செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் உள்ள தொழிலாளர்கள் அதன் வெகுமதிகளை அரிதாகவே காண்கிறார்கள், அதை சரி செய்ய விரும்பும் இந்திய புத்தொழில் நிறுவனம்

Madurai Minutes
0

தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஆலஹள்ளி கிராமத்தில் அது ஒரு அதிகாலை நேரம், ஆனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் வேகமாக உயர்ந்து வருகிறது. தன் திறன்பேசியில் சந்திரிகா சமீபத்தில் பயன்படுத்தத் தொடங்கிய செயலியின் மூலம் அடுத்தடுத்து பல ஒலி அமைவு செய்திகளை அவர் தேர்வு செய்கிறார். இது, தாய்மொழியில் பேசும் அவரது குரலை தொலைபேசியில் இருந்து ஒலிக்கச் செய்கிறது.


இந்த செயலியைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, 30 வயதான சந்திரிகாவின் வங்கிக் கணக்கில்  ரூ. 184 (2.25 டாலர்) மட்டுமே இருந்தது. ஆனால் ஏப்ரல் பிற்பகுதியில் பல நாட்கள் சுமார் ஆறு மணி நேர வேலைக்கு ஈடாக, அவருக்கு ரூ. 2,570 ($ 31.30) கிடைத்தது. ஆசிரியரான அவர், தொலைதூரப் பள்ளிக்கு சென்றுவருவதற்கான மூன்று பேருந்துகளின் செலவுக்குப் பிறகு, ஒரு மாதத்தில் அவர் சம்பாதிக்கும் தொகைக்கு சமமான தொகை இது.   அவரது வேலையைப் போல, பணம் பெறுவதற்கு மாத இறுதி வரை காத்திருக்க வேண்டியில்லாமல்; இந்த செயலியால் சில மணி நேரங்களிலேயே அவரது வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும். மத்திய மற்றும் தென்னிந்தியாவில் சுமார் 60 மில்லியன் மக்களால் பேசப்படும் தனது தாய்மொழியான கன்னடத்தில் உரையை சத்தமாக வாசிப்பதன் மூலம், சந்திரிகா இந்த செயலியைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 5 டாலர் ஊதியத்தை சம்பாதித்துள்ளார். இது மட்டுமல்லாமல் குரல் பதிவுகள் துல்லியமானவை என்று சரிபார்க்கப்பட்டவுடன் 50% போனசும் வழங்கப்படும்.


செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் சந்திரிகாவின் குரலுக்கு இந்த தொகை கிடைக்கிறது. இப்போது, சாட்ஜிபிடி போன்ற பெரிய மொழி மாதிரிகள், ஆங்கிலம் போன்ற மொழிகளில் சிறப்பாக செயல்படுகின்றன. அங்கு உரை மற்றும் ஒலி அமைவு தரவு இணையத்தில் ஏராளமாக உள்ளது. ஆனால், கோடிக்கணக்கான மக்களால் பேசப்பட்டாலும், கன்னடம் போன்ற மொழிகளில் அவை மிகக் குறைவாகவே செயல்படுகின்றன. (எடுத்துக்காட்டாக, விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தில் 6 மில்லியன் கட்டுரைகள் உள்ளன, ஆனால் கன்னடத்தில் 30,000 கட்டுரைகளே  உள்ளன.)  ஒரு பயனுள்ள ஆங்கிலம் பேசும் செயற்கை நுண்ணறிவை உருவாக்க, அது ஏற்கனவே திரட்டிய இடத்திலிருந்து தரவைச் சேகரித்தால் போதுமானது. ஆனால் கன்னடம் போன்ற மொழிகளுக்கு, வெளியே சென்று மேலும் சேகரிக்க வேண்டி இருக்கும்.


உலகின் ஏழ்மையான மக்களால் பேசப்படும் மொழிகளில் உரை அல்லது குரல் தரவு சேகரிப்புகள் அடங்கிய தரவுத்தொகுப்புகளுக்கு பெரும் தேவை உருவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட மூலப்பொருட்களை உருவாக்குவது  என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கால் சென்டர்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளை உற்பத்தித்திறன் இயந்திரங்களாக மாற்றுவதற்கு பெரிதும் பணியாற்றிய பொருளாதாரம், 21-ஆம் நூற்றாண்டில் தரவு சார்ந்த வேலைகளையும் அதேபோல அமைதியாக செய்து வருகிறது. 2022-ஆம் ஆண்டில் உலகளவில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டிருந்த செயற்கை நுண்ணறிவு தரவுத் துறையின் மதிப்பு, 2030-ஆம் ஆண்டில், 17 பில்லியன் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா, கென்யா, ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தரவு தொழிலாளர்களுக்கு அந்தப் பணம் மிகக் குறைவாகவே சென்றுள்ளது.


இந்த நிலை, தனிப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தீங்குகளை ஏற்படுத்தக்கூடும். "நமது முழு சமூகத்தையும் பாதிக்கும் அமைப்புமுறைகள் மற்றும் அந்த அமைப்புமுறைகளை மிகவும் நம்பகமானதாகவும், குறைந்த சார்புடையதாகவும் மாற்றும் தொழிலாளர்களைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இணைய அமைப்பின் டிஜிட்டல் பணி தளங்களின் நிபுணர் திரு ஜோனஸ் வேலன்ட் கூறுகிறார். "உங்களிடம் அடிப்படை உரிமைகள் கொண்ட, அதிகாரம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தால், தொழில்நுட்ப அமைப்பின் விளைவு தரமானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."


ஆலஹள்ளி மற்றும் சிலுக்காவாடி கிராமங்களின் அருகிலுள்ள ஒரு இந்திய புத்தொழில் நிறுவனம், ஒரு புதிய மாதிரியை சோதித்து வருகிறது. 2021-ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்ட ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான கார்யாவில் சந்திரிகா பணிபுரிகிறார். இது "உலகின் முதல் நெறிமுறை தரவு நிறுவனம்" என்று  அடையாளப்படுத்துகிறது. அதன் போட்டியாளர்களைப் போலவே, இது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்களுக்கு சந்தை விலையில் தரவை விற்கிறது. ஆனால் அந்த பணத்தின் பெரும்பகுதியை லாபமாக வைத்திருப்பதற்கு பதிலாக, அதன் செலவுகளை ஈடுகட்டி, மீதமுள்ள தொகையை இந்தியாவில் உள்ள கிராமப்புற ஏழைகளுக்கு வழங்குகிறது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 5 டாலர் மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கு வேலையில் அவர்கள் உருவாக்கும் தரவின் நிகழ்வுமுறை உரிமையையும் கார்யா வழங்குவதால், அவை மீண்டும் விற்கப்படும் போதெல்லாம், தொழிலாளர்கள் தங்கள் கடந்த கால ஊதியங்களுக்கு மேலும் வருவாயைப் பெறுகிறார்கள். இது தொழில்துறையில் வேறு எங்கும் இல்லாத ஒரு மாதிரியாகும்.


"இப்போது இருக்கும் ஊதியங்கள் சந்தையின் தோல்வி", என்று 27 வயதான கார்யாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு மனு சோப்ரா  கூறுகிறார். "அடிப்படையில், சந்தையில், ஒரு சந்தை தோல்வியை தீர்க்க முடியாது என்பதால், நாங்கள் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாக இருக்க முடிவு செய்தோம்.”


‘இது ஒரு நிரந்தர வேலை அல்ல, மாறாக விரைவாக வருமான ஊக்கத்தைப் பெறுவதற்கான ஒரு வழி’, என்பது தான் கார்யா அதன் தொழிலாளர்களிடம் சொல்லும் முதல் விஷயம்.  இந்த செயலி மூலம் ஒரு தொழிலாளி சம்பாதிக்கக்கூடிய அதிகபட்ச வருமானம், 1,500 டாலர். அதற்குப் பிறகு, அவர்கள் வேறு ஒருவருக்கு வாய்ப்பு தருகிறார்கள். சுமார் 30,000 கிராமப்புற இந்தியர்களுக்கு ரூ. 65 மில்லியன்  (கிட்டத்தட்ட 800,000 டாலர்) ஊதியமாக வழங்கியுள்ளதாக கார்யா கூறுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த செயலி 100 மில்லியன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று திரு சோப்ரா விரும்புகிறார். "இதை முறையாகச் செய்தால் லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து விரைவாக வெளியேற்ற முடியும்" என்று அவர் கூறுகிறார். "இது முற்றிலும் ஒரு சமூகத் திட்டம். செல்வம் என்பது சக்தி. பின்தங்கிய சமூகங்களுக்கு செல்வத்தை மறுபகிர்வு செய்ய விரும்புகிறோம்."


தற்போதுள்ள செல்பேசி தரவு உள்கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படாததால், இந்தியாவால் 4ஜி சேவையில் உலகின் பிற பகுதிகளை முந்த முடிந்தது. அதேபோல, கார்யா செயல்படுத்துவது போன்ற முயற்சிகள், இந்திய மொழிகள் சார்ந்த செயற்கை நுண்ணறிவு திட்டங்கள், ஆங்கில செயற்கை நுண்ணறிவு திட்டங்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், மிகவும் நம்பகமான மற்றும் சார்பில்லாத தொடக்க புள்ளியிலிருந்து தொடங்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !