மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ஸ்ட்ரோக் ஹெல்ப்லைன் சேவையை தொடங்கி வைத்த மதுரை மேயர்

Madurai Minutes
0

மூளையில் ஏற்படும் பக்கவாதம் / ஸ்ட்ரோக் பாதிப்பின்போது அதிவேக சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பிரத்யேக ஹெல்ப்லைன் (0452-2581212) சேவையை மாண்புமிகு மதுரை மாநகர மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் இன்று தொடங்கி வைத்தார்.  2023 அக்டோபர் 29-ம் தேதியன்று உலக பக்கவாத தினம்  அனுசரிக்கப்படுவதையொட்டி இச்சேவை அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. 


இந்த ஹெல்ப்லைன் எண்ணிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்யப்படும்போது, நோயாளியின் அமைவிடத்திற்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் உயிர் காக்கும் திறனுள்ள அவசர சிகிச்சை ஊர்தியை மருத்துவமனை உடனே அனுப்பி வைக்கிறது.  நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வரும் நேரத்தின்போது, மருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய அவசரநிலை மருத்துவ செயல்பாட்டின் ஒரு பகுதியாக பயிற்சியளிக்கப்பட்ட துணை மருத்துவ மற்றும் அவசரநிலை சிகிச்சைப் பணியாளர்கள், இரத்த அழுத்தத்தையும்  இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவது தொடர்பான முதலுதவியை அந்நோயாளிக்கு வழங்குவார்கள்.  ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்பு நிலைமைகளின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் நோயாளி வகைப்படுத்தப்படுவார்.  நரம்பியல், Interventional நரம்பியல் மற்றும் கதிர்வீச்சியல் துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களது குழு நோயாளிக்கு உடனடியாக சிகிச்சையளிக்கும். 


ஸ்ட்ரோக் – ன் வகையை தீர்மானிக்கவும், மூளையில் ஏற்பட்டுள்ள சேதத்தை  மதிப்பிடவும், நோயறிதலை மேற்கொள்ளவும் செய்யப்படும் சிடி அல்லது எம்ஆர்ஐ சோதனைகள் செய்யப்படுவதற்கு முன்னதாக நோயாளிகள் முன்தொகை எதையும் செலுத்த வேண்டியதில்லை.  பக்கவாதத்தின் காரணம் மற்றும் தீவிரத்தன்மையைச் சார்ந்து, நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினரோடு செய்யப்படும் கலந்தாலோசனை அடிப்படையில் விருப்பத்தேர்வுகள் தீர்மானிக்கப்படுகின்றன.  மருந்துகள், இரத்தஉறைவுக்கட்டிகளை உடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி அவைகளை கரைக்கும் சிகிச்சை (த்ராம்பாலிசிஸ்) அல்லது இரத்தஓட்டத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கு இரத்தநாளங்களிலுள்ள இரத்தஉறைவுக் கட்டிகளை அறுவைசிகிச்சைகளின் மூலம் அகற்றும் சிகிச்சை (த்ராம்பெக்டாமி) ஆகியவை இதில் இடம்பெறக்கூடும். 


ஹெல்ப்லைன் சேவையை தொடங்கி வைத்து பேசிய மாண்புமிகு மதுரை மாநகர மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த், “மீனாட்சி மிஷன்  மருத்துவமனையின் ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புகளுக்கான தொடர்பு உதவி எண் சேவையை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.  மதுரை மாநகரம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவும் மிகச்சிறப்பான சேவையாக இது இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகளவில் உயிரிழப்பிற்கும், திறனிழப்பிற்கும் முன்னணி காரணங்களுள் ஒன்றாக பக்கவாத நேர்வு உருவெடுத்திருக்கிறது.  கட்டுப்படுத்தப்படாத மிகை இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் மனஅழுத்தம் போன்ற ஆபத்து காரணிகளை நாம் தவிர்க்க முடியும் என்றால், 90 சதவிகித ஸ்ட்ரோக் / பக்கவாத நேர்வுகள் வராமல் தடுக்கப்படக்கூடியவையாகவே இருக்கின்றன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.  ஒருவருக்கு பக்கவாத நேர்வு ஏற்பட்டாலும் கூட, உரிய நேரத்திற்குள் மருத்துவமனையில் வழங்கப்படும் சரியான சிகிச்சை அவர்களது உயிரை காப்பாற்றி விடும்.  பக்கவாத பாதிப்பு அறிகுறி வெளிப்படுவதிலிருந்து, 4.5 மணி நேரம் என்ற Golden Hour- க்குள் மருத்துவமனையை நோயாளி சென்றடைவது மிக முக்கியம்.  மதுரை மாநகரில் உயர்நிலை சிகிச்சை வழங்கும் பல நல்ல மருத்துவமனைகளும், நிபுணத்துவம் மிக்க மருத்துவ வல்லுநர்களும் இருப்பது சாதகமான அம்சமாகும். ஸ்ட்ரோக் / பக்கவாதத்திற்கான சிகிச்சை உட்பட அனைத்து உயிர்காப்பு சிகிச்சைகளுக்கும் காப்பீடு வசதியை நமது முதலமைச்சரின் விரிவான உடல்நல சிகிச்சை திட்டம் வழங்குகிறது. பக்கவாத பாதிப்பு நிகழாமல் தடுப்பதற்கும் மற்றும் அவைகள் நேரும்போது அதிவிரைவு சிகிச்சை வழங்குவதற்கும் பிற நகரங்களுக்கு வழிகாட்டுமாறு மதுரையை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.” என்று கூறினார். 


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன், இந்த ஹெல்ப்லைன் சேவை பற்றி பேசுகையில், “வாழ்நாளில்  ஸ்ட்ரோக் / பக்கவாத நேர்வு ஏற்படுவதற்கான இடர்வாய்ப்பு கடந்த 17 ஆண்டுகளில்  50% உயர்ந்திருக்கிறது.  இன்றைய காலகட்டத்தில் நான்கு நபர்களில் ஒருவருக்கு ஸ்ட்ரோக் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.  உலகளவில் ஒரு ஆண்டில் 15 மில்லியன் நபர்களுக்கு ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுகிறது.  இவர்களுள் 5 மில்லியன் நபர்கள் உயிரிழக்கின்றனர் மற்றும் மற்றுமொரு 5 மில்லியன் நபர்கள் நிரந்தர திறனிழப்பிற்கு ஆளாகின்றனர்.  இதன் காரணமாக, அவர்களது குடும்பங்களின் மீதும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பெரும் சுமை சுமத்தப்படுகிறது.  எனினும், 4.5 மணி நேரம் என்ற Golden Hour- க்குள் மருத்துவ சிகிச்சையை அளிப்பதன் மூலம் உயிரிழப்பு மற்றும் நிரந்தர திறனிழப்பு விகிதத்தை நம்மால் பெருமளவு குறைக்க முடியும்.  இந்நோக்கத்திற்காகவே ஸ்ட்ரோக் நேர்வுக்கு அதிவிரைவு சிகிச்சைக்குழு மற்றும் ஹெல்ப்லைன் சேவையை நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.” என்று கூறினார்.


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி “குளறும் பேச்சு, வாய் ஒருபக்கம் சரிந்து தொங்குவது, பார்வைத்திறனிழப்பு, கால்கள் மற்றும் கைகள் மரத்துப்போதல், கைகளை உயர்த்த இயலாமை போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஏதும் ஒரு நபருக்கு திடீரென்று ஏற்படுமானால், இதற்கான பிரத்யேக உதவி எண்ணை  காலதாமதமின்றி உடனடியாக அழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.  ஸ்ட்ரோக் / பக்கவாதம் ஏற்பட்டதற்குப் பிறகு ஒவ்வொரு நிமிடமும் இலட்சக்கணக்கான நியூரான்கள் இழக்கப்படுகின்றன என்பதால், நேரம் மிக மிக முக்கியமானது.  தீவிர குருதித்தடை, ஸ்ட்ரோக் நிகழ்ந்தவுடன் சுமார் 4 மில்லியன் நியூரான்கள், 12 மில்லியன் மூளை செல்கள் மற்றும் 15 பில்லியன் நரம்பிணைப்புகள் ஒவ்வொரு நிமிடமும் இழக்கபடுகின்றன.  பக்கவாதத்திற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாதபோது ஒவ்வொரு நிமிடமும் ஒரு நோயாளி 1.9 நியூரான்களை வழக்கமாக இழக்கிறார் என அறியப்படுகிறது. எனவே, ஸ்ட்ரோக் / பக்கவாத நேர்வின்போது ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது; ஒருசில நிமிடங்களை கூட வீணாக்கக்கூடாது” என்று டாக்டர். ரமேஷ் அர்த்தநாரி சுட்டிக்காட்டினார்.


அவசரநிலை மருத்துவத் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் நரேந்திர நாத் ஜெனா, நரம்பியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். T.C. விஜய் ஆனந்த், நரம்பியல் துறை நிபுணர் டாக்டர் S.நரேந்திரன், நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர்.K.செல்வமுத்துக்குமரன், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். செந்தில் குமார். நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் நிபுணர், டாக்டர். K. கௌதம், இமேஜிங்  மற்றும் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர், டாக்டர். T..முகுந்தராஜன், அத்துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் N.கருணாகரன் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். R. கணேஷ் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அவசரநிலை ஸ்ட்ரோக் சிகிச்சை குழு மட்டுமே வேர்ல்டு ஸ்ட்ரோக் ஆர்கனைசேஷனால்  (2023) இந்தியாவில் தர அங்கீகாரம் (வைர தரநிலை விருது) வழங்கப்பட்டிருக்கும்  ஒரே அவசரநிலை சிகிச்சைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.  தென்தமிழ்நாட்டில் பக்கவாதத்திற்கு உடனடி சிகிச்சை வழங்கும் தயார்நிலை திறன்கொண்ட மையமாகவும் இம்மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.  இம்மருத்துவமனையின் இக்குழுவில் அவசரநிலை சிகிச்சை மருத்துவர்கள் நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள், இரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவர்கள், கதிர்வீச்சியல் மருத்துவர்கள் மற்றும் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் சிகிச்சை நிபுணர்கள் இடம்பெற்று நாள் முழுவதும் உடனடி சிகிச்சையை வழங்குகின்றனர். 


ஸ்ட்ரோக் / பக்கவாதம் என்பது, இரத்தஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகின்ற திடீர் மூளை காயமாகும்.  குருதித்தடை பக்கவாதம் மற்றும் இரத்தக்கசிவு பக்கவாதம் என பக்கவாதத்தில் இரு வகைகள் இருக்கின்றன.  மூளைக்கு செல்லும் இரத்தத்தை ஒரு அடைப்பு அல்லது உறைவுக்கட்டி தடுக்கும்போது குருதித்தடை ஏற்படுகிறது.  மிகப்பொதுவான பக்கவாத வகையாக இதுவே இருக்கிறது.  மூளையிலுள்ள ஒரு இரத்தநாளம் கிழியும்போது அல்லது அதில் கசிவு ஏற்படும்போது இரத்தக்கசிவு பக்கவாதம் ஏற்படுகிறது.  இதனால், மூளைக்குள் அல்லது மூளையைச் சுற்றி இரத்தப்போக்கு உருவாகிறது.  இது அரிதாகவே ஏற்படுகிறது என்றாலும் கூட, குருதித்தடை பக்கவாதத்தைவிட பல நேரங்களில் அதிக தீவிரமானதாக, கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. 


ஏறக்குறைய 90% ஸ்ட்ரோக்குகள் கீழ்வரும் 10 இடர்காரணிகளோடு தொடர்புடையவையாக  இருக்கின்றன; மிகை இரத்தஅழுத்தம், ஏட்ரியல் ஃபைப்ரில்லேஷன் (சீரற்ற இதயத்துடிப்பு), நீரிழிவு, மனஅழுத்தம்  & மனச்சோர்வு, அதிகளவு மது அருந்துதல், தவறான உணவுமுறை, அதிக கொழுப்பு, உடற்பருமன், புகைப்பிடித்தல் மற்றும் உடற்பயிற்சியின்மை.  ஸ்ட்ரோக்கிற்கான முக்கிய சிகிச்சை வழிமுறைகளில் இரத்த உறைவுக்கட்டியை உடைப்பதற்கான மருந்துகளை வழங்குதல், இரத்த கட்டிகளை உடைப்பதற்கும் மற்றும் புதிய கட்டிகள் உருவாகாமல் தடுக்கவும் செய்யப்படும் த்ராம்பாலிசிஸ் என்ற மிகக் குறைந்த ஊடுருவலுடன் கூடிய மருத்துவ  செயல்முறை மற்றும் இரத்தநாளத்திலுள்ள (தமனி அல்லது நரம்பு) இரத்தக்கட்டியை அகற்றுவதற்கான அறுவைசிகிச்சை  ஆகியவையும் உள்ளடங்கும். 


எட்டு பக்கவாத நேர்வுகளுள் உயிர்பிழைத்தவர்களில் ஒருவர் முதல் 30 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் மற்றும் 25 சதவீத நபர்கள் முதல் ஆண்டுக்குள் இறக்கின்றனர். எனினும், சரியான அளவிலான மறுவாழ்வு சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் பேச்சு அறிவுத்திறன், இயக்கத்திறன் மற்றும் உணர்திறன்கள் ஆகியவற்றை படிப்படியாக சரி செய்யமுடியும். ஒரு ஸ்ட்ரோக் நேர்விலிருந்து வெறும் 10% நபர்கள் மட்டுமே முழுமையாக அப்பாதிப்பிலிருந்து மீண்டு வரமுடியும் என்ற போதிலும்  25% நபர்களுக்கு சிறிய பாதிப்புகளும் மற்றும் 40% நபர்களுக்கு சிறிதளவு சிறப்பு பராமரிப்பு சேவையுடன் சமாளிக்கத்தக்க அளவிற்கு மிதமான பாதிப்புகளும் ஏற்படுகின்றன.


உலக பக்கவாத தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. #GreaterThan stroke என்பது நடப்பு ஆண்டின் உலக பக்கவாத தினத்தின் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. பக்கவாதம் ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவும் நாம் அனைவரும் அச்செயல்பாட்டில் ஈடுபடுவதற்கான தேவையை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது; “ஸ்ட்ரோக் / பக்கவாதத்தைவிட, ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றால் #GreaterThan stroke (பக்கவாதத்தைவிட வலிமையானவர்களாக) நம்மால் இருக்க முடியும்” என்று இது சுட்டிக்காட்டுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !