கண்டறியப்படாத நோய் பாதிப்புகளின் சவாலை எதிர்கொள்வது நீரிழிவு சுமையைக் குறைக்க மிகவும் முக்கியமானது

Madurai Minutes
0

“இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்களை நீரிழிவு நோய் பாதித்துள்ளது. இருப்பினும், நாட்டில் 50% -க்கும் அதிகமான நோய் பாதிப்புகள் கண்டறியப்படாமல் உள்ள நிலையானது நீரிழிவு நோய் சுமையைக் குறைப்பதில் மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, "நீரிழிவு நோய் பரிசோதனையின் வரம்பை விரிவுபடுத்துவது காலத்தின் தேவை” என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள் கூறினர். மேலும், "ஒவ்வொரு தனிநபரும், குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மரபணு ரீதியாக இந்த நோய் வர வாய்ப்பு உள்ளவர்கள் அல்லது உடல் பருமன் உள்ளவர்கள், அவர்களின் அபாயங்களைப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதன் மூலமாகவே இதுதொடர்பான முன்னேற்றம் சாத்தியமாகும் என்றும் தெரிவித்துள்ளனர். 


ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறுகையில், “இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நீரிழிவு நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவம் மற்றும் கவனிப்பு கிடைப்பதை உறுதி செய்வதும் சமமான முக்கியத்துவம் உடையது என்றும், இதன்மூலம் அவர்களுக்கு நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இருதய, சிறுநீரக மற்றும் கண் நோய்கள் போன்ற பிற உடல்நலச் சிக்கல்களை உருவாவதைத் தவிர்க்கலாம்” என்றும் அவர்கள் கூறினர்.


MMHRC- இன் மருத்துவ நிர்வாகி டாக்டர் B.கண்ணன் தனது உரையில், “சீனாவுக்கு அடுத்தபடியாக, சர்க்கரை நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுவாக, ஒருவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் தோன்றும் மரபணு கோளாறான முதலாம் வகை நீரிழிவு நோய் (டைப் 1) போல் அல்லாமல், 90% க்கும் அதிகமான நோயாளிகள் இரண்டாம் வகை நீரிழிவு நோயைக் (டைப் 2)  கொண்டுள்ளனர், இது பெரும்பாலும் தவறான உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக காலப்போக்கில் உருவாகிறது. முறையான பரிசோதனை மற்றும் நோயினை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது நிர்வகிக்க உதவும். சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம் அல்லது அதன் தொடக்கத்தை தாமதப்படுத்தலாம்" என்று அவர் தெரிவித்தார்.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலையைப் பராமரிக்க தொடர் கவனிப்பும் ஆதரவும் தேவை என்று அவர் கூறினார். யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பெறக்கூடிய அறிவியல் பூர்வமில்லாத தகவல்களை கண்மூடித்தனமாக நம்புவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, தகுதியான மருத்துவர்களை அணுக வேண்டும். சிகிச்சை அளிக்கப்படாத அல்லது தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நீரிழிவு நோய் பாதிப்பானது கண் பார்வை பறிபோவது, சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கீழ் மூட்டு துண்டிக்கப்படுவது  போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


நீரிழிவு நோயைக் கண்டறிதல் பற்றிப் பேசுகையில், MMHRC - இன் நீரிழிவு துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். C.R. மகேஷ் பாபு கூறுகையில், "35 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை முக்கியமானது; ஆனால், பரம்பரையாக நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் (பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவருமே நோய் பாதிப்பு உள்ளவர்கள்), உடல் பருமனானவர்கள் (30 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ (BMI) கொண்டவர்கள்) மற்றும் இத்தகைய நோய் பாதிப்பிற்கு வாய்ப்புள்ள வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் வழக்கமாக பரிசோதனை செய்து கொள்வது முக்கியமானது. நீரிழிவு நோயை முழுமையாக மதிப்பிடுவதற்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு முன்  (Fasting), இரத்தத்தில் சர்க்கரையின் அளவு- உணவுக்கு பின் (Post Prandial) மற்றும் ஹீமோகுளோபின் A1c நிலை பரிசோதனை ஆகிய மூன்று வகையான இரத்த பரிசோதனைகள் முக்கியம்." என்று தெரிவித்தார். 


மேலும் அவர் கூறுகையில், "நோய் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது முக்கியம். ஆனால், இது ஒரு கூட்டுப் பொறுப்பு.  அரசு அல்லது தனியார் துறை அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மட்டும் சார்ந்தது அல்ல. தொற்றல்லாத நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக ஆரம்ப சுகாதார நிலைய அளவில் அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சுகாதார நிறுவனங்கள் நோயாளிகளின் நோய்களைப் பொருட்படுத்தாமல், அவர்களுக்கு நீரிழிவு பரிசோதனையை பரிந்துரைக்கின்றன. அரசுசாரா நிறுவனங்கள் நீரிழிவு நோய் கண்டறியும் முகாம்களை நடத்தி வருகின்றன. ஆனால், மக்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனைகள் செய்துகொள்ள முன்வர வேண்டும். இன்று, சோதனைகள் மிகவும் மலிவு விலையில் உள்ளன. மேற்குறிப்பிட்ட மூன்று சோதனைகளுக்கும் ரூ. 300-க்கு குறைவாகவே செலவாகும். மேலும் சிறிய நகர ஆய்வகங்களில் கூட இந்த சோதனைகள் செய்யப்படுகின்றன." என்று கூறினார்.


MMHRC - இன் பொது மருத்துவத் துறையின் முதுநிலை நிபுணர் மற்றும் துறைத் தலைவர் மருத்துவர் P. கிருஷ்ணமூர்த்தி நோய் தடுப்பு பராமரிப்பு பற்றி பேசுகையில், "மக்கள் இளமையாக இருக்கும்போதே சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும். குறைந்தது 45 நிமிடங்களாவது நீச்சல், ஜாகிங் அல்லது நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் செய்வது முக்கியம். யோகா மற்றும் தியான பயிற்சி செய்வது மிக ஆபத்தான நோய் காரணியாக இருக்கக் கூடிய மன அழுத்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோய் ஆபத்தில் உள்ள மக்கள் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளப் பழகுவது நல்லது. சமச்சீர் உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவரின் ஆலோசனைகள் மூலம் நீரிழிவு நோயை எந்த நிலையிலும் நிர்வகிக்க முடியும்." என்று அவர் தெரிவித்தார். 


மீனாட்சி மிஷன் மருத்துவமனை "நீரிழிவு சிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் - நடவடிக்கைக்கான தேவை" - என்னும் ஒரு விரிவான ஆய்வின் கீழ் நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கான பரவலான முறைகள் மற்றும் மேலாண்மைக்கான சமீபத்திய தொழில்நுட்பங்கள் & சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் அதே சமயம், நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்களின் மதிப்பீடு மற்றும் சிகிச்சையினையும் அறிமுகப்படுத்துகிறது. இங்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனி கவனத்துடன் கூடிய சிகிச்சை அளிக்கப்படுகிறது, இது பாத நல மருத்துவர்கள், காயப் பராமரிப்பு நிபுணர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், உடல் சிகிச்சை நிபுணர்கள், உணவியல் நிபுணர்கள், கண் மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் உட்பட பல நிபுணர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. நரம்பியல், கண் சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை மற்றும் இருதய பிரச்சினைகள் போன்ற நீரிழிவு தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கான சிகிச்சை மற்றும் மேலாண்மைக்கான பிரத்யேக குழு மற்றும் வசதிகளை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !