துருக்கி கிக் பாக்ஸிங்கில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஊழியருக்கு இரு வெண்கலப் பதக்கங்கள்

Madurai Minutes
0

மதுரை மாநகரைச் சேர்ந்த திரு. பாலகுமாரன் ராஜேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற துருக்கி ஓபன் வாகோ உலகக்கோப்பை கிக்பாக்ஸிங் சேம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்று “லேசான தொடர்பு” (Light Contact) மற்றும் “புள்ளிகளுக்கான சண்டையிடல்” (Point Fighting) ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இந்தியாவிற்கும், மதுரை மாநகருக்கும் பெருமை தேடி தந்திருக்கும் இவர், தென்தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாக சிறப்பான மருத்துவ சேவையாற்றி வரும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  


துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் 2023 மே 18 முதல், 21-ம் தேதி வரை 4 நாட்கள் நிகழ்வாக துருக்கிய ஓபன் வாகோ உலக கோப்பை 2023  என்ற பெயரில்  கிக்பாக்ஸிங் போட்டித்தொடர் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது.  இந்த சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிலிருந்து மொத்தத்தில் 17 வீரர்கள் பங்கேற்றனர்.  இந்த சேம்பியன்ஷிப் நிகழ்வில் திரு. பாலகுமாரன் ராஜேந்திரன் பங்கேற்பதற்கான செலவுகளை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு அவரின் பங்கேற்பிற்கான நிதி ஆதாரத்தை வழங்கியது.  போட்டியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி இரு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்த தனது பணியாளரான கிக்பாக்ஸிங் வீரர் திரு. பாலகுமாரன் ராஜேந்திரனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மனமார பாராட்டி மகிழ்கிறது.  


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் இது தொடர்பாக கூறியதாவது: “’அறம் செய்து பழகு’ என்பதே மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (MMHRC) எமது கோட்பாடாகவும், அனைவரும் தவறாது பின்பற்றுவதற்கான மைய மதிப்பீடாகவும் இருக்கிறது.  பொது சுகாதாரத்தையும், மக்களின் நலவாழ்வையும் இலக்காக கொண்டு பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடத்துவதிலும் மற்றும் புதிய முன்னெடுப்புகளை ஆர்வத்துடன் மேற்கொள்வதிலும் MMHRC எப்போதும் முதன்மை வகிக்கிறது.  எமது பேரார்வம் மிக்க முன்னெடுப்பு செயல்திட்டங்களின் ஒரு பகுதியாக எமது பணியாளரான பாலகுமாரன் ராஜேந்திரனிடம் மிகச்சிறப்பான திறனும், சாதிக்கும் உணர்வும் இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டோம்.  கிக் பாக்ஸிங் விளையாட்டில் அவர் கொண்டிருந்த திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக நிதி ஆதாரங்களை வழங்கி அவரை நாங்கள் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறோம்.  அத்துடன் அவரது விளையாட்டுத்திறனை மேலும் உயர்த்துவதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிக்கு ஆஜராவதிலிருந்து அவருக்கு சிறப்பு விலக்களித்திருக்கிறோம்.  துருக்கிய ஓபன் வாகோ வேர்ல்டு கப் 2023 போட்டித்தொடரில் சிறப்பாக சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு அவர் மிக கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டார்.  எமது மருத்துவமனையின் பணியாளரான திரு. பாலகுமாரன், நமது நாட்டின் பிரதிநிதிகளுள் ஒருவராக துருக்கியில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டித்தொடரில் பங்கேற்று இரு பதக்கங்களை வென்றிருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறோம். நமது நாட்டிற்கு மட்டுமின்றி, MMHRC -க்கும் தனது வெற்றியின் மூலம் அவர் பெருமையை சேர்த்திருக்கிறார். நம் சமுதாயத்திலுள்ள இளம் தலைமுறையினருக்கு இந்த சாதனையின் மூலம் ஒரு முன்மாதிரி நபராகவும் அவர் உயர்ந்திருக்கிறார்.  அவரை எமது மருத்துவமனை நிர்வாகம் பெருமிதத்துடன் வாழ்த்துகிறது.”  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !