நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவித்த தாய்மார்கள் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

Madurai Minutes
0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவ மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பொது மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கிடும் நோக்கில் பல்வேறு திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 


தமிழ்நாடு மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,127 சுகாதார நிலையங்கள் உள்ளன. அதேபோல துணை சுகாதார நிலையங்கள் 8,714 உள்ளன. வட்டார மருத்துவ மனைகள், வட்டம் சாராத மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகள் உள்ளன. மேலும், தமிழ்நாடு மாநில அளவில் கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகர்ப்புறத்தில் 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  இவற்றில் 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. 


மதுரை மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, ஊட்டசத்து, குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகக்கவனத்துடனும், பாதுகாப்பாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசின் பேறுகால முன்கவனிப்பு திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பல்வேறு பேறுகால ஆலோசனைகள் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன் பலனாக ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 முதல் 80 பிரசவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது சராசரியாக 120 பிரசவங்கள் என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளது. தாய்மார்களுக்கு நம்பிக்கை அளித்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையை குறிப்பிட தகுந்த அளவு அதிகரித்து உள்ளது பெருமையாகும். 


தற்போது மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு பேறுகால வசதிகள் மேற்கொள்ள தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் மூலம் நிதியுதவி பெறப்பட்டு மாநகராட்சியின் மேலும் 6 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டு மகப்பேறு மருத்துவம் மேற்கொள்வதற்கு  தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்டிடங்கள்  23.06.2023 அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது அரசு மருத்துவமனைக்கு செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள். புதிய கூடுதல் கட்டிடங்கள் திறக்கப்பட்டு 10 நாட்களுக்குள் இரண்டு மருத்துவமனைகளில் பேறுகால மருத்துவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்  திருமதி.வெண்ணிலா  க/பெ  திரு.ஜோதி அவர்கள் பேட்டி அளித்ததாவது


 
 எனது பெயர் திருமதி.வெண்ணிலா எனது கணவர்  பெயர்  திரு.ஜோதி  வில்லாபுரம்  பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பி.இ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எனது குடும்பம் ஏழ்மையான குடும்பம் ஆகும். நான் முதன்முதலாக கருவுற்று அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு பரிசோதனை மேற்கொண்டு வந்தேன். எனது அம்மாவின் வீடு வில்லாபுரம் பகுதியில் உள்ளது. 


எனவே நான் அவனியாபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது வெகு தூரமாக இருந்தது. எனது தாய் வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு குழந்தை பிரசவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக எனது மருத்துவமனையின் நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் உறவினர்களும், நண்பர்களும்,  தெரிவித்தார்கள். அதனால் நான் அங்கேயே சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்து சிகிச்சை மேற்கொண்டேன். நான் பிரசவத்திற்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட இ.சி.ஜி., எக்கோ. மற்றும் இதர அறிக்கைகளை மருத்துவரிடம் காண்பித்தேன். மருத்துவர் என்னை முழு பரிசோதனை செய்து உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது என தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு முதல் பிரசவம் என்பதால் சற்று தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது அங்குள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்கள் நாங்கள் நல்லமுறையில் பார்த்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில் அங்கு தொடர்ந்து நான் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தேன், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டசத்து மருந்து பெட்டகங்களை வழங்கினார்கள். எனக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  மருத்துவர் குழுவின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தேன்.  


கடந்த 2.7.2023 அன்று எனக்கு பிரசவவலி ஏற்பட்டு உடனடியாக வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன்.  அன்று இரவு 11 மணிக்கு எனக்கு சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. மேலும் எனது குழந்தை சரியான எடை அளவில் பிறந்தது.  தற்போது நானும் எனது குழந்தையும் மிக நன்றாக உள்ளோம்.  எனது குழந்தைக்கு தேவையான தடுப்பூசிகளை உடனுக்குடன் மருத்துவர் மற்றும் செவிலியர் வழங்கினார்கள். மருத்துவமனையில் உள்ள மருத்துவர், செவிலியர்கள் ஆகியோர் என்னை நன்றாக கவனித்து பார்த்து வந்தார்கள். எனக்கு நல்லமுறையில் பிரசவம் பார்த்த வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அம்பிகா, செவிலியர் பொற்செல்வி, மருத்துவ பணியாளர் மணிமேகலை ஆகியோர்களுக்கும் மற்றும் மதுரை மாநகராட்சிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்கு குழந்தை பிறந்தவுடன் மாண்புமிகு மேயர், ஆணையாளர் ஆகியோர் வந்து என்னை நேரில் வந்து பார்த்து எனக்கு தமிழக அரசால் வழங்கப்படும் தாய் சேய் நலப்பெட்டகத்தை  வழங்கி என்னையும், எனது குழந்தையும் நலம் விசாரித்தது மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆறுதலாகவும் இருந்தது எனவே அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  


நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய் திருமதி.ராஜேஸ்வரி க/பெ  திரு.முருகானந்தரம்  அவர்கள் பேட்டி அளித்ததாவது   

எனது பெயர் திருமதி.ராஜேஸ்வரி எனது கணவர் பெயர் திரு.முருகானந்தம் தச்சு ஆசாரியாக பணிபுரிந்து வருகிறார். நான் முதன்முதலாக கருவுற்று உசிலம்பட்டியில் உள்ள எனது தாய் வீட்டில் முதல் பிரசவத்திற்காக சென்றேன். தாய் வீட்டிற்கு அருகில் உள்ள உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு  ஆண் குழந்தை அங்கு பிறந்தது. எனக்கு ஆண் குழந்தை பிறந்து சில ஆண்டுகள் ஆகி விட்டது.  


நான் இரண்டாவது முறையாக கருவுற்று இருந்தேன். எனது வீடு கோரிப்பாளையம் சோமசுந்தர வேளாளர் தெருவில் வசித்து வருகிறேன். எனது உறவினர் மற்றும் வார்டு உறுப்பினராக உள்ள திருமதி.உமா அவர்கள் மதுரை மாநகராட்சி நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு மகப்பேறு வசதிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதனால் மகப்பேறு மருத்துவ சிகிச்சையை இங்கேயே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் நரிமேடு மருத்துவமனையில்  மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மருந்துவமனையில் சிகிச்சை பெற வலியுறுத்தினார்கள்.  நான் எனது கணவர் மற்றும் குடும்பத்துடன் ஆலோசனை மேற்கொண்டு நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டாவது குழந்தைக்கு தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வந்தேன். தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டசத்து மருந்து பெட்டகங்களை வாங்கி பயன்படுத்தி  நல்ல ஆரோக்கிய நிலையில் இருந்து வந்தேன்.  எனக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தேன். 


கடந்த 5.7.2023 அன்று எனக்கு பிரசவவலி ஏற்பட்டு உடனடியாக நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு 6.7.2023 (வியாழக்கிழமை) அன்று எனக்கு சுகப்பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது. நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் லேக்கா ஜோதி, செவிலியர் முருகேஸ்வரி, மகேஷ்வரி, மருத்துவ பணியாளர் இந்திரா ஆகியோர் என்னை தங்கள் உறவினர்களை போன்று நன்றாக கவனித்து கொண்டனர்.  தற்போது நானும் எனது குழந்தையும் நலமுடன் இருக்கிறோம்.  நானும் எனது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம்.  இதுபோன்று எளிமை வாய்ந்த குடும்பத்தார்கள் மகப்பேறு கால பரிசோதனை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !