மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கலை விழா தழல் ’23

Madurai Minutes
0

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான  கலை விழா தழல் ’23 (தழலாய் எழுவாய்!) 26.9.2023 அன்று காலை 9.30 மணியளவில் தொடக்க விழா பொன்விழா அரங்கில் தொடங்கப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக இறைவேண்டல் பாடல் கல்லூரி இசைக் குழுவினரால் பாடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கிறித்தவ மாணவர் இயக்கத்தலைவி ஜே.எஸ்.பிரிசில்லா இறைவேண்டல் செய்தார். கல்லூரியின் முதுகலை மாணவப் பிரதிநிதி (அரசுப்பிரிவு) ஆர். ப்ரீத்தி நிகழ்விற்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்றார். 


கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கிறிஸ்டியானா சிங், துணை முதல்வர் முனைவர் பியூலா ஜெயஸ்ரீ, மற்றும் சிறப்பு விருந்தினர் தங்கமயில் நகை மாளிகையின் உதவி பொது மேலாளர் ஜி.நவீனாஸ்ரீ, மாணவ நலனாளர்கள் மற்றும் மாணவப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் திருவிளக்கு ஏற்றி விழாவினைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் அவர்கள் ‘தழலாய் எழுவாய்’ என்பதைச் சிறப்பிக்கும் விதமாக கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் ஆடையணிந்து கொண்டாடப்படும் இவ்விழா மாணவர்களின் வாழ்வில் நல்லதொரு தொடக்கமாய் அமைந்து. சுடராய் ஒளிவீசி ஆற்றலுடன் நிமிர்ந்து எழுந்து வெற்றி வாகை சூட வேண்டுமென மாணவர்களை ஊக்கப்படுத்தி  அறிமுக உரையாற்றினார். 


கல்லூரியின் முதுகலை மாணவப் பிரதிநிதி (சுயநிதிப்பிரிவு) ஜெனிதா பிரின்சி சிறப்பு விருந்தினரை வரவேற்று அறிமுகப்படுத்தினார். விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக டோக் பெருமாட்டி கல்லூரியின் முன்னாள் மாணவியும்  தங்கமயில் நகை மாளிகையின் உதவி பொது மேலாளருமான நவீனாஸ்ரீ அவர்கள் தன் உயர்விற்குக் காரணமான  டோக் பெருமாட்டி கல்லூரியின் நினைவுகளை மகிழ்வாகப் பகிர்ந்து கொண்டதோடு, மனிதர்களிடத்தில் குறைகளை விடுத்து நிறைகளை மட்டுமே காண வேண்டும் எனும் நேர்நிலைச் சிந்தனையை முன் வைத்தார். தொடக்க விழாவின் நிறைவாக மாணவப் பேரவையின் துணைப் பிரதிநிதி மோதி  நன்றியுரை வழங்கினார்.


கலை விழாவின் தொடர்ச்சியாக காலை 10.50 மணி அளவில் போட்டிகள் தொடங்கப்பட்டு கல்லூரியின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. 21 கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வருகை புரிந்துஇ குழு நடனம், குறும்படம், குழு இசை,  அடுப்பில்லா உணவு, விகடகவி, முக ஓவியம்,  தனிநபர் நடிப்பு, விவாதம், கவிதை எழுதுதல்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) வினாடி வினா,  ரங்கோலி, ஆடை அலங்கார அணி வகுப்பு போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். கலை விழாவின் தொடர்ச்சியாக மாலை 4 மணி அளவில் நிறைவு விழா தொடங்கியது. கல்லூரி இசைக் குழுவினரின் இறைவேண்டல் பாடலுடன் தொடங்கி, கிறித்தவ மாணவர் இயக்கத்தின் தலைவி பிரிசில்லா அவர்களால் இறைவேண்டல் செய்யப்பட்டது. 


மாணவப் பேரவையின் கலைக்குழு செயலாளர் கீர்த்தி  நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்றார். மாணவப்  பேரவையின் கலைக்குழு செயலாளர் மோனிஷா சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்று அறிமுகப்படுத்தினார்.  தழல் ’23 நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் சமூக ஊடகங்களில் செல்வாக்கைப் பெற்றவருமான  எம்.ஆண்ட்ரூஸ் அவர்கள் பங்கேற்று உடல்,  மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தும் ஜெயிக்கும் தன்னம்பிக்கைத் தழலை மனதில் நிறுத்தி  விருதுகளை வாங்குவதற்கு முற்படுங்கள் என்றும் வலியுறுத்தினார்.  பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கிடையேயான முதல் பரிசுக்கான கேடயத்தை சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி  வென்றது. இரண்டாம் பரிசுக்கான கேடயத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி வென்றது. நிகழ்வின் நிறைவாக நன்றியுரை வழங்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.


தழல் ’23 கலைவிழாவினை  டோக் பெருமாட்டி கல்லூரி மாணவப் பேரவை உறுப்பினர்கள் சிறப்புற நடத்தினர்.  இக்கலை விழா இனிதே நடைபெறுவதற்கு மாணவர் நலனாளர்களான முனைவர் ஆரோக்கியா சியாமளா  பனியரசி, முனைவர் மௌன சுந்தரி, முனைவர் ஜூலி பிரதிபா,  முனைவர் எஸ்தர் எலிசபெத் கிரேஸ் ஆகியோர் மாணவப் பேரவைக்குழுவினை    ஊக்கப்படுத்தி விழா சிறப்புற உதவிபுரிந்தனர். இந்நிகழ்வு மாணப்பேரவையின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !