ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விதிமீறலில் ஈடுபடும் திமுகவினர்: தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் புகார்

Madurai Minutes
0

 


ஈரோடு,

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.கவினர் விதிமீறலில் ஈடுபடுவதாகக் கூறி, அ.தி.மு.க ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஹெச்.கிருஷ்ணனுண்ணி, தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோரிடம் இன்று புகார் அளித்தனர்.

அதில், ``ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க-வினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மதிப்பதும், கடைப்பிடிப்பதும் இல்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த 10-ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி ஈரோடு காவிரிக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

இது குறித்து கடந்த 11-ம் தேதி புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுகிறாரோ என்று வாக்காளர்கள் சந்தேகப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமைச்சர்களின் அத்துமீறல்கள், ஆளுங்கட்சி கூட்டணியினரின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், தனியார் காலியிடங்கள் என 112 இடங்களில் பிரமாண்டமாக கூடாரம் அமைத்து தினமும் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை காலை முதல் இரவு வரை அங்கேயே அடைத்து வைக்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.1,000, 3 வேளை உணவு வழங்கப்படுகிறது. இந்த வகையில், தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதுவரை பல கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்திருக்கிறார். இவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்டிருக்கும் சில இடங்களில் அரசுக்குச் சொந்தமான சாலை மற்றும் அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற கூடாரம் அமைப்பதற்கு தேர்தல் அலுவலரிடமோ காவல்துறையிடமோ முறையான அனுமதி பெறப்படவில்லை. இந்தச் செலவுகளை எல்லாம் தோராயமாக கணக்கிட்டால் ரூ.35.64 கோடி எனத் தெரியவந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் எந்தவித வாகன அனுமதியும் பெறாமல் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி மற்றும் கட்சி சின்னங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பலர் அரசு முத்திரையுடன் கூடிய வாகனங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

உரிய அனுமதி இல்லாமல் அரசு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் அதற்கான செலவை வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும். தேர்தல் விதிமுறையை மீறி ஆளுங்கட்சியினர் பயன்படுத்தும் வாகனங்களிலுள்ள கட்சிக்கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும். அரசு முத்திரை சின்னத்தை பயன்படுத்தும் ஆளுங்கட்சியினர்மீது சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !