மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Madurai Minutes
0

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று (13.09.2023) உணவு பாதுகாப்புத்துறை மற்றும் அமெரிக்கன் கல்லூரி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள் ஆகியோர், சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் நடைபெற்ற “EAT RIGHT MILLET MELA” விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பங்கேற்றார்கள்.


இந்நிகழ்ச்சியில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள் பேசியதாவது:-


மனிதன் ஆதிகாலத்தில் காடுகளில் இயற்கையாக கிடைத்த  பழங்கள், தேன் போன்றவற்றையும், விலங்குகளை வேட்டையாடி இறைச்சி போன்றவற்றையும் உணவாக உட்கொண்டான். நாகரீகம் வளர வளர மனிதன் வேளாண் பணிகளை மேற்கொண்டு தனக்கான உணவுகளை உற்பத்தி செய்ய தொடங்கினான். தற்போதுள்ள மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தி பெருக்குவதற்கு இரசாயன உரங்கள் பயன்படுத்தும் சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களிடத்திலும் துரித உணவு உட்கொள்ளும் வழக்கமும் அதிகரித்து வருகிறது. இத்தகைய உணவு பழக்கமாற்றம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

நமது முன்னோர்கள் தங்களது அன்றாட உணவில் அதிகளவில் சிறுதானியங்களை சேர்த்துள்ளனர்.  கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம், கொள்ளு போன்ற சிறுதானியங்கள் குறுகிய காலத்திலும், வறட்சியான சூழ்நிலையிலும் கூட வளரக்கூடியவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.  நமது அன்றாட உணவில் தற்போது சிறுதானியங்கள்  அதிகம் சேர்க்காததால் அவற்றின் உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு சிறுதானிய உற்பத்தியை அதிகரித்திடும் வகையில் விவசாயிகளை ஊக்குவித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைய இளைஞர்கள் நமது அன்றாட உணவில் ஒருவேளையாவது சிறுதானிய உணவாக எடுத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும் என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள்  பேசினார்.


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி அவர்கள் ஆகியோர் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். மேலும், சிறுதானிய உணவுகளின் அவசியம் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.வி.ஜெயராம பாண்டியன் அவர்கள், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.தவமணி கிறிஸ்டோபர் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !