நாட்டு முன்னேற்றம் மொழி வளர்ச்சி குறித்த உயர்ந்த லட்சியங்கள் மாணவர்களுக்கு வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Madurai Minutes
0


 மதுரை

இந்திய சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவையொட்டி இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற பலர் தன்னலம் கருதாது தியாகங்கள் செய்துள்ளனர். அவர்கள் தங்கள் வளர்ச்சிக்காக முடிவு எடுக்காமல் மற்றவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முடிவு எடுத்தனர். அதனால்தான் அவர்கள் இன்று உதாரணத் தலைவர்களாக உள்ளனர். மாணவர்களும் இந்தக் கல்விப் பருவத்திலேயே நாட்டின் முன்னேற்றம் மற்றும் மொழி வளர்ச்சி குறித்த உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் கேட்டுக் கொண்டார்.

இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல அலுவலகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ஏற்பாடு செய்துள்ள அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு குறித்த எட்டு நாட்கள் புகைப்படம் & டிஜிட்டல் கண்காட்சியின் மூன்றாம் நாள் நிகழ்வில் (6.2.2023) சிறப்புரை ஆற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் குறிப்புகளுடன் உள்ளன. மாணவர்கள் இவர்களில் யாராவது ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவரை தமது வாழ்வின் உதாரணத் தலைவராக அதாவது ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றை பாடமாக மட்டும் அல்லாமல் வழிகாட்டுவதற்காகவும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு.வெங்கடேசன் மேலும் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குநர் முனைவர் தி. சிவக்குமார் தலைமை வகித்தார். வரலாறும் இலக்கியமும் மாணவர்களுக்கு முக்கியமானவை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். இலக்கியமானது புத்தாக்கம் மற்றும் கற்பனை மூலம் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும். வாழ்நாள் முழுவதும் கற்பதை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சிவக்குமார் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி துணை மேயர் திரு.டி.நாகராஜன் முன்னிலை வகித்தார்.

 கல்லூரி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திரு.வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார்.

 மத்திய மக்கள் தொடர்பகத்தில் பதிவு பெற்ற திண்டுக்கல் கோட்டை கலைக்குழு கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவி அலுவலர்கள் திரு போஸ்வெல் ஆசிர் (மதுரை), எஸ்.வீரமணி (புதுச்சேரி) மற்றும் பி.வேல்முருகன் (திருநெல்வேலி) ஆகியோர் செய்திருந்தனர்.

 திருநெல்வேலி கள விளம்பர அலுவலர் திரு கோபக்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !