போர்ட்பிளேர் சர்வதேச விமான நிலையம், சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

Madurai Minutes
0

 

போர்ட்பிளேரில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள புதிய சர்வதேச விமான நிலையம் சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்கும் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 


அந்தமான் தீவின் போர்ட்பிளேரில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய (2023, ஜூன் 22) இணையமைச்சர் இவ்வாறு கூறினார். 


அப்போது சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், சமூக நலன், உள்கட்டமைப்பு வசதி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் ஊழல் இல்லா நல்லாட்சி, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உறுதி செய்வதில் மத்திய அரசு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார். தற்போது மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான நிதி, கோடிக்கணக்கான பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய இணையமைச்சர், 2047-ல் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றும் கனவை நனவாக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையும் நினைவுகூர்ந்தார். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அந்தமான் நிக்கோபர் நிர்வாகம் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அவர், சென்னை-போர்ட்பிளேர் இடையேயான கடலுக்கு அடியிலான கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் எனத் தெரிவித்தார். இதன் காரணமாக  அந்தமான் நிக்கோபர் தீவு உலக நாடுகளுடன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டிருப்பதாகவும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும், இதுவே நமது தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புரட்சிக்கான சான்று என்றும் தெரிவித்தார். 

மீனவர்களுக்கான பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்  சிறப்பம்சங்களை எடுத்துரைத்த டாக்டர் முருகன், மீன் ஏற்றுமதியில்  இந்தியா சாதனை அளவை எட்டியிருப்பதாகக் கூறினார். 6000 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் முதலீட்டில், மீன் வளத்துறையின் உள்கட்டமைப்புத்துறை வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாகவும், மீன் இறங்குதளம் மற்றும் குளிர்சாதன சேமிப்புக் கிடங்கு வசதி ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.  மீன்வளத்துறையின் முழுத்திறனையும் வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக நவீனப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அந்தமான் நிக்கோபர் தீவுகளின் வான்வழிப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய இணையமைச்சர் கூறினார். போர்ட்பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கப்படவுள்ளதாகவும், இந்த விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவையை தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  இந்த புதிய முனையத்திற்கான 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், எஞ்சிய பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் இயக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட இணையமைச்சர், இதன் மூலம் அந்தமான் நிக்கோபர் தீவுகளின் வான்வழி சேவை, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும்  தென்கிழக்கு நாடுகளின் எஞ்சியப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். இந்த  விமான நிலையத்தின் மூலம் சுற்றுலாத்துறை இதற்கு முன்பு இல்லாத வகையில் மேம்பாடு அடையும் எனவும் குறிப்பிட்டார். 


இதைத் தொடர்ந்து வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முனையத்திற்கான கட்டுமானப்பணிகளை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  ரூ. 700 கோடி செலவில்  கட்டப்பட்டு வரும் இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 40 லட்சம் விமானப்பயணிகளை கையாளும் திறன்படைத்தது. 


பின்னர் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசின் நலத்திட்டப் பயனாளிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்துரையாடினார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !