சிறுதானியங்களின் ஆரோக்கிய பலன்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அமைச்சர் பி.மூர்த்தி

Madurai Minutes
0

 

கேழ்வரகு, கம்பு போன்றவை ஏழை மக்களின் உணவு என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். இப்போது வசதி படைத்தவர்கள் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிறுதானியங்களை மருந்தாக நினைத்து பயன்படுத்துகின்றனர். சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை. அவற்றை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக நோய்கள் நம்மைத் தாக்க காரணம் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். சிறுதானியங்களையும் சேர்த்துக் கொண்ட உணவுதான் சிறந்தது என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்று வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி தெரிவித்தார்.


இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்துள்ள " அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த எட்டு நாட்கள் புகைப்படம் & டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய போது அமைச்சர் மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.


பல்லாயிரக்கணக்கான தியாகிகள் தம் இன்னுயிரை நீத்து நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்துள்ளனர் . அவர்களின் தியாகத்தை நாம் காலமெல்லாம் போற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மூலமும் அந்தந்த மாவட்டத்தில் வெளித்தெரியாத தியாகிகள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் திரு. மூர்த்தி மேலும் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர் தலைமை வகித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மதுரைக்கு முக்கிய பங்கு உண்டு. மகாத்மா காந்தி ஐந்து முறை மதுரை வந்துள்ளார். ஜாலியன் வாலா பாக் படுகொலை போன்ற கொடுஞ்செயல் பெருங்காம நல்லூரில் நடந்துள்ளது. காந்தி அரையாடைக்கு மாறியது மதுரையில் தான். மாணவர்கள் வரலாற்றைப் படிப்பதும் தெரிந்து கொள்வதும் முக்கியம் என்று ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார்.


நிகழ்ச்சிக்கு மதுரை மாநகராட்சி ஆணையர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தார்.


நிகழ்ச்சியில் சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனியுரை நிகழ்த்தினார்.


மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குநர் திரு.ஜெ.காமராஜ் நோக்கவுரை ஆற்றினார். வேளாண்மை இணை இயக்குநர் திரு.த.விவேகானந்தன் கருத்துரை ஆற்றினார்.


மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.டி.நாகராஜன், 31ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு வி.முருகன் ஆகியோரும் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


பள்ளிகளுக்கு இடையிலான ஓவியப் போட்டி மற்றும் பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் திரு மூர்த்தி பரிசுகள் வழங்கினார்.கண்காட்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய கள அலுவலகம், அஞ்சல் துறை, ஆதார் திருத்தம், காசநோய் பிரிவு, பொது சுகாதார துறை, உணவு பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.


மதுரை ஸ்ரீசத்குரு சங்கீத வித்யாலயா மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் மத்திய மக்கள் தொடர்பகத்தில் பதிவு பெற்ற புனிதம் கலை மேம்பாட்டு மைய கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


முன்னதாக மத்திய மக்கள் தொடர்பக புதுச்சேரி துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்றார். நிறைவில் திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் திரு.பி.கோபகுமார் நன்றி கூறினார்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர்கள் திரு போஸ்வெல் ஆசிர் (மதுரை), எஸ்.வீரமணி (புதுச்சேரி) மற்றும் பி.வேல்முருகன் (திருநெல்வேலி) ஆகியோர் செய்திருந்தனர்.Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !