மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ராசிபுரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வசதியை தொடங்கி வைத்தார்

Madurai Minutes
0

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ரயில் நிலையத்தில், ராமேஸ்வரம்- ஓகா விரைவு ரயில் உள்ளிட்ட 4 வாராந்திர மற்றும் தினசரி ரயில்கள் நின்று செல்லும் வசதியை, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (6.7.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


அப்போது நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 9 ஆண்டுகளில் ரயில்வே துறை மாபெரும் வளர்ச்சி அடையச் செய்துள்ளது என்றார். மேலும், வெளிநாடுகளில் மட்டுமே பார்க்கப்பட்ட புல்லட் ரயில், விரைவில் மும்பை–அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது என்றும் கூறினார். இதேபோல் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம், பயண நேரம் வெகுவாக குறைந்துள்ளது என்று பேசினார்.


தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் ரயில்கள், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.


மேலும், ரயில்வே துறையில் தமிழ்நாட்டிற்கு 2009 இல் இருந்து 2014 ம் ஆண்டு வரை மிக சொற்பமான தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டது.  ஆனால் இந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 6000 கோடி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 


சென்ன எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட மத்திய அமைச்சர், இந்த நிதி ஆண்டில் புதிதாக 9 புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


மேலும், ராசிபுரம் ரயில் நிலையத்தில் சென்னை சென்ட்ரல் -  பாலக்காடு, நாகர்கோவில் – பெங்களூரு ஆகிய தினசரி ரயில்களும், வியாழக்கிழமை தோறும் இயங்கும் ஓகா - இராமேஸ்வரம், சனிக்கிழமை தோறும் இயங்கும் இராமேஸ்வரம்- ஓகா ரயில்களும் ஒரு நிமிடம் நின்று செல்லும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியிலுள்ள கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மேம்படுவதோடு இந்தப் பகுதியின் பொருளாதாரம் மேம்பட்டு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவித்தார்.


தொடர்ந்து “ஒரு நிலையம்-ஒரு தயாரிப்பு” விற்பனை மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. பங்கஜ் குமார் சின்ஹா, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஏ கே பி சின்ராஜ்,  கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. பி . சிவலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


முன்னதாக நாமக்கல் சென்ற மத்திய அமைச்சர் முருகனை அம்மாவட்ட ஆட்சியர்  டாக்டர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் திரு ச. ராஜேஷ் குமார் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !