கிராமப்புற வங்கிகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை மத்திய கூட்டுறவு அமைச்சர் தொடங்கி வைத்தார்

Madurai Minutes
0

மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, 13 மாநிலங்களில் இயங்கி வரும் விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகளுக்கு (ARDBs) ரூ.120 கோடியில் கணினிமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார், இது விரைவான கடன் அனுமதி மற்றும் கோடிக்கணக்கான  விவசாயிகளுக்கு கிராமப்புற கடன் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த முயற்சியானது 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகளை (ARDB) பொது தேசிய மென்பொருள் மூலம் நபார்டு வங்கியுடன் (NABARD) உடன் இணைக்கும்.


புது தில்லியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (ARDB) கிளைகளை கணினிமயமாக்குவதன் மூலம் அவற்றுடன் தொடர்புடைய 1.2 கோடி விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என்றார்.


மேலும், இந்த திட்டம் பரிவர்த்தனை செலவுகளை குறைக்கவும், விவசாயிகளுக்கு கடன் விநியோகத்தை எளிதாக்கவும், மேலும் திட்டங்களை சிறப்பாக கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் நிகழ்நேர தரவு அணுகலை செயல்படுத்கவும் வகைசெய்யும் என்று அமித் ஷா கூறினார். மேலும், மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ், டிஜிட்டல் முறையில் கிராமங்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது என்றார் .


தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், மாநிலங்களின் கூட்டுறவு சங்கப் பதிவாளர் அலுவலகங்கள், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றில் தொடங்கி ஒட்டுமொத்த கூட்டுறவு அமைப்பையும் பிரதமர் நரேந்திர மோடி நவீனப்படுத்தியுள்ளார்.


இந்த இரண்டு திட்டங்களுக்கும் தோராயமாக ரூ.225 கோடி செலவாகும் என்றும், இதில் ரூ.120 கோடி ஏஆர்டிபிகளுக்கும், ரூ.95 கோடி மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகங்களுக்கும் செலவிடப்படும் என்றும் கூட்டுறவு அமைச்சர் கூறினார்.


இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்றும், நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்களை எதிர்பார்க்கும் விவசாயிகளுக்கு ஒரு வசதியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.


கடந்த இரண்டு ஆண்டுகளில், கூட்டுறவுத் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்த மோடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.


கூட்டுறவு அமைச்சகம் உருவானவுடன், முதலில் 65,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், மத்திய கூட்டுறவுப் பதிவாளர் மற்றும் அதன்பின்னர், கூட்டுறவுத்துறையில் டிஜிட்டல் சூழலை மேம்படுத்த மோடி அரசு தொலைநோக்குப் பார்வையுடன் படிப்படியாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். அனைத்து மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளுடன் தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டன. இதற்குப் பிறகு, தேசிய கூட்டுறவு தரவுத்தளம் உருவாக்கப்பட்டது, இப்போது விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் (ARDB) மற்றும் மாநில கூட்டுறவு பதிவாளர் அலுவலகங்களின் கணினிமயமாக்கலுடன், ஒட்டுமொத்த கூட்டுறவுத் துறையும் இன்று டிஜிட்டல் உலகில் நுழைகிறது.


65,000 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களை கணினிமயமாக்குவதற்கான நவீன மற்றும் பயன்பாட்டுக்கு எளிதான மென்பொருள், நபார்டு வங்கி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இனி அனைத்து தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களும் அதனுடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


இதேபோல், மத்தியப் பதிவாளர் அலுவலகத்தின் கணினிமயமாக்கும் பணியும் முடிவடைந்துள்ளதாகவும், இதனால் இந்த அலுவலகத்தின் அனைத்துப் பணிகளையும் ஒரே மென்பொருள்  மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.


தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின் மூலம், மாநிலம், தாலுகா, மாவட்டம் மற்றும் கிராம அளவில் கூட்டுறவுகள் பற்றிய துல்லியமான தகவல்கள் அறியப்படும், இதனால் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சிக்கு ஒரு கட்டமைப்பைத் உருவாக்க முடியும் என்று ஷா கூறினார். 


கூட்டுறவு அமைச்சகத்தின் இந்த டிஜிட்டல்மயமாக்கல் முயற்சி, பொதுக் கணக்கு அமைப்பு (CAS) மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) போன்றவற்றின் மூலமாக விவசாய மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகளின் செயல்பாடுகள், செயல்திறன், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !