அம்ரித் பாரத்- சர்வதேசத் தரத்தில் புதுப்பொலிவு பெறும் ரயில் நிலையங்கள்

Madurai Minutes
0

நாட்டில் ரயில்வே கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது. புதிய ரயில்கள் அறிமுகம், ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கல், வந்தே பாரத் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் அறிமுகம், ரயில் நிலையங்கள் மேம்பாடு என பல பணிகள் நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதால் ரயில் பயணிகளுக்கான வசதிகள் பெருமளவு அதிகரித்துள்ளன. 


இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் வகையில் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,309 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் முதல் பகுதி 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன இந்த பணிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.  


உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55 ரயில் நிலையங்கள், பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் அமைந்துள்ளன. இவை மொத்தம் ரூ.24,470 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன.


இவற்றில் 25 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வேக்கு உட்பட்டவை. இந்த நிலையங்கள் ரூ. 616 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் செங்கல்பட்டு ரயில் நிலையம் ரூ.18 கோடி செலவிலும், பெரம்பூர் ரயில் நிலையம் ரூ.15 கோடி செலவிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் ரூ.21 கோடி செலவிலும், திருவள்ளூர் ரயில் நிலையம் ரூ.16 கோடி செலவிலும், திருத்தணி  ரயில் நிலையம் ரூ.11 கோடி செலவிலும், கும்மிடிப்பூண்டி  ரயில் நிலையம் ரூ.17 கோடி செலவிலும், அரக்கோணம் ரயில் நிலையம் ரூ.22 கோடி செலவிலும், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ரூ.16 கோடி செலவிலும் மேம்படுத்தப்படுகிறது.


சேலம்  நிலையம் ரூ.45 கோடி மதிப்பிலும், கரூர் நிலையம் ரூ.34 கோடி மதிப்பிலும், திருப்பூர்  நிலையம் ரூ.22 கோடி மதிப்பிலும், போத்தனுார் ரயில் நிலையம் ரூ.24 கோடி செலவிலும், தென்காசி ரயில் நிலையம் ரூ.17 கோடி மதிப்பிலும், விருதுநகர் ரயில் நிலையம் ரூ.25 கோடி செலவிலும், மயிலாடுதுறை ரயில் நிலையம் ரூ.20 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் ரயில் நிலையம் ரூ.23 கோடி செலவிலும், விழுப்புரம் ரயில் நிலையம் ரூ.24 கோடி செலவிலும், நாகர்கோவில் ரயில் நிலையம் ரூ.11 கோடி செலவிலும் மேம்படுத்தப்படுத்தப்பட உள்ளன. இது தவிர கேரள மாநிலத்தில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 5 ரயில் நிலையங்களும், கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு நிலையமும் மேம்படுத்தப்படுகின்றன.


ஒவ்வொரு ரயில் நிலையமும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.


இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலுமே, பயணிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், அதிநவீன வாகன நிறுத்த வசதிகள், சிசிடிவி கண்காணிப்பு கேமரா, 5ஜி இணையதள வைஃபை வசதி, பசுமையான தோட்டம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். 


இந்த ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் அனைத்து மாநிலங்களும் மிகச்சிறந்த ரயில்வே கட்டமைப்பு வசதிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ரயில்பாதைகளின் நீளம், தென்னாப்பிரிக்கா, உக்ரைன், போலந்து, இங்கிலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மொத்த ரயில் பாதை நீளத்தை விட அதிகம் என்று குறிப்பிட்டார். 


சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சிறந்த பயண அனுபவத்தை பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இத்திட்டத்தால் ஏற்படும் பலன்களையும், அதனால் ஏற்படும் வளர்ச்சியையும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் காண முடியும் என்று அவர் தெரிவித்தார். 


மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பையும் மிகச்சிறப்பானதாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ரயில் நிலையங்கள் மட்டுமல்லாமல் ரயில்களிலும் சிறப்பு வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன.  ரயில் நிலையங்களில் இருந்து அந்தந்த நகரங்களின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும், வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று சேர வேண்டிய இடம் வரை தடையற்ற மற்றும் வசதியான அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !