மத்திய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

Madurai Minutes
0

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் நாட்டிலுள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் ஏழு நாட்கள் தேசிய ஒருமைப்பாடு முகாம் மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  


இம்முகாமில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருகின்றனர். 


தினமும் காலை 6 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில்  உடற்பயிற்சி, கருத்தரங்கம், குழு விவாதம், மாணவ-மாணவியருக்கான தனித் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள், கலாச்சார நடனம் போன்றவை இடம்பெற்று வருகிறது.


முகாமின் ஆறாவது நாளான இன்று புதுச்சேரி  கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மத்திய அரசு இளைஞர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களையும், வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேச முன்னேற்றத்திற்கான உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இது போன்ற நிகழ்ச்சிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் நடத்தி வருகிறது என்றும், இளைஞர்கள் தங்களுடைய மாணவ பருவத்திலேயே தேசிய ஒருமைப்பாட்டு சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 


முன்னதாக, கல்லூரி முதல்வர்  டாக்டர் அப்துல் காதிர் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா வரவேற்புரையில்   தேசிய ஒருமைப்பாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி இம்முகாமின் நோக்கத்தினை பற்றி விவரித்தார். கல்லூரியின் பொருளாளர் சகிலா ஷா முன்னிலை வகித்தார். 


நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாய்ராம், மாநில அலுவலர் பேராசிரியர் செந்தில்குமார், கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பாண்டி, அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி, முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், மற்றும் பேராசிரியர்கள்  ராமுத்தாய், மணிமேகலை, விக்னேஸ்வர சீமாட்டி, உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்குமார், நாராயணபிரபு, சிஸ்டம் இன்ஜினியர் உதயகதிரவன் மற்றும் திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர்கள் பானுப்பிரியா, கிருஷ்ணவேணி ஆகியோர் செய்தனர். அமைச்சர் நமச்சிவாயம் ஆற்றிய தமிழ் உரையை சென்னை சேர்ந்த பேராசிரியர் மாதங்கி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கிருஷ்ணகுமார் பாண்டிச்சேரி பற்றிய கவிதை வாசித்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முனைவர் பாண்டியன் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !