தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை நடத்திய குறைப்பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

Madurai Minutes
0

டெல்டா மாவட்டங்களில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர்சிகிச்சை வழங்கும் மருத்துவமனையாக புகழ்பெற்றிருக்கும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளது ஒன்றுகூடல் நிகழ்வை தனது வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது. 


இதில், தங்களது குழந்தைகளோடு சுமார் 50 பெற்றோர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளது பெற்றோர்கள் ஓரிடத்தில் சந்திக்கவும், கலந்துரையாடவும் மற்றும் குழந்தைகளை வளர்த்தெடுப்பதில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பை இந்நிகழ்வு வழங்கியது. தங்களது குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பதில் உள்ள சவால்களை சமாளிக்க இப்பெற்றோர்களுக்கு உதவுவதற்காக ஒரு ஆதரவு குழு தொடங்கப்படுவதும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. பராமரிப்பையும், சரியான மருத்துவ சிகிச்சையையும் மற்றும் உரிய நேரத்தில் பின்தொடர் சிகிச்சை வருகைகளையும் தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இப்பெற்றோர்களை ஊக்குவிப்பதும், அவர்களுக்கு உத்வேகமளிப்பதும் இந்த ஆதரவு குழு தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும். 


சமீபத்தில் உலகெங்கிலும் “உலக குறைப்பிரசவ தினம்” அனுசரிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், உரிய காலத்திற்கு முன்பே பிறந்த குழந்தைகளின் ஒன்றுகூடல் நிகழ்வை நடத்த இம்மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அதன் அடிப்படையில், நடைபெற்ற இந்நிகழ்வில் இம்மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ரவிச்சந்திரன், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை நல பிரிவின் சிறப்பு நிபுணர் டாக்டர். ஆர். சக்திவேல், குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர். ஆர். ரேஷ்மா, அவசரசிகிச்சை பிரிவின் முதுநிலை மருத்துவ நிபுணர், டாக்டர்.சரவணவேல், மகப்பேறியல் மற்றும் பெண் நோயியல் துறையின் முதுநிலை  மருத்துவநிபுணர் டாக்டர். நிர்மலா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட பெற்றோர்களிடம் குறைப்பிரசவ குழந்தைகளை வளர்ப்பது மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்து தெளிவான விளக்கங்களுடன் மருத்துவ நிபுணர்கள் சிறப்புரை ஆற்றினர். அத்துடன் கேக் வெட்டும் நிகழ்வு மற்றும் பெற்றோர்கள் பங்கேற்புடன் குதூகலமான வேடிக்கை நிகழ்வுகள் ஆகியவையும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. 


பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை நல பிரிவின் சிறப்பு நிபுணர் டாக்டர். ஆர். சக்திவேல் பேசுகையில், “சுமார் நாற்பது வாரங்கள் என்பதாக வழக்கமான கர்ப்பகாலம் இருக்கிறது. கருத்தரித்ததிலிருந்து 37 வாரங்களுக்கு முன்னதாக, பிறக்கும் குழந்தைகள், குறைப்பிரசவ குழந்தைகள் என அழைக்கப்படுகின்றனர். உலகளவில் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 13.4 மில்லியன் குழந்தைகள் உரிய காலத்திற்கு முன்னதாகவே பிறக்கின்றன என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதைவிட அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள், அதாவது 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றனர் (பிறக்கும்போது 2.5 கி.கி. எடைக்கும் குறைவாக). பச்சிளம் குழந்தைகள் இறப்பில் மிக பொதுவான, பரவலான காரணமாக குறைப்பிரசவம் உருவெடுத்திருக்கிறது. ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும், 5-ல் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவிற்கு குறைப்பிரசவ நிகழ்வுகள் காரணமாக இருக்கின்றன. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கு சுவாச செயல்திறனிழப்பு, தொற்று மற்றும் பிறவி (மரபுவழி) குறைபாடுகள் ஆகியவை மூன்று முதன்மை காரணங்களாக அறியப்பட்டிருக்கின்றன. 


உரிய காலஅளவிற்கு முன்னதாக ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் உடல்நலத்திற்கான ஆபத்துகளும் அதிகமாக இருக்கின்றன. குறைப்பிரசவ குழந்தைகளுக்கு நுரையீரல் முதிர்வு நிலையும் மோசமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் பிறந்த உடனேயே செயற்கை சுவாசம் அளிக்கும் வெண்டிலேட்டர் பராமரிப்புக்கான அவசியம் இருக்கிறது. அத்துடன், ஊட்டச்சத்து ஆதரவு தேவைப்படுகிறவாறு குடல் அமைப்பும் முழுமையான வளர்ச்சியும் இக்குழந்தைகளுக்கு இருக்காது. பலவீனமான நோய் எதிர்ப்புத்திறனின் காரணமாக தொற்றுகள் ஏற்படுவதற்கு அதிக இடர்வாய்ப்புகளும் இவர்கள் இருப்பார்கள். இரத்தசோகை மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை பாதிப்புக்கான இடரும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இரத்தமேற்றல் மற்றும் ஃபோட்டோதெரபி போன்ற சிகிச்சைகளின் மூலம் இக்குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. குறைப்பிரசவ குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மூளை – நரம்பியல் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் மற்றும் அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் உரிய காலஅளவுகளில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவது இக்குழந்தைகளுக்கு அவசியமாக இருக்கும். பார்வைத்திறன் மற்றும் கேட்புத்திறன் மதிப்பாய்வும், இதய மற்றும் மூளை மீதான இமேஜிங் சோதனைகளும் இவர்களுக்கு தேவைப்படும். நீண்டகால அடிப்படையில் கற்றல், வளர்ச்சி, பார்வைத்திறன் மற்றும் கேட்புத்திறன் ஆகியவற்றிலும் கூட குறைப்பிரசவ குழந்தைகளுக்கு பிரச்சனைகள் வரக்கூடும்,” என்று கூறினார். 


இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “இந்த அளவுக்கு அதிகமாக உடல்நல பிரச்சனைகளும், சிக்கல்களும் வர வாய்ப்பு இருக்கிற போதிலும் சரியான மருத்துவ இடையீட்டு சிகிச்சை மற்றும் பரிசோதனைகளின் வழியாக இவைகள் வராமல் தவிர்க்க முடியும் அல்லது அவைகளுக்கு சிகிச்சையளித்து குணமாக்க முடியும். குறைப்பிரசவ குழந்தைகள், உரிய வளர்ச்சி நிலையை எட்டும் வரை மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) தங்கியிருப்பது பெரும்பாலும் தேவைப்படும். தாய்ப்பால் ஊட்டுவது மற்றும் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பை உருவாக்குவது ஆகிய நோக்கங்களுக்காக குழந்தை பிறப்பிற்குப் பிறகு தாயும், குழந்தையும் ஓரிடத்தில் ஒன்றாக சேர்ந்திருப்பதே சிறந்தது. பிறக்கும்போது குறைவான எடையுள்ள குழந்தைகளுக்கும் மற்றும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கும் அதிக பயனளிப்பதாக ‘கங்காரு தாய் பராமரிப்பு’ என அழைக்கப்படும் என்ற செயல்முறை இருக்கிறது. தாய் மற்றும் சேயும் நெருக்கமான உடல் தொடர்பும் மற்றும் பிரத்யேக தாய்ப்பாலூட்டலும் இதில் முக்கிய அம்சங்களாகும். வெண்டிலேட்டர் அல்லது வெண்டிலேட்டர் போன்ற சாதனம் அல்லது சுவாச ஆதரவுக்கு உதவுகிற ஒரு இயந்திரமான கன்டினுவஸ் பாசிட்டிவ் ஏர்வே பிரஷர் (CPAP) போன்றவையும் நுரையீரல் வளர்ச்சியையும், முதிர்வையும் மேம்படுத்துவதற்கு வளர்ச்சியூக்கி மருந்துகள், ஊசிவழியாக முழுமையான ஊட்டச்சத்தை வழங்குதல் மற்றும் பயிற்சிபெற்ற செவிலியரின் வளர்ச்சிக்கான ஆதரவு பராமரிப்பும் ஆகிய செயல்பாடுகள் குறைப்பிரசவ குழந்தைகளின் நலவாழ்வை உறுதிசெய்வதில் மிகப்பெரிய வேறுபாட்டை உருவாக்கமுடியும். உரிய காலஅளவுகளில் மருத்துவமனைக்கு பின்தொடர் வருகைகளை மேற்கொள்வது, உடல்நல பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணவும் மற்றும் தொடக்கத்திலேயே சிகிச்சை அளிப்பதற்கும் உதவும்,” என்று கூறினார்.


குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி பேசிய டாக்டர். சக்திவேல், “உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ள தாய்மார்கள், புற கருகட்டல் (சோதனை குழாயின்) மூலம் கருத்தரிப்பு, கருத்தரித்திருப்பவர்கள், கருப்பை, கருப்பை வாய் அல்லது சினைக்கொடி ஆகியவற்றில் பிரச்சனைகள் உள்ள பெண்கள் மற்றும் கருத்தரிப்புக்கு முன்பு குறைந்த உடல் எடை அல்லது மிகைப்பட்ட எடையுள்ள பெண்கள் ஆகியோர், குறைப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கும் இடர்வாய்ப்பில் இருக்கின்றனர். 17 வயதுக்கு முன்னதாக மற்றும் 35 வயதுக்கு பிறகு கருத்தரிப்பது மற்றும் கர்ப்ப காலத்தின்போது மன அழுத்தம் ஏற்படும் அதிர்ச்சியான நிகழ்வுகளை எதிர்கொள்வது  போன்றவை குறைப்பிரசவத்திற்கு பிற காரணங்களாக அறியப்படுகின்றன,” என்று விளக்கமளித்தார்.


குறைப்பிரசவத்தை தவிர்ப்பதற்கு முன்தடுப்பு நடவடிக்கைகளை அவர் கீழ்கண்டவாறு பட்டியலிட்டார்: பிரசவத்திற்கு முன்பு உரிய காலஅளவுகளில் மருத்துவரிடம் பரிசோதனைகளை செய்துகொள்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பது, நாட்பட்ட நோய் பாதிப்பு நிலைகளை சரிவர நிர்வகிப்பது, மன அழுத்தத்தை தவிர்ப்பது மற்றும் எச்சரிக்கும் பாதிப்பு அறிகுறிகளை அறிந்திருப்பது. குறைப்பிரசவ குழந்தைகளுக்கு விரிவான சிகிச்சை பராமரிப்பை மீனாட்சி மருத்துவமனை வழங்கி வருகிறது. பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவருடன் கலந்தாலோசனை, பச்சிளங்குழந்தைகளுக்கான அவசரநிலை சிகிச்சை, நிலை 3 – பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர்கள், ஃபோட்டோதெரபி மற்றும் உயிர்காப்புக்கான பிற சாதனங்கள் என அனைத்து வசதிகளையும், சேவைகளையும் இம்மருத்துவமனை கொண்டிருக்கிறது. சிறப்பான பயற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களைக் கொண்டு 24x7 முறையில் பச்சிளங்குழந்தைகளுக்கான கண்காணிப்பு சேவையையும் மற்றும் கனிவான அக்கறையுடன் சிறப்பான சிகிச்சை பராரிப்பையும் இம்மருத்துவமனை உறுதிசெய்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் உரிய காலஅளவுக்கு முன்னதாகவே பிறந்த குழந்தைகளிலிருந்து, மிகவும் முன்னதாகவே (26 முதல் 32 வாரங்களுக்குள்) பிறந்த குழந்தைகள் வரை 25க்கும் அதிகமான பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை இம்மருத்துவமனை காப்பாற்றியிருக்கிறது. 


குறைப்பிரசவம் தொடர்பாக ஏற்படும் உயிரிழப்புகள், சவால்கள், அவைகளை தவிர்ப்பதற்கு எளிய வழிமுறைகள் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதியன்று உலக குறைப்பிரசவ தினம் என்ற நிகழ்வு உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டின் இந்நிகழ்வின் கருப்பொருள், தோலோடு தோல் ஒட்டுகிற நெருங்கிய தொடர்பு (கங்காரு பராமரிப்பு) அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக குறைப்பிரசவ குழந்தைகளுக்கு வழங்கும் பலன்களை வலியுறுத்துகிறது. குழந்தை பிறந்த உடனே தொடங்கப்படும் தோலோடு தோல் ஒட்டுகிற நெருங்கிய தொடர்பும், பிணைப்பும் தொடுதல் மற்றும் பாசம் குறித்து குழந்தை உணர்வதற்கு உதவுகிறது; தாய்ப்பாலூட்டலை தொடர்ந்து பேணுவதில் இதுவொரு முக்கிய பங்காற்றுகிறது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !