11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகள்

Madurai Minutes
0

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் உலகனேரியில் உள்ள யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (26.07.2023) நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 22,794 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை  தொடங்கி வைத்தார்.


இவ்விழாவில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்ததாவது:-


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள  வசதி வாய்ப்பற்ற மாணவ, மாணவியர்கள் பெரும்பாண்மையாக அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். மாணவ, மாணவியர்களுக்கு தரமான கல்வி என்பது மிக அவசியம். கல்வியறிவு பெற்ற மாணவ, மாணவியர்கள் எந்தத் துறையானாலும் வெற்றி பெற்று சாதனையாளர்களாக திகழ்வர்.  இதற்கு மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதும், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதும் நமது கடமையாகும். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு இலவச  பேருந்து பயண அட்டை திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விலையில்லா சீருடை, பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


அதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 10,221 மாணவர்கள், 12,573 மாணவியர்கள் என மொத்தம் 22,794 குழந்தைகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.  யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிற அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. இப்பள்ளியில் மாணவியர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இன்று நடைபெறும் இவ்விழாவில் மட்டும் இப்பள்ளியில் பயிலும் 253 மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. இப்பள்ளியில் ஓரிரு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும் எனவும்,   கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் தேவை எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் ஆலோசித்து இக்கோரிக்கைகளை உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தெரிவித்தார்.


முன்னதாக, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் யா.ஒத்தக்கடை, திருமோகூர் சாலையில் அமைந்துள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் சிறப்பு முகாமை பார்வையிட்டார். மேலும், முகாமிற்கு வருகை தரும் மகளிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், முகாமில்  பெறப்படும் விண்ணப்பங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவு செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்த நிகழ்வுகளின் போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு முதன்மைச் செயலாளர் (பொதுப்பணித்துறை) டாக்டர்.பி.சந்திரமோகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப,, அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.செ.சரவணன், இ,ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.சூரியகலா கலாநிதி அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கார்த்திகா அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !