ஆம்பூரில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி

Madurai Minutes
0

மாணவர்கள் தங்களுக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் கூறியுள்ளார்.


ஆம்பூரில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய மூன்று நாள் கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய அவர் மத்திய மாநில அரசுகள் மாணவர்களின் நலனுக்கென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அந்த திட்டங்கள் பற்றி அறிந்து அவற்றின் பலன்களை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.


ஆம்பூரில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு வில்வநாதன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர்.


நிகழ்ச்சியில் பேசிய ஆம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு வில்வநாதன் மனித நடவடிக்கைகள்தான் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன என்றும் இந்த தருணத்திலேனும் நாம் நம் நடவடிக்கைகளைத் மாற்றி அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் கூறினார்.  இயற்கையை மாசு படுத்தாத வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய மத்திய மக்கள் தொடர்பக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  மண்டல இயக்குனர் திரு காமராஜ், மகப்பேறு, சுகாதாரம், தாய் சேய் நலன், மருத்துவ காப்பீடு, முதியோர் ஓய்வூதியம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக மத்திய மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். திட்டங்களைப் பற்றி அறிந்து இருந்தாலே மக்கள் அதன் பலன்களை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்தார்.


கண்காட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், அஞ்சல் துறை, முன்னோடி வங்கி உள்ளிட்ட பல துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


மூன்று நாட்களும் காலையிலும் மதியமும் பல தலைப்புகளில் கருத்தருங்குகள் நடத்தப்பட்டு மாணவ மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. சிறு தானிய உணவுத் திருவிழாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


விழாவில் முன்னரே நடத்தி முடிக்கப்பட்ட பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


வேலூர் மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் எஸ் முரளி முன்னதாக வரவேற்புரை ஆற்றினார்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை  மக்கள் தொடர்பக உதவி அலுவலர்கள் ஜெய்கணேஷ், வீரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !