதுகோல் படையையே வைத்திருந்தார் தலைவர் கலைஞர்.


நம் தமிழ்நாட்டில் ‘கலைஞர் பரம்பரை’- என்றே ஒன்று இருக்கிறது. நம்முடைய இந்தக் கலைஞர் பரம்பரைதான் தமிழ்நாட்டை வாழையடி வாழையாக வளர்த்தெடுக்கின்ற பரம்பரை!


இங்கே பள்ளி கல்லூரி சார்ந்த மாணவ – மாணவியர் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள்! கலைஞருடைய வாழ்க்கையில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ இருக்கிறது!


திருவாரூருக்கு பக்கத்தில் இருக்குகின்ற திருக்குவளை கிராமத்தில் முத்துவேலருக்கும் - அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்த அவர், உங்களைப் போல மாணவராக இருந்த காலத்தில்தான் மொழிக்காகவும், இனத்துக்காகவும் போராடத் தொடங்கினார். திருக்குவளை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அப்போது அவர்தான் சட்டாம்பிள்ளை!


சட்டாம்பிள்ளை என்றால் ‘க்ளாஸ் லீடர்’ என்று அர்த்தம்! திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்கார் மறுத்து விட்டார். பள்ளியில் இடம் தரவில்லை என்றால் எதிரே இருக்கக்கூடிய கமலாலயம் தெப்பக்குளத்தில் குதித்து நான் உயிரை விட்டுவிடுவேன் என்று போர் குணத்துடன் சொன்னார். ஏனென்றால், படிப்பில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது! படிப்பு மேல் அவருக்கு இருந்த ஆர்வம்தான், இந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தினுடைய தாகம்!


படிப்பில் அவருக்கு இருக்கின்ற ஆர்வத்தை பார்த்து 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கிடைத்தது. கலைஞருக்கு 13 வயது இருக்கக்கூடிய நேரத்தில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கியது. தினமும் மாணவர்களை கூட்டிக்கொண்டு கையில் தமிழ்க் கொடியை ஏந்தி இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று அந்த முழக்கத்தை முழங்கிக் கொண்டு கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார்.


இந்தி துண்டறிக்கைய இந்தி ஆசிரியருக்கே கொடுத்தார். பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய இந்திய நாட்டில் ஏராளமான மொழிகள் பேசப்படுகிறது. மற்ற மொழிகளை விட இன்றைக்கு தமிழ் தனித்தன்மையுடனும், தனித்து இயங்கவும் காரணம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்தான் என்பதை யாரும் மறந்திடக்கூடாது. அதற்கு திராவிட இயக்கமும், தி.மு.க.வும்தான் காரணம்!


‘சிறுவர் சீர்திருத்தச் சங்கம்’ அமைத்து வாரம்தோறும் மற்ற மாணவர்களுக்குப் பேச்சுப் பயிற்சி கொடுத்தார் கலைஞர். அப்போதே, மாணவர் ஒற்றுமைக்கு என்று தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார்.


16-ஆவது வயதில் ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ ஒன்றை தொடங்கினார். மாணவர்களுடைய எழுத்தாற்றல வளர்க்க, ‘மாணவர் நேசன்’-என்ற மாத இதழைக் கையெழுத்துப் பிரதியாக தொடங்கி, அதனுடைய ஆசிரியராகவும் செயல்பட்டார்.


17-ஆவது வயதில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தில் ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடினார். அப்போதுதான் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் வாழ்த்துப்பா அனுப்பி வைத்தார். 1942-ல் பேரறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ மூன்றாவது இதழில், ‘இளமைப் பலி’ என்ற கலைஞருடைய கட்டுரை வெளிவந்தது. திருவாரூரில் நடந்த நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், கலைஞரை நேரில் அழைத்து சந்தித்தார். கலைஞருடைய எழுத்தாற்றலை புகழ்ந்தார். அத்துடன் நிற்கவில்லை, 'நன்றாகப் படி'-என்று அறிவுரை சொன்னார் பேரறிஞர் அண்ணா.


‘முரசொலி வெளியீட்டுக் கழகம்’-என்ற பேரில் ஒரு நிறுவனம் தொடங்கி மாத இதழாக ‘முரசொலி’-யை வெளியிட்டார். அதில் ‘சேரன்’ என்ற புனைபெயரில் கருத்துச் செறிவுமிக்க கனல் தெறிக்கும் கட்டுரைகளை எல்லாம் எழுதினார்.


இப்போது நான் சொன்ன இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் கலைஞருடைய 20 வயதிற்குள் நடந்தது. உங்களைப் போலவே, பள்ளியில் படிக்கின்றபோது தமிழ்ப் பற்று இருந்ததால்தான் எழுத்தாற்றல் பெற்று, போராட்டக் குணத்தின் காரணமாக மிகப்பெரிய தலைவரானார் கலைஞர்.


பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னாலும், கலைஞர் படித்தது என்னவோ, அண்ணாவோட கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்டக் கல்லூரியிலும்தான்! 


அன்றைக்கு இருந்த சமூகச் சூழலும், அரசியல் சூழலும் கலைஞருக்குள்ளே இருந்த போராளியும், அவர் விரும்பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம். ஆனால், கலைஞருக்குள்ளே இருந்த அந்தப் போராளிதான் இன்றைக்கு பலரும் படிக்க காரணம்! கலைஞரை முதலில் பார்த்தபொழுது அண்ணா சொன்னது ‘நன்றாகப் படி!’, அண்ணா மட்டுமில்லை, இன்றைக்கு நான் கூட உங்களை மாதிரியான மாணவர்களை சந்திக்கின்றபோது எல்லாம் என்ன சொல்கிறேன்? ‘நல்லா படியுங்கள்!’ ‘நல்லா படியுங்கள்!’ என்பதுதான்.


படிப்பும், வேலைவாய்ப்பும் நம்முடைய உரிமை என்று கிளர்ந்தெழுந்த இனம்தான், நம்முடைய திராவிட இனம்! எத்தனை தடைகள் வந்தாலும், படிப்பை மட்டும் நீங்கள் யாரும் கைவிடக் கூடாது. படிப்பு மட்டும்தான் யாராலும் திருட முடியாத நிலையான சொத்து!


அந்தப் படிப்பை நாம் எல்லோரும் அடையவேண்டும் என்ற தலைவர் கலைஞர் உருவாக்கியதுதான் இன்றைய நவீன தமிழ்நாடு!

இன்றைக்கு தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கின்ற பெரும்பாலானவை  கலைஞரால் உருவாக்கப்பட்டவை! நவீன கலைஞரால் உருவாக்கப்பட்டது! ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அதை முதலில் கொடுத்தது, திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி!


கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது தி.மு.க.வோட ஆட்சி! புகுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, 'எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது, கலைஞர் கருணாநிதியிடம் சென்று சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்!


அந்த பெருந்தலைவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தவர் யார்? நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அந்த நாளில்தான் இந்த நூலகத்தை இன்றைக்கு நாம் திறந்து வைத்திருக்கிறோம். தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளை அதிகப்படுத்தினார் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்! அனைத்துப் பள்ளிகளிலும், நூலகம் அமைத்தார்! உடற்கல்வியை கட்டாயம் ஆக்கினார்! அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி, அறிவியல் கூடங்களை அமைத்தார்! பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார்! சத்துணவில் வாரம் 5 நாட்கள் முட்டைகளை வழங்கினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அமைத்தார்!


கிராமப்புற மாணவர்களுக்கும், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் கொடுத்தார்! அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார்! தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்! கணினிப் பாடத்தை அறிமுகம் செய்தார்!


தி.மு.க.வின் முதல் ஆட்சிக்காலத்திலேயே, தமிழ்நாட்டில் ஏராளமான அரசுக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் எவ்வளவு தெரியுமா? 68 தான்! ஆனால், கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில், அதாவது ஏழு ஆண்டுகளில், 97 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டது! கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்! சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம்! டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம்! உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்! சேலம் பெரியார் பல்கலைக் கழகம்! ஏராளமான மருத்துவக் கல்லூரிகள்! இளநிலைப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ரத்து!


இப்படி, கல்வியைக் கொடுத்துவிட்டால், ஒரு மனிதருடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தது கலைஞரோட தி.மு.க. ஆட்சி! இதனுடைய தொடர்ச்சியாகதான் இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.


தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்.


இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம், பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களின் பசியை போக்க ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ என பல்வேறு திட்டங்கள பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.


அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் உயர்கல்வி படிக்க வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “புதுமைப்பெண் திட்டம்”. வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” தொடங்கப் போகிறோம்.


தகுதியுடைய குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. உங்கள் குடும்பத்தில் உங்கள் அம்மாவே இதனை பெறுவார்கள். இத்தனை ஆயிரம் கோடி மதிப்பிலான பெரிய சமூகநலத் திட்டம் இதுவரை இல்லை என்று சொல்கின்ற மாதிரி மாபெரும் திட்டமாக அந்தத் திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது.


ஏற்கனவே, இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான, மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறோம். இந்தியாவில், மற்ற மாநிலங்களும் நம்மை பின்பற்றக்கூடிய அளவிற்கு மகத்தான திட்டங்களை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம்.


நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் ”திராவிட மாடல்” கோட்பாடு இதுதான். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆட்சிப் பொறுப்பின் மூலமாக அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறோம்.


மக்களுக்கு பணி செய்ய, தொண்டு செய்ய கிடைத்த வாய்ப்பாகதான் ஆட்சிக்கு வந்து இருப்பதையும், முதலமைச்சர் என்கின்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும் நான் நினைக்கிறேன்.


தமிழ்நாடு அனைத்துத் துறையிலும், முன்னேறி இந்தியாவோட தலைசிறந்த மாநிலமாக ஆனது என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றை இலக்குடன்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களின் அரசாக, அனைத்து தரப்பு மக்களும் போற்றும் அரசாக நமது தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.


மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது.


நிறைவாக, தலைவர் கலைஞரின் வரிகளோடு முடிக்கிறேன். “புத்தகத்தில் உலகைப் படிப்போம், உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம்”


நன்றி! வணக்கம்!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !