இந்தியாவின் நீடித்த வளர்ச்சி நிறுவன அமைப்புகள் மற்றும் செயலாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது

Madurai Minutes
0

நீடித்த வளர்ச்சிக்கு கொள்கைகள் அவசியமே, ஆனால் அதற்கு மக்களின் பங்களிப்பும் தேவை. நாம் ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை மக்களுக்கு நெருக்கமானதாக மாற்றாத வரை, சுற்றுச்சுழலுக்கு இயைந்த வாழ்க்கை முறைக்கான திட்டங்களை நிலைநிறுத்த தேவையான சமூக பங்களிப்பைப் பெறுவது சாத்தியமில்லை. அதனால்தான், இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கான முயற்சிகள் என்று வரும்போது, வார்த்தைகளை விட செயல்களே அதி முக்கியமானதாக இருக்கின்றன.


நீடித்த வளர்ச்சி  என்பது சுற்றுச்சூழல் பற்றிய கவலை மட்டுமல்ல; இது பொருளாதார மற்றும் சமூக மாற்றம் பற்றிய பார்வையும் ஆகும். சிறு விவசாயிகளைக் எடுத்துக் கொள்வோமே. பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. இருப்பினும் இந்த உற்பத்தியில் 5-16 சதவீதம் ஆண்டுதோறும் வீணடிக்கப்படுகிறது. 


ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் வாழ்வாதாரப் பொருட்களால் மாற்றங்கள் களத்தில் தெளிவாகத் தெரிகின்றன. ஆந்திராவில் உள்ள முசல்ரெட்டிகாரிபள்ளி என்ற சிறிய கிராமத்தில், கத்தரி, தக்காளி, பாகற்காய் மற்றும் வாழைப்பழங்களை சூரிய சக்தியால் இயங்கும் உலர்த்திகளில் உலர்த்துவதன் மூலம் மகளிர் குழுக்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 3.5 லட்சம் ஈட்டுகின்றனர். அதோடு பொருட்கள் வீணாவதும் தவிர்க்கப்படுகிறது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளை  இந்த நிறுவன முறை வழங்குகிறது.  புதிய சந்தைகள் மற்றும் வணிகங்களுக்கான வாய்ப்புகள் பெரிய அளவில் தேசிய கொள்கை வடிவமைப்புக்கு ஊட்டமளிக்கும். இந்தியா தற்போது வாழ்வாதாரத்திற்காக விநியோகிக்கப்படும் மறுசுழற்சி ஆதாரங்கள் குறித்த கொள்கையை கொண்ட முதல் நாடாக உள்ளது. 


இது போன்ற செயல்களின் மூலம், கடந்த பத்தாண்டுகளில் நீடித்த வளர்ச்சி நிலை மாற்றம் இந்தியர்களை நெருங்கி வந்திருக்கிறது. உலகின் தெற்கில் உள்ள மற்ற நாடுகளுக்கான பசுமை மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான வரைபடமாக செயல்படக்கூடிய மூன்று கூறுகள் இதில் உள்ளன.


முதலாவதாக, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை உருவாக்குதல். ஏறத்தாழ 100 சதவீத வீடுகளில் மின்சார வசதியை உறுதி செய்த சௌபாக்யா திட்டமாக இருந்தாலும் சரி, தூய்மையான சமையல் எரிபொருட்களுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் 9.5 கோடி எல்பிஜி இணைப்புகளை வழங்கிய உஜ்வாலா திட்டமாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்மார்ட் மீட்டர் அறிமுகம் மூலமாக மின் விநியோக முறை திட்டத்தை மக்களின் கைகளில் தந்ததாக இருந்தாலும் சரி இந்தியா ஆற்றல் மாற்றத்தை ஒவ்வொரு இல்லத்திற்குமானதாக மாற்றியுள்ளது. 


எல்.ஈ.டி விளக்குகள் மூலம் ஆற்றல் சேமிப்பை இலக்காகக் கொண்ட உஜாலா திட்டம், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3.9 கோடி டன் கார்பன் டை ஆக்ஸைடு  உமிழ்வை தவிர்க்கிறது. இதற்கு இணையாக, ஜல் ஜீவன் மிஷன் 8 கோடி கிராமப்புற வீடுகளுக்கு பாதுகாப்பான குடிநீருக்கான குழாய் இணைப்புகளை வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 40 சதவிகிதம் காற்று மாசுபாட்டை குறைக்கும் லட்சியத்தை தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் நிறைவேற்றி வருகிறது. மேலும், தூய்மை இந்தியா இயக்கம்  மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்துவதில் ஊக்கம் ஆகியவை நீடித்த வளர்ச்சிக்கான முன்முயற்சிகள் எப்படி பொதுமக்களின் சிந்தனையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உதாரணங்களாகும்.


குடிமக்களை மையமாகக் கொண்ட இதுபோன்ற முன்முயற்சிகளை நாம்  அதிக அளவில் செயல்படுத்தும்போது, தொழில்நுட்பங்களும் அவை தொடர்பான இடையீடுகளும் களத்தில் பயனுள்ளதாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய,  இல்லங்களிலிருந்து நிகழ்நேர மற்றும் உயர்தர தரவுகளை சேகரிக்க வேண்டும். நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது குறித்து மக்களிடமிருந்து அவ்வப்போது கருத்துகளை கேட்டறிய வேண்டும்.


இரண்டாவதாக, பொருளாதார அடிப்படையில் நீடித்த வளர்ச்சியை முன்னெடுத்தல். 2070க்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய, இந்தியாவின் ஆற்றல் அமைப்பு, பொருளாதார கட்டமைப்புகள் ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் தேவை. அதற்கான முன்னெடுப்புகள் பல இங்கே  ஏற்கெனவே உள்ளன. நாடு இப்போது உலகில் நான்காவது பெரிய புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய ஆற்றல் நிறுவப்பட்ட திறனைக் கொண்டுள்ளது. ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NRDC) மற்றும் பசுமைப் பணிகளுக்கான திறன் கவுன்சில் (SCGJ) ஆகியவற்றின் பகுப்பாய்வின்படி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில்  2030 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள். 


எதிர்காலத்தில் இந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க, பசுமைப் பணிகளுக்கான திறன் கவுன்சில், பசுமை வணிகங்கள் மற்றும் சேவைகள் குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. ஊரக இந்தியாவிற்கும் இந்த கருத்துக் கேட்பில் பங்களிக்கப்பட்டது. விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பொருட்கள் ரூ. 4 லட்சம் கோடி மதிப்புள்ள சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளதோடு அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்கு நேரடியாக அதிகாரம் அளித்து வருகின்றன. இதேபோல், விவசாயிகளுக்கான பிரதமரின் சூரிய சக்தி மின்திட்டம் (PM- KUSUM), அக்டோபர் 2022க்குள் 1.5 லட்சம் நீர்ப்பாசன பம்புகளை சூரியசக்தி மயமாக்கியது. விவசாயிகளின் பாசன செலவைக் குறைக்கும். அதே வேளையில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 


புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உலகம் விலகிச் செல்லும்போது, எதிர்கால எரிபொருளில், குறிப்பாக பசுமை  ஹைட்ரஜனில் நாம் பெரிய முன்னேற்றங்களை கண்டு வருகிறோம். உலகின் மிகப்பெரிய தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மூலம், இந்தியா, வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையில் சமரசம் செய்யாமல், உரங்கள் மற்றும் எஃகு போன்ற கனரக தொழிற்சாலைகளில் கார்பன் அளவைக் குறைக்க பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்த முடியும்.


இந்தியாவின் நகர்ப்புற மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு இவை உண்மையில் பெரிய படிகள் ஆகும். எவ்வாறாயினும், அவற்றின் உண்மையான திறனை வெளிப்படுத்த, உற்பத்தி,  உற்பத்தியோடு -இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (குறிப்பாக சுத்தமான தொழில்நுட்ப தயாரிப்புகளை திரட்டுவதை விட அதிக மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்துதல்), மூலம் அளவிடப்பட வேண்டும்.  நுகர்வோருக்கு மேம்பட்ட மூலதன ஆதரவு, விநியோகச் சங்கிலிகளின் பல்வகைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு  (எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கும் ஒரு FAME திட்டம் போன்றவை) வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். 


மூன்றாவதாக, இந்தியா சர்வதேச அளவில் நீடித்த வளர்ச்சி முயற்சிகளை உறுதிப்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டில் இந்தியாவும் பிரான்ஸும் தொடங்கிய சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி (ISA) சூரிய ஆற்றலின் கட்டணங்களைக் குறைப்பதற்கும், தேவையை மதிப்பிடவும் தற்போது கையெழுத்திட்டுள்ள 115 நாடுகளிடையே கூட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2019 இல் இந்தியாவால் தொடங்கப்பட்ட பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (CDRI) பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பேரழிவுகளை எதிர்கொள்ளும் பிராந்தியங்களில் அவற்றைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் காடுகளின் மூலம் 2.5-3 பில்லியன் டன்கள் கார்பன் புதைவுகளை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஈரநிலங்களின் மேலாண்மையை மேம்படுத்தவும் (பருவநிலை அபாயங்களைத் தடுப்பதில் அவற்றின் பங்கு உட்பட) மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாலைவனமாக்கலை தவிர்ப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டை நடத்தியபோது, 26 மில்லியன் ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுக்க இந்தியா உறுதியளித்தது.


இறுதியாக, மிஷன் லைஃப் (அல்லது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்பதனை, இந்தியா நிலையான வளர்ச்சி பற்றிய உரையாடலின் மையமாக வைத்துள்ளது. இது நம் மக்களுக்கு மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கும் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது, வாழ்க்கை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, சுழல் பொருளாதாரத்திற்கான சந்தைகளை செயல்படுத்துவது மற்றும் விருப்பங்களை மறுவரையறை செய்வது எப்படி என்பதான சவால்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. 


2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடு என்ற நிலையை அடைவதற்கான  பயணத்தின் ஏழு தூண்களில் "பசுமை வளர்ச்சி" ஒன்றாக இருக்கும் என்று இந்தியா அறிவித்துள்ளது. முதலில் மாசுபடுத்தும் எளிதான பாதையைத் தேர்வுசெய்து பின்னர் சுத்தம் செய்வது என்ற போக்கை விடுத்து பணி வாய்ப்புகள், வளர்ச்சி, அவற்றை நிலைப்படுத்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது எவ்வாறு என்ற கடினமான தேர்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பருவநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் மாசுபாடு ஆகிய மூன்று நெருக்கடிகளை தனியாக எதிர்த்துப் போராட முடியாது. இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு, விதிகளை கடைபிடித்தல், கடமைகளை நிறைவேற்றுதல், சுத்தமான தொழில்நுட்பங்களின் கூட்டு மேம்பாடு மற்றும் குறைந்த செலவில் அதிக பயனை அடைதல் ஆகியவை தேவை. இறுதியில், இந்த நீடித்த வளர்ச்சியின் மந்திரம் எப்போதும் மக்களுக்கும் சமூகங்களுக்கும் பொறுப்புகளை மீண்டும் வழங்குவதில் இருக்கும்.


டாக்டர் அருணாபா கோஷ் 

தலைமை நிர்வாக அதிகாரி, 

ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (http://ceew.in). 

தொடர்புக்கு: @GhoshArunabha @CEEWIndia

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !