தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாதம் 10,000 வேலைவாய்ப்புகள் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Madurai Minutes
0

சட்டமன்றத்தில் மூன்றாவது நாளான இன்று வினா - விடை நேரம் நடைபெற்றது. திருவள்ளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். மேலும் வேலைவாய்ப்புகள் தொடர்பாகவும் விரிவாக பேசினார். 


"சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் பிடிஆர், “திருவள்ளூர் அருகேயுள்ள சோழிங்கநல்லூர் எல்காட் நிறுவனம் 377.08 ஏக்கர் நிலப்பரப்பில் 258 கோடி ரூபாய் முதலீட்டில் எல்கோசெஸ் (ELCOSEZ) உருவாக்கியுள்ளது. இதில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி 6088 சதுர அடி பரப்பளவு கொண்ட நிர்வாக கட்டடத்தையும் கட்டியுள்ளது. இதில், குத்தகை அடிப்படையில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் 1.09 கோடி சதுர அடி பரப்பளவில் தங்களது கட்டிட பணிகளை முடித்து 67,000 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது."

 

"இந்த தனியார் நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கம், மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல ஏற்றுமதி சார்ந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் இடத் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டடப் பணிகள் 88.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இதுவரை எல்காட் உருவாக்கிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் இதுவே பெரியது என்றார். ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக தகவல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்குவதற்கான தேவை தற்போது எழவில்லை ” என்று தெரிவித்தார்.


"இதையடுத்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், ஐடி பார்க் என்றாலே சோழிங்கநல்லூர், ஓஎம்ஆர்தான் செல்ல வேண்டும் என்று இல்லாமல் திருவள்ளூரில் அமைத்தால் அங்குள்ள பட்டதாரிகள் பயன்பெறுவார்கள்? என்று கேட்டார். இதற்கு பதில் சொன்ன அமைச்சர், “கோரிக்கை நியாயமானது. ஒரே இடத்தில் ஐடி பூங்காக்களை உருவாக்கக் கூடாது. ஆவடி அடுத்த பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை டைடல் பார்க் நிறுவனம் நிறுவி வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அவசியம் இல்லை” என்றார்.


"தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளது. இன்று கூட 1000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனத்தின் தொடக்க நிகழ்வுக்கு செல்கிறேன். தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் ஒரு மாதத்திற்கு 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது. திருவள்ளூரில் பெரிய நிறுவனமோ அல்லது தொழிலதிபர்களோ முன்வந்தால் அதற்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப பூங்காவோ அல்லது கட்டடமோ கட்டிதர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்."


"தமிழகத்தின் மதுரை, திருச்சி, கோவை, வேலூர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி துறை கால் பதித்து வருகிறது. சமீபத்தில் கூட பேட்டியளித்த பிடிஆர், தமிழகத்தில் 10 இடங்களில் புதிய ஐடி பார்க்குகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இப்போது மாதம் 10,000 வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன தகவலால் பட்டதாரி இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !