மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பிரிந்துவிட்ட உச்சந்தலையை மீண்டும் பொருத்துவதற்கு அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி

Madurai Minutes
0

ஒரு உற்பத்தி தொழிலகத்தில் நிகழ்ந்த விபத்தில் 30 வயதான பெண் பணியாளரின் உச்சந்தலை (Scalp) தனியாக பிரிந்து வந்துவிட்டதால், ஒட்டுமொத்த மண்டையோடும், முன்னந்தலையும், இடது காதின் மூன்றில் இரண்டு பகுதியும் வெளியே தெரிந்த நிலையில் அதை சரி செய்வதற்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 7 மணி நேர அவசரநிலை பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.  சேதமடைந்த இரத்தக்குழாய்கள் மற்றும் தலைமுடி போன்ற மெல்லிய நுண்குழல்களை விரைவாக அடையாளம் காண்பதும்  இரத்தஓட்டத்தை மீண்டும் கொண்டுவர அவைகளை இணைப்பதுமே இந்த சிக்கலான அறுவைசிகிச்சையில் முக்கிய சவாலாக இருந்தது.  


நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சிக்கலான அறுவைசிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் கழித்து மறுபடியும் பொருத்தப்பட்ட உச்சந்தலையின் (Scalp) ஒரு பகுதியில் இரத்தஓட்டம் உகந்த அளவுக்கும் குறைவாக இருந்ததது கண்டறியப்பட்டதால், microvascular anastomosis என அழைக்கப்படும் மருத்துவ செயல்முறையை மருத்துவர் குழு திரும்பவும் செய்ய வேண்டியிருந்தது.  மதுரையில் ஒரு எளிய குடும்ப பின்னணியைச் சேர்ந்த இப்பெண்மணிக்கு உரிய நேரத்தில் செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சைகள், விபத்தின் காரணமாக சிதைவுற்றிருந்த தலை மற்றும் முக பகுதிகளை சீர்செய்திருக்கிறது.  இந்த அறுவைசிகிச்சைகளை உடனடியாக செய்திருக்காவிட்டால், அவரது வாழ்நாள் முழுவதும் இந்த கோரமான தோற்றத்துடனே அவர் வாழ்ந்திருக்க வேண்டியிருக்கும்.  


இத்தகைய சிகிச்சைக்கு உரிய காலஅளவான கோல்டன் ஹவர் (6 மணி நேரங்கள்) என்பதையும் கடந்து, இந்நோயாளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதிலும், டாக்டர். பினிட்டா ஜெனா, பிளாஸ்டிக் சர்ஜரி  துறையின் தலைவர்  மற்றும் டாக்டர். பவ்யா மனோஷிலா ஆகியோர் தலைமையிலான அறுவைசிகிச்சை நிபுணர்களது குழு, கிழிக்கப்பட்டிருந்த உச்சந்தலையை (Scalp) வெற்றிகரமாக மீண்டும் பதிய வைத்து, சரியாக பொருத்தியிருக்கிறது.  2023 டிசம்பர், 6 ஆம் தேதியன்று செய்யப்பட்ட இந்த அறுவைசிகிச்சைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு இந்நோயாளி படிப்படியாக உடல்நலம் தேறி குணமடைந்தார்.  மீண்டும் ஒட்ட வைக்கப்பட்ட அவரது தலையில் முடி வளர்ச்சிக்கான அறிகுறிகள் தோன்றின.  அதைத் தொடர்ந்து, நலமுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இப்போது, அவரது வழக்கமான வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்.  


உச்சந்தலையில் (Scalp) சருமம் மட்டுமின்றி, சருமத்திற்கு கீழே உள்ள திசு போன்ற பல அடுக்குகளும் மற்றும் சிறு இரத்தநாளங்களின் நுட்பமான வலைப்பின்னலும் இருக்கின்றன.  இது கண் புருவப் பகுதியிலுள்ள முன்னந்தலை பகுதி வரை தொடர்கிறது; இதுவே, முக உணர்வுகளை வெளிப்படுத்த தசைகளை ஏதுவாக்குகிறது. மறுபதிய அறுவைசிகிச்சையின் இலக்கு என்பது, இரத்தஓட்டத்தையும், நரம்புகளின் இயக்கத்தையும் மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் துண்டிக்கப்பட்ட அல்லது பிரிந்து வந்துவிட்ட உடல்பகுதியின் ஒட்டுமொத்த இயங்குதிறனை சீர்செய்வது என்பதே.  


இதுகுறித்துப் பேசிய மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி  டாக்டர். B. கண்ணன்,  “உச்சந்தலையில் (Scalp) ஏற்பட்ட கிழிசலின் தீவிரத்தன்மை இதனை ஒரு அரிதான நேர்வாக ஆக்கியிருந்தது.  அத்துடன், சிகிச்சைக்கு உரிய நேரத்தைக் கடந்து, இம்மருத்துவமனைக்கு காயமடைந்த நோயாளி அழைத்து வரப்பட்டிருந்தார்.  அதுமட்டுமல்லாமல், கிழிந்திருந்த உச்சந்தலைப் பகுதி ((Scalp) மருத்துவ குழுவினரிடம் ஒப்படைக்கப்படும் வரை முறையாக பாதுகாக்கப்படாத நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது.  இவையெல்லாம் ஒருங்கிணைந்து, அறுவைசிகிச்சை நிபுணர்களது குழுவிற்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்தியிருந்தன.  எனினும், இப்பிரச்சனைகளையும் மீறி மருத்துவ நிபுணர்கள் சிறப்பாக செயல்பட்டு, இந்நோயாளிக்கு நிரந்தர தீர்வை வழங்கியிருக்கின்றனர்.  பணியிடத்தில் பாதுகாப்பு வழிகாட்டல்கள் முறையாக அமல்படுத்தப்பட்டு, அவைகளை சரியாக பின்பற்ற பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டிருக்குமானால், இத்தகைய எதிர்பாராத, அரிதான விபத்துகள் நிகழாமல் தவிர்த்திருக்க முடியும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.  


இது தொடர்பாக டாக்டர் பினிட்டா ஜெனா கூறியதாவது: “மதுரையில், வண்டியூர் என்ற இடத்தைச் சேர்ந்த இப்பெண், நட்டுகள் மற்றும் போல்ட்டுகளை தயாரிக்கின்ற ஒரு உற்பத்தி தொழிலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  விபத்து நடந்த நாளன்று, உற்பத்தி பிரிவில் பணியிலிருந்த போது சுழலும் இயந்திரப் பகுதியில் இவரது தலைமுடி எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டது.  அடுத்த கணமே அவரது உச்சந்தலையானது (Scalp) தலைப்பகுதியிலிருந்து மிக வேகமாக பிரிந்து வந்துவிட்டது.  இந்த கிழிசல் எந்த அளவிற்கு மோசமானதாக இருந்ததென்றால், அவரது ஒட்டுமொத்த  மண்டையோடு, முன்னந்தலை மற்றும் அவரது இடது காதின் மூன்றில் இரு பகுதி முழுமையாக வெளியில் தெரிந்தது.  விபத்து நடந்ததிலிருந்து 6 மணி நேரங்களுக்குப் பிறகே இப்பெண் நோயாளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.  இந்நோயாளிக்கு வேறு ஏதேனும் காயங்கள், அதுவும் குறிப்பாக கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் எதுவும் ஏற்பட்டிருந்ததா என்று நாங்கள் பரிசோதிக்க வேண்டியிருந்தது.  அத்தகைய காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், உடனடியாக அறுவைசிகிச்சையை நாங்கள் மேற்கொண்டோம்.  ஒரு மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்தி துண்டிக்கப்பட்ட இரத்தக்குழாய்களையும், நாளங்களையும் எங்களால் அடையாளம் காண முடிந்தது.  அதைத் தொடர்ந்து இரத்தஓட்டத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்காக அவைகளை நாங்கள் இணைத்தோம்.” 


மீண்டும் பதிய வைக்கப்பட்ட உச்சந்தலையில் (Scalp) இரத்தஓட்ட தேக்கத்தின் காரணமாக, இரண்டாவது அறுவைசிகிச்சையை செய்வது இந்நோயாளிக்கு அவசியமாக இருந்தது.  “இந்த அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக படிப்படியாக உடல்நலம் தேறிய இந்நோயாளி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அந்நேரத்திலேயே அவரது தலைமுடி வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்பட்டன.  முழு உடல்நலத்தை நோக்கிய முன்னேற்றத்தை கண்காணிக்கவும் , வாய்ப்பிருக்கின்ற சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும், உடல்நலத்தைப் பேண அவசியமான வழிகாட்டலை வழங்கவும் குறித்த கால அளவுகளில் மருத்துவர்களை இந்நோயாளி சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியமாக இருக்கும்.” என்று டாக்டர். பினிட்டா ஜெனா மேலும் கூறினார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !