மாணவப் பருவத்தில் திருக்குறளைப் படித்தால், நல்ல குணங்கள் உருவாகும்

Madurai Minutes
0

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், மாநிலம் முழுவதும் திருக்குறள் போட்டிகளை மொத்தம் 12 மண்டலங்களில் நடத்தி வருகிறது. அண்மையில் மதுரை மண்டலத்தில், மதுரைக் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி - கல்லூரிகளைச் சேர்ந்த 320 மாணவர்கள் கலந்து கொண்டனர். 


வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, சிறப்புரை ஆற்றிய மதுரை மாநகரக் காவல் துறை துணை ஆணையர் மங்களேஸ்வரன் தமது உரையில், "பணத்தை இழந்தால் பெரிய இழப்பு ஒன்றும் ஏற்படாது. ஆரோக்கியத்தை இழந்தால் ஓரளவு இழப்பு ஏற்பட்டதற்கு சமம். குணங்களை இழந்து விட்டால் எல்லாவற்றையும் இழந்ததற்கு சமம் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் மாணவர்களுக்கு நல்ல குணங்கள் மிக முக்கியம். நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் நல்ல குணங்களைப் பெறுவதற்காக நீதி நூல்களைப் படித்தோம். தற்போது மாணவர்களாகிய நீங்களும் திருக்குறளைப் படித்தால் நல்ல குணங்கள் உருவாகும். இது போன்ற போட்டிகளில் பங்கேற்கும் போது உங்களுக்கு வெற்றி கிடைத்தால் பாராட்டுக்குரியது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்படத் தேவையில்லை. இதை ஒரு நல்ல பயிற்சிக் களமாகக் கருதிக் கொள்ளுங்கள்"  என்றார்.


இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் சிட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதுரைக் கிளை மேலாளர்கள் ராமச்சந்திரன், சந்தோஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில், மொத்தம் 97 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இதில் இடைநிலைப் பிரிவில் (6, 7, 8 ஆம் வகுப்புகள்) 53 மாணவர்களும், மேல்நிலைப் பிரிவில் (9, 10, 11, 12 ஆம் வகுப்புகள்) 39 மாணவர்களும், கல்லூரிப் பிரிவில் 5 மாணவர்களும் அடங்குவர். இப்போட்டியில் கீழ்க்காணும் மூன்று பேர், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளனர்.


  • இடைநிலைப் பிரிவு: ரா. சௌம்யா, வெங்கிடசாமி நாயுடு நடுநிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிப்புத்தூர். 
  • மேல்நிலைப் பிரிவு: மொ.கா. காவ்ய பிரியா, ஸ்ரீ சுந்தரேஸ்வர வித்யா சாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேலூர். 
  • கல்லூரிப் பிரிவு: மு. மணிவாசகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை


பேச்சுப் போட்டி தவிர மண்டல அளவிலான கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளும் நடத்தப்பட்டன. கட்டுரைப் போட்டியில் மொத்தம் 78 மாணவர்களும், ஓவியப் போட்டியில் மொத்தம் 145 மாணவர்களும் கலந்து கொண்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !