மார்ச் 8 முதல் மதுரை வழியாக ரயில்கள் வழக்கம்போல் இயக்கம்

Madurai Minutes
0

 


மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக சில ரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. புதிய மின்மயமாக்கல் ஏற்பாடுகள், புதிய ரயில் பாதை இணைப்புகள், புதிய சைகை மின்னணு கைகாட்டி விளக்குகள், காலி ரயில் பெட்டி தொடர்களை ரயில் நிலையத்திலிருந்து எடுத்து செல்ல தனி பாதை அமைப்புகள், ‌ ரயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரயில் பாதை, புதிய நடைமேடை, நடை மேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்று விட்டன. எனவே மார்ச் 8 முதல் மதுரை வழியாக அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயங்கும். மதுரை ரயில் நிலையத்தில் சராசரியாக 65 பயணிகள் ரயில்கள், 10 சரக்கு ரயில்கள்

கையாளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற ரயில் பாதை இணைப்பு பணிகளால், மதுரை ரயில் நிலையத்தில் கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் மூலம் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படும். இதற்காக 75 சென்டிமீட்டர் அகல கணிப்பொறி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் ரயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல்கள், ரயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. கணிப்பொறி "மௌஸ்" மூலம் நிலைய அதிகாரி ரயில்களை இயக்க பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்ற பணிகளை எளிதாக செய்யலாம். எந்தெந்த ரயில் பாதைகளில் ரயில்கள் இருக்கின்றன என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். தெற்கு ரயில்வேயில் மதுரை ரயில் நிலையத்தில் அதிக அளவில் 385 ரயில் பாதைகள், 88 ரயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் மதுரை ரயில் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு 2019 ஆம் ஆண்டு தேனி அகல ரயில் பாதை துவக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற இணைப்பு பணிகளில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நிலைய அதிகாரிகள் நம்பிக்கையான, விரைவான முடிவுகள் எடுத்து ரயில்களை தாமதம் இல்லாமல் பாதுகாப்புடன் இயக்க முடியும். திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ரயில் நிலையத்திலும் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி - திருநெல்வேலி பிரிவு மற்றும் செங்கோட்டை - புனலூர் பிரிவுகளில் உள்ள ரயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !