மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மேற்கு ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நேரில் ஆய்வு

Madurai Minutes
0

மதுரை மாவட்டம், மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள், செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-


தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும். ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும். வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பாக பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ், ரூ. 31.423 கோடி மதிப்பீட்டில் 1,252 பணிகளும், மாநில நிதிக்குழு மானியம் (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ், ரூ. 12.99 கோடி மதிப்பீட்டில் 36 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ. 7.86 கோடி மதிப்பீட்டில் 129 பணிகளும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 18.58 கோடி மதிப்பீட்டில் 36 பணிகளும், 15ஆவது மத்திய நிதிக்குழு மானிய (கிராம, வட்டார, மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ், வரையறுக்கப்பட்ட நிதி ரூ. 157.55 கோடி மதிப்பீட்டில் 7,500 பணிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 724.95 கோடி மதிப்பீட்டில் 29,551 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) கழிப்பறை திட்டத்தின் கீழ், ரூ. 13.48 கோடி மதிப்பீட்டில் 2,280 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) முன்மாதிரி கிராம திட்டத்தின்கீழ், 13.48 கோடி மதிப்பீட்டில் 4,595 பணிகளும், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ. 63.22. கோடி மதிப்பீட்டில் 2,280 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ. 70.45 கோடி மதிப்பீட்டில் 1,214 பணிகளும், ஆதி திராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.73 கோடி மதிப்பீட்டில் 70 பணிகளும், தேசிய கிராம சுயாட்சி திட்டத்தின்கீழ், ரூ. 1.57 கோடி மதிப்பீட்டில் 42 பணிகளும், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ. 6.49 கோடி மதிப்பீட்டில் 2 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என செய்தியாளர் சுற்றுப் பயணத்தின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !